நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிலத்தை வாங்குவோர் அதற்கு பதிவு செய்ய அதிக கட்டணம் செலுத்த வேண்டி வருவதோடு, நிலத்தின் விலையும் உயரலாம்.
இன்று சட்டசபையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
வாகனங்கள் மீதான வரியை சீரமைக்கும் பொருட்டு சுற்றுலா பயண வாகனங்கள், மாக்சி வாகனங்கள், தனியார் சேவை வாகனங்கள், மாற்று பேருந்து வாகனங்கள், கட்டுமானம் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், பிற மாநில ஒப்பந்த வாகனங்கள் ஆகியவை மீதான வரிகள் சீரமைக்கப்படும் (அதாவது, வரிகள் உயரும்)
விருப்ப எண்களை பதிவு செய்வதற்கான கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்படும். இந்த மாற்றங்கள் இரு சக்கர வாகனங்களுக்கு பொருந்தாது.
சொத்துக்களின் சந்தை மதிப்பு (market value) கணிசமாக உயர்ந்துள்ள போதிலும் வழிகாட்டி மதிப்பு (government guidance value) இதற்கேற்றால் போல் உயர்த்தப்படாத காரணத்தினால் அரசின் வருவாயில் பெருமளவில் இழப்பு ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகளை அமல்படுத்தப்படும் (உயர்த்தப்படும்)
(அதாவது, நமது ஏரியாவில் ஒரு சதுர அடி நிலம் 3000 ரூபாய் என்று மார்க்கெட் ரேட்டும், அரசின் வழிகாட்டி மதிப்பு 600 ரூபாயாகவும் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தை சதுர அடி ரூ. 3000க்கு வாங்கினாலும் அரசின் வழிகாட்டி மதிப்பான 600 ரூபாய்க்குத் தான் ரிஜிஸ்டர் செய்கிறார்கள் மக்கள். இதன் மூலம் ஸ்டாம்ப் டூட்டியை குறைவாக செலுத்துகிறார்கள். இனி வழிகாட்டி மதிப்பே உயர்த்தப்பட்டால், ஸ்டாம்ப் டூட்டி அதிகரிக்கும். அது மட்டுமல்ல, அரசின் வழிகாட்டி மதிப்பே ரூ. 600க்கு மேல் உயர்த்தப்பட்டுவிட்டால், அந்த இடத்தின் மார்க்கெட் விலையையும் புரோக்கர்களும் நில முதலாளிகளும் உயர்த்தி விடுவார்கள் என்பதும் நிச்சயம். ஆக, மொத்தத்தில் இந்த பட்ஜெட் மூலம் நிலத்தின் விலை அதிகரிக்கப் போகிறது)
அதே சமயம் பொது மக்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு விற்பனை ஆவணங்கள் மற்றும் அதே நிலையில் முத்திரைத் தீர்வை (ஸ்டாம்ப் டூட்டி) விதிக்கப்படும் ஆவணங்களுக்கு தற்போது விதிக்கப்படும் 6 சதவீத முத்திரைத் தீர்வை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 5 சதவீதமாகக் குறைக்கப்படும்.
தற்போது உள்ளூர் திட்ட அமைப்புகள் மூலம் வசூலிக்கப்பட்டு வரும் கட்டமைப்பு மற்றும் அடிப்படைக் கட்டணம் தற்போதுள்ள கட்டண அளவில் 50 சதவீதம் உயர்த்தி நிர்ணயிக்கப்படும். கூடுதல் வருவாயைத் திரட்ட எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளின் காரணமாக மாநில அரசு சுமார் 1,500 கோடி ரூபாய் கூடுதலாக கிடைக்கும. இதன் மூலம், இந்த அரசு, மக்கள் நலத்திட்டங்களையும் வளர்ச்சித் திட்டங்களையும் நிதிப்பற்றாக்குறை ஏதுமின்றி சிறப்பாக செயல்படுத்த இயலும்.
No comments:
Post a Comment