ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் வங்கதேசத்தின் பேட்ஸ்மேனை, பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ரன் எடுக்கவிடாமல் தடுத்ததால், போட்டியின் முடிவே மாறிவிட்டதாக வங்கதேசம் கிரிக்கெட் அணி நிர்வாகம் புது சர்ச்சையை எழுப்பி உள்ளது.
வங்கதேசம் தலைநகர் டாக்காவில் ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. கடந்த 22ம் தேதி நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின.
முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வங்கதேசம் அணி கோப்பையை கைப்பற்றலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 237 ரன்களை சேஸ் செய்த வங்கதேசம் 2 ரன்களில் தோல்வி அடைந்தது.
விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் 2வதாக பேட்டிங் செய்த வங்கதேசம் அணிக்கு கடைசி ஓவரில் வெற்றி பெற 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் முதல் பந்தை மக்முதுல்லா சந்தித்து, முதல் ரன்னுக்கு வேகமாக ஓடினார். 2வது ரன் எடுக்க முயன்ற போது மக்முதுல்லா மீது பாகிஸ்தான் பந்துவீச்சாளர் அசிஸ் சீமா மோதினார். இதனால் 2வது ரன் எடுக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. அப்போது 2 நாட்டு வீரர்களை அழைத்த அம்பயர் ஏதோ பேசினார்.
இந்த நிலையில் வங்கதேசம் அணி 2 ரன்களில் போட்டியில் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர் திட்டமிட்டு 2வது ரன்னை தடுத்ததால் தான், இறுதிப் போட்டியின் முடிவு மாறியது என்று வங்கதேசம் கிரிக்கெட் வாரியம் தற்போது குற்றச்சாட்டி உள்ளது.
இது குறித்து வங்கதேசம் கிரிக்கெட் வாரியத் தலைவர் இனயத் ஹூசைன் சிராஜ் கூறியதாவது,
பாகிஸ்தான் பந்துவீச்சாளர் பேட்ஸ்மேனை ரன் எடுக்கவிடாமல் தடுத்த வீடியோ காட்சியை பலமுறை பார்த்தேன். அதில் பாகிஸ்தான் வீரர் அசிஸ் சீமா, பேட்ஸ்மேனை ரன் எடுக்கவிடாமல் மறித்து கொண்டு நிற்பது தெளிவாக தெரிகிறது. இது குறித்து ஆசிய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளித்துள்ளேன். புகாரின் நகலை சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு(ஐசிசி) அனுப்ப உள்ளேன் என்றார்.
ஐசிசி விதிகளின்படி பேட்ஸ்மேன் ரன் ஓடும் போது அவரை பந்துவீச்சாளரோ அல்லது பீல்டரோ வேண்டுமேன்றே குறுக்கிட்டு தடுப்பது உறுதி செய்யப்பட்டால், பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் கூடுதலாக வழங்க வேண்டும். எனவே வங்கதேசம் கூறும் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு இருந்தால், வங்கதேசம் போட்டியில் வெற்றிப் பெற்றிருக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment