கொலைகாரான இலங்கைக்கு சாதகமாகவே இப்போதும் இந்தியா நடந்துள்ளது. முன்பு தமிழனுக்கு எதிராக நின்று கெடுத்த இந்திய அரசு, இப்போது ஆதரவாக நின்று கெடுத்துள்ளது. இலங்கை அரசின் போருக்கு அனைத்து உதவிகளையும் செய்து துணை நின்ற மத்திய காங்கிரஸ் அரசு, அந்தப் படுகொலையில் தன் பங்கை மறைக்க அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார் நாம் தமிழர் தலைவர் சீமான்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையை ஆதாரத்துடன் மெய்பிக்க வாய்ப்பளிக்கும் ஒரு நியாயமான விசாரணைக்கு வழிவகுக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு சாதகமான இரண்டு திருத்தங்களைச் செய்துள்ள இந்திய அரசு, அதன் மூலம் நேர்மையான விசாரணைக்கு முட்டுக்கட்டையை உருவாக்கி உள்ளது.
தீர்மானத்தின் 3-வது பிரிவில், பன்னாட்டு மனிதா பிமானச் சட்டங்களின் கீழ் நடத்தப்பட வேண்டிய விசாரணையில் ஐ.நா.மனித உரிமை மன்றத்தின் ஆலோசனையையும், விசாரணையை மேற்கொள்வது தொடர்பான சட்ட ரீதியான தொழில் நுட்ப உதவிகளையும் இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருந்தது.
இதனை, இலங்கை அரசுடன் ஆலோசனை நடத்தி அதன் ஒப்புதலைப் பெற்று நிறை வேற்றவேண்டும் என்று இந்தியா திருத்தம் செய்துள்ளது. இது கொலைக்காரனின் ஆலோசனையுடன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.
இது மட்டுமின்றி, விசாரணைத் தொடர்பாகவும், அங்கு போரினால் அனைத்தையும் இழந்த தமிழ் மக்களுக்கு செய்யப்படும் மனிதா பிமான நடவடிக்கைகளையும் ஆராய வரும் ஐ.நா. குழுவினர் இலங்கை அரசின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அந்நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றும் இந்திய அரசு வலியுறுத்தி, ஏற்றுக் கொள்ளச் செய்துள்ளது.
இது விசாரணை சரியான திசையில் முன்னெடுக்காமல் தடுக்கும் திட்டமிட்ட சூழ்ச்சியாகும். 21.2 ஆண்டுகாலப் போரில் ஒன்றே முக்கால் லட்சம் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசை இறையாண்மைக் காரணம் காட்டி காப்பாற்ற முயல்வது ஈழத்தமிழினத்திற்குச் செய்யும் அப்பட்டமான துரோகமாகும்.
இதுநாள் வரை தமிழனுக்கு எதிராக செயல்பட்டுக் கெடுத்த இந்திய அரசு, இப்போது ஆதரவாக நின்று கெடுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தீர்மானமே மிக மென்மையானது. அதனையும் முடக்கும் வேலையை இந்த திருத்தங்களின் மூலம் இந்திய அரசு செய்துள்ளது.
இலங்கை அரசின் போருக்கு அனைத்து உதவிகளையும் செய்து துணை நின்ற மத்திய காங்கிரஸ் அரசு, அந்தப் படுகொலையில் தன் பங்கை மறைக்கவே விசாரணைக்கு இப்படிப்பட்ட முட்டுக்கட்டைகளை போட்டிருக்கிறது. இதையும் தாண்டி, தீர்மானத்தை செயல்படுத்தி, வஞ்சனையால் வீழ்த்தப்பட்ட தமிழினத்திற்கு நியாயம் கிட்ட, தமிழர்கள் ஒன்றிணைந்து போராடுவோம் என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment