நந்தா படத்தில் நடிகர் கருணாஸ் ஒரு வீட்டில் பட்டப்பகலில் புகுந்து அனைத்து பொருட்களையும் சுருட்டி லாரியில் கொள்ளையடித்து செல்வது போல் நகைச்சுவை காட்சி இருக்கும்.
இதே போல் ஒரு சம்பவம் தாம்பரம் அருகே நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
தாம்பரத்தை அடுத்த புதுபெருங்களத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். துரைமுகத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் இறந்து விட்டார். 2 மகள்களும் திருமணமாகி சென்று விட்டதால் சசிகலா மட்டும் சொந்த வீட்டில் தனியாக இருந்தார்.
நேற்று காலை அவர் ராயப்பேட்டையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். இதனை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் 10 பேர் 2 லாரிகளில் சசிகலா வீட்டிற்கு வந்தனர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அனைத்து பொருட்களையும் லாரிகளில் ஏற்றினர்.
இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர். யார் நீங்கள்? எதற்காக பொருட்களை ஏற்றுகிறீர்கள் என்று கேட்டனர். அவர்கள் அம்மா வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு சென்று விட்டார். பொருட்களை எடுத்து வரச் சொல்லி உள்ளார் என்று தெரிவித்தார்கள். இதனால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு சந்தேகம் வரவில்லை.
துளியும் பதட்டபடாத மர்ம நபர்கள் சாவகாசமாக அமர்ந்து பீரோ, கட்டில், டி.வி., பிரிஜ், மோட்டார் சைக்கிள், பாத்திரங்கள் மளிகை பொருட்கள் உள்பட அனைத்தையும் சுருட்டி லாரியில் ஏற்றினர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.போகும் போது வீட்டிற்கு புது பூட்டு போட்டு சென்றனர். இரவு திரும்பி வந்த சசிகலா வீட்டில் புது பூட்டு கிடப்பதை கண்டு சந்தேகம் அடைந்தார். அதனை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது துடைத்து வைத்தாற் போல வீடு காலியாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அருகில் வசிப்பவர்களிடம் கேட்ட போது வீட்டை காலி செய்து விட்டதாக கூறி 10 பேர் பொருட்களை லாரியில் ஏற்றிச் சென்றதாக தெரிவித்தனர். மர்ம நபர்கள் கொண்டு சென்ற பீரோவில் 60 பவுன் நகை, 10 ஆயிரம் பணம் ரூ.1 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் இருந்தது. இதுகுறித்து அவர் பீர்க்கன்கரணை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மர்ம நபர்களை பார்த்தவர்கள் கூறிய அடையாளங்களை வைத்து அவர்களை பிடிக்க போலீசார் விரைந்தனர். இது தொடர்பாக போலீஸ் விசாரணை அதிகாரி கூறும் போது, சசிகலாவுக்கும், உறவினர்களும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பொருட்களை அள்ளிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம் என்றார்.
பட்டப் பகலில் மர்ம நபர்கள் வீட்டில் உள்ள பொருட்களை லாரியில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளை போன மொத்த பொருட்களின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும்.
No comments:
Post a Comment