தமிழ்நாட்டில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 170 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் தங்கத்துக்கு அடுத்தப்படியாக நிலத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்கத்தில் முதலீடு செய்யும் மக்கள் நிலத்திலும் அதிக அளவு முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். 40 ஆண்டுகளுக்கு முன் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் விலைபோன நிலம் இன்று கோடிக்கணக்கில் உயர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் கொடிக்கட்டி பறக்கிறது.
நிலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு விற்கப்பட்டு பதிவு செய்யும் போது அரசுக்கு முத்திரை தாள் கட்டணம் செலுத்த வேண்டும். விவசாய நிலம் மற்றும் வீட்டுமனை நிலங்களுக்கு அரசு வழிகாட்டி மதிப்பு வெளியிட்டு வருகிறது.
நிலங்களின் விலை உயரும் போது அதற்கு ஏற்ப வழி காட்டி மதிப்பை உயர்த்தி வருகிறது. முத்திரை தாள் கட்டண செலவை குறைப்பதற்காக நிலம் விற்போர்-வாங்குவோர் நிலத்தின் மதிப்பை குறைத்து போட்டு அதற்கு ஏற்றபடி முத்திரை தாள் கட்டணம் செலுத்துகிறார்கள். இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
வெளிச்சந்தையில் நிலத்தின் மதிப்பு தாறுமாறாக இருந்தபோதிலும் வழிகாட்டி மதிப்பு என்பது பல ஆண்டுகளாக மிக மிக குறைவாக இருந்து வந்ததே இதற்கு காரணம்.
இதை தடுக்கவும், அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வகையிலும் புதிய நில வழிகாட்டி மதிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் விவசாய நிலங்களின் வழிகாட்டி மதிப்பு 270 சதவீதமும், வீட்டுமனை நில வழி காட்டி மதிப்பு 170 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
வணிக வரித்துறைக்கு அடுத்த படியாக அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் துறையாக பதிவுத்துறை உள்ளது. இதில் வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுக்க, வழி காட்டி மதிப்பை அதிகரிக்கும் முயற்சிகளை தமிழக அரசு கடந்த ஆண்டு மேற்கொண்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் பிரதான குழுவும், துணை குழுவும் அமைக்கப்பட்டு நில வழிகாட்டி மதிப்பு திருத்தி அமைக்கப்பட்டன.
புதிய நில வழிகாட்டி மதிப்பு இணைய தளத்திலும் (www.tnreginet.net) கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உயர்வு வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டி மதிப்பில் இருந்து 6 சதவீதம் முத்திரை தாள் கட்டணமாகவும், ஒரு சதவீதம் கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. இந்த வருவாய்தான் பதிவுத்துறைக்கு செல்கிறது. சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் உள்ள ஒவ்வொரு தெருவுக்கும் நில வழிகாட்டி மதிப்பு பற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பிரதான பகுதியில் உள்ள ஒரு தெருவில் 10 சதுர அடி நிலம் ரூ.12 ஆயிரம் எனவும், 1000 சதுர அடி நிலம் ரூ.12 லட்சம் என்றும் வழிகாட்டி மதிப்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையில் 6 சதவீதம் முத்திரை தாள் கட்டணமாகவும், ஒரு சதவீதம் கட்டண மாகவும் செலுத்தவேண்டும். நில வழிகாட்டி மதிப்பு குறித்த விவரங்கள் ஓரிரு நாட்கள் மட்டுமே இணைய தளத்தில் இருக்கும். புதிய வழிகாட்டி மதிப்பு அமலுக்கு வருவதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.600 கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும் என்று பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment