முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், தொழில் அதிபருமான ராமஜெயம் நேற்று முன்தினம் கடத்தி கொலை செய்யப்பட்டார். ராமஜெயத்தை கடத்தி கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது மர்மமாக உள்ளது.
இந்த வழக்கில் துப்பு துலக்க மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படைபோலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமஜெயத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட மோதல், பணம் விவகாரம் அல்லது தனிப்பட்ட விவகாரத்தில் சிலர் கூலிப்படையை ஏவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.4 நில அபகரிப்பு வழக்கு ராமஜெயம் மீது நிலுவையில் உள்ளது.
திருச்சியில் 2006 நடந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கிலும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு ராமஜெயம் உட்படுத்தப்பட்டார். மேலும் சில விவகாரங்களால் ராமஜெயம் எதிரிகளை சம்பாதித்தார். இதனால் அவரை பழிவாங்க ஒரு கும்பல், சமயம் பார்த்து வந்தது.
கடந்த சில நாட்களாக அவரை கண்காணித்த கும்பல் நேற்று முன்தினம் தீர்த்து கட்டியுள்ளது. ராமஜெயத்திடம் சில மாதங்களாக தீவிரமாக மோதிய நபர்கள் யார்? யார்? என விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
தனக்கு உள்ள பிரச்சினைகள் பற்றி குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் ராமஜெயம் கூறியிருப்பார். எனவே ராமஜெயத்துக்கு தீவிர பிரச்சினை ஏற்படுத்திய விவகாரம் எது? அதன் பின்னணியில் உள்ள நபர் யார்? என்பதை கண்டுபிடிக்க அவரது மனைவி லதா, மகன் மற்றும் உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
கொலையாளிகள் செல்போனில் பேசிய கேர் கல்லூரி ஊழியர் கோபாலகிருஷ்ணன், உறவினர் அனுராதாவிடமும் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 2 நாட்கள் ஆகி உள்ள நிலையில் இன்று 3-வது நாள் காரியம் நடக்கிறது.
இந்த சோகத்தில் இருந்து அவரது குடும்பத்தினர் இன்னும் மீள வில்லை. எனவே இன்று மாலையில் அல்லது நாளை அவரது குடும்பத்தினரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். ராமஜெயம் எதிரிகள் குறித்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, சகோதரர்கள் மணிவண்ணன், ரவிசந்திரன் மற்றும் தொழில் நண்பர்களிடம் விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
ராமஜெயத்தை கொலை செய்த கூலிப்படையை பிடிக்கவும் தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த கொலையில் உள்ளூர் கூலிப்படையினரோடு, வெளிமாநில கூலிப்படையினரும் சேர்ந்து ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்து உள்ளது.
கூலிப்படையினர் பயன் படுத்திய கார் திருச்சி மாநகர போலீசார் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருக்கும். அந்த காரை கண்டுபிடித்து அதன் மூலம் கூலிப்படையை மடக்கி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் திருவாணைக்காவல், மாம்பழச்சாலை சிக்னல் காமிராவில் காலை 8 மணி முதல் 8.30 மணி வரை பதிவான கார் நெம்பர்களில் 3 கார்கள் போலீசாரின் சந்தேக வட்டத்துக்குள் வந்து உள்ளது. அந்த கார் நம்பர்கள் மூலம் கூலிப்படை பதுங்கி உள்ள இடம் பற்றி போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர். இதில் திடுக்கிடும் பல தகவல்கள் கிடைத்து உள்ளது.
தனிப்படை போலீசாரின் விசாரணை சூடு பிடித்து உள்ளதால் விரைவில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment