இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சமநிலைப்படுத்துவதற்கு, எல்லா வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷேவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கைப் போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முறைப்படி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்துவது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட அமெரிக்காவின் தீர்மானம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நடந்த வாக்கெடுப்பில், இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளின் ஆதரவுடன் அந்தத் தீர்மானம் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், இலங்கைப் போருக்குப் பிறகு, நிவாரண நடவடிக்கைகளில் இந்தியா மேற்கொண்ட உதவிகள், அதிகாரப் பகிர்வு - அரசியல் தீர்வுக்கான வலியுறுத்தல்கள் முதலியவற்றை பிரதமர் மன்மோகன் சிங் நினைவூட்டியுள்ளார்.
இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, ராஜபக்ஷே அரசு நடைமுறைப்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக அவர் பாராட்டியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் தீர்மானம் குறித்து பிரதமர் தனது கடிதத்தில் குறிப்பிடுகையில், "ஜெனிவாவில் சாதகமான முன்னேற்றத்தை எட்டும் வகையில், இலங்கைப் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்துமாறு, இந்தியப் பிரதிநிதிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. எந்த முயற்சிகளையும் விட்டுவிடவில்லை. அதன் மூலம், தீர்மானத்தின் சாராம்சங்களை வெற்றிகரமாக சமநிலைப்படுத்தி இருக்கிறோம்," என்று கூறியுள்ளார்.
மேலும், "இலங்கையில் நிலையான, பாதுகாப்பான, அமைதியான சூழல் தொடரவும், அனைத்து சமூகத்தினரும் நல்லிணக்கத்தோடு வாழவும், இந்தியா - இலங்கை இடையிலான உறவை மென்மேலும் வலுப்படுத்துவோம்," என்று ராஜபக்ஷேவுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment