கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி தமக்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச் சுவர் என்றழைக்கப்படும் ராகுல் திராவிட் அண்மையில் ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து சச்சினும் ஓய்வு பெற வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்குப் பதிலளித்து சச்சின் கூறியுள்ளதாவது:
கிரிக்கெட் விமர்சகர்கள் சொல்வதைக் கேட்டு ஓய்வு பெற வேண்டிய அவசியம் இல்லை. கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடி வருகிறேன்.
களத்தில் இறங்கும் ஒவ்வொரு முறையும், முதல் முறையாக விளையாடப் போவது போன்ற உற்சாகத்துடனேயே செல்கிறேன். அந்த உற்சாகம் கொஞ்சம் குறைந்தாலும், உடனடியாக ஓய்வு பெற்று விடுவேன்.
உலக கோப்பையை வென்ற உடனேயே ஓய்வு பெற்றிருக்கலாமே என்கிறார்கள். அப்படி செய்திருந்தால், இந்தியா உலக கோப்பையை வென்றதை விட எனது ஓய்வு பற்றிதான் அதிகம் பேசி இருப்பார்கள்.
தனி ஒரு வீரரை விட, நாட்டுக்காக கோப்பை வென்றதுதான் அதிக முக்கியம் வாய்ந்தது. சரியான நேரம் வரும்போது எனது ஓய்வு முடிவை ஊடகங்களுக்குத் தெரிவிப்பேன் என்றார் சச்சின்.
No comments:
Post a Comment