2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கினை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. கட்சி தலைவர் மு.கருணாநிதியின் மகளும் அக்கட்சி எம்.பி.யுமான கனிமொழி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் ஆ.ராசா மற்றும் அவரது உதவியாளர் தவிர மற்றவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இவர்கள் அனைவரும் டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகி வருகின்றனர்.
கலைஞர் தொலைக்காட்சி சார்பாக ஆ.ராசாவுக்கு ரூ. 214 கோடி கொடுத்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து அத்தொலைக்காட்சியின் முக்கிய பங்குதாரரான கனிமொழி மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஸ்வான் தொலைத்தொடர்பு நிறுவனம் இந்த தொகையை கலைஞர் தொலைக்காட்சியின் மூலம் கொடுத்துள்ளது. அந்த தொகையை பெற்றுக்கொணட ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்துள்ளார் என சி.பி.ஐ. தெரிவித்தது.
இதுகுறித்து கனிமொழியின் வழக்கறிஞர் இன்று நீதிமன்றத்தில் வாதாடியபோது:-
கலைஞர் தொலைக்காட்சியின் ஒரு பங்குதாரராக மட்டுமே கனிமொழி உள்ளார். அதன் நிர்வாக முடிவுகளில் அவருக்கு பங்கு இல்லை. மேலும், கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த இந்த தொகை ஒரு கடனுதவி மட்டுமே. அந்த கடன் ஆ.ராசா கைதான பின்பு திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. எனவே இதில் சம்பந்தப்படாத கனிமொழியை இந்த வழக்கிலிருந்து விலக்க வேண்டும் என வாதாடியுள்ளார்.
No comments:
Post a Comment