ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்து, பின்னர் இந்தியாவின் தலையீட்டால் நீர்த்துப் போகச் செய்யப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது இந்தியாவின் ஆங்கில மீடியாக்களுக்குக் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
ஏதோ இலங்கையை, தமிழகத்தினர் அத்தனை பேரும் சேர்ந்து அழித்து விட்டது போலவும், தமிழகத்தின் நியாயமான போராட்டத்தால் இந்தியாவுக்கு பேராபத்து வந்து விட்டதைப் போலவும் இவர்கள் காட்டமாக தமிழக தலைவர்களையும், தமிழக கட்சிகளையும் விமர்சித்து எழுதி வருகின்றனர்.
எல்லாவற்றுக்கும் காரணம், தமிழக அரசியல் தலைவர்கள் குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி கொடுத்த அழுத்தம், நெருக்கடி மற்றும் மிரட்டல்தான் காரணம் என்றும் இவர்கள் புரியாமல் எழுதி வருகின்றனர்.
வழக்கமாகவே ஈழப் பிரச்சினை என்றாலே வட இந்திய மீடியாக்களுக்கு வேப்பங்காயாக கசப்பது தெரிந்த விஷயம்தான். இலங்கை அரசு, இலங்கை ராணுவம், இலங்கைத் தரப்புக்கு ஆதரவான கருத்துக்களையே தொடர்ந்து வட இந்திய மீ்டியாக்கள், குறிப்பாக ஆங்கில மீடியாக்கள் பிரசுரிப்பது, ஒளிபரப்புவது வழக்கம்.
இலங்கைப் பிரச்சினை என்னவென்றே அவர்களுக்கு முழுமையாக புரியாமல் போனதே இதற்குக் காரணம். இதனால்தான் ஆரம்பத்திலிருந்தே இந்தப் பிரச்சினையை அவர்கள் சரிவர அணுகவில்லை. இது வரலாற்று உண்மை. ஆனால் வட இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்தாலும், மிகுந்த ஞானத்துடனும், சமயோஜிதத்துடனும், தீர்க்கதரிசனத்துடனும ஈழப் பிரச்சினையை அணுகியவர் இந்திரா காந்தி என்பது ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்லால் அத்தனை பேருக்கும் தெரியும்.
இதனால்தான் இந்திரா காந்தியின் ஆசியோடு, எம்.ஜி.ஆர், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தார், பயிற்சியளித்தார், ஈழப் பிரச்சினையில் இந்த இரு தலைவர்களும், தமிழர்களுக்கு ஆதரவாக நின்றனர், தமிழர்களின் உணர்வுகளோடு கலந்திருந்தனர் - இருவருமே பிறப்பால் தமிழர்கள் இல்லை என்றாலும் கூட.
இன்று வரை ஈழப் பிரச்சினையை சரியாகப் புரிந்து கொண்ட இந்தியத் தலைவர்கள் யார் என்றால் இந்த இருவரை மட்டுமே தமிழர்களால் நினைத்துப் பார்க்க முடிகிறது. இவர்களுக்குப் பிறகு வந்த தலைவர்கள் சரியான கோணத்தில் சிந்திக்காமல் போனதாலும், சிந்திக்கத் தவறியதாலும்தான் ஈழப் பிரச்சினை வேறு வேறு ரூபத்தில் மாறிப் போய் இன்று ஒரு 'தீவிரவாத' இயக்கத்திடம் சிக்கி இலங்கை மீண்டுள்ளதாக ஒரு கருத்து வலுப்பட்டுப் போகக் காரணமாகி விட்டது. ஈழத்தில் நடந்தது ஒரு இனப் பிரச்சினை என்பது ஆங்கில மீடியாக்களுக்குப் புரிவதில்லை.
செர்பியா, போஸ்னியா, குர்து இன மோதல்கள், பாலஸ்தீன மோதல்கள், தைமூர் மோதல்கள் மட்டுமே அவர்களுக்கு இனப் பிரச்சினை. ஈழத்தில் நடந்தது 'தீவிரவாதப் போர்' என்பது அவர்களது கருத்து.
ஈழத் தமிழர்கள் என்றாலே அவர்கள் விடுதலைப் புலிகள் என்ற பார்வையுடன்தான் ஈழப் பிரச்சினையை பார்க்கின்றனரே தவிர மனிதாபிமான கண்ணோட்டத்துடன் பார்க்க அவர்கள் தவறி வருகின்றனர். ஈழத்தில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தின்போது கொடூரமாகக் கொல்லப்பட்ட சிறார்கள், பெண்கள், முதியோர்கள், ஊனமுற்றோர்கள், எந்த அளவுக்கு சித்திரவதையை அனுபவித்தார்கள், எப்படியெல்லாம் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானார்கள், எப்படியெல்லாம் கொடூரமாக கொல்லப்பட்டார்கள் என்பது குறித்து ஒரு சொட்டு கண்ணீரைக் கூட இந்த வட இந்திய மீடியாக்கள் சிந்தவில்லை - ஆனால் சானல் 4 தயாரித்த இலங்கையின் கொலைக்களம் வீடியோவைப் பார்த்து நானும் ஒரு சிங்களன் என்று கூறிக் கொள்ள வெட்கமாக, வேதனையாக உள்ளது என்று தனது மகன் கூறியதாக சொல்லி கண்ணீர் வடித்தார் சிங்களத்து சந்திரிகா குமாரதுங்கா.
அதாவது மனித நேயம், மனித உரிமை குறித்த அக்கறை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் இலங்கையில் நடந்த கொடூரம் குறித்து நிச்சயம் துடித்துப் போவார்கள். உணர்வு இருப்பவர்கள் அப்படித்தான் ரியாக்ட் செய்ய முடியும். சிங்களராகவே இருந்தாலும் கூட சந்திரிகா அதைத்தான் வெளிப்படுத்தினார், நாங்கள் செய்தது தவறு என்றார் வெளிப்படையாக.
ஆனால் எங்கேயோ சிரியாவில் நட்நத தாக்குதல்களைப் பற்றியும், இஸ்ரேல் அடுத்து என்ன செய்யப் போகிறது என்பது குறித்தும், ஈரானின் நிலை என்ன என்பது குறித்தும் மாய்ந்து மாய்ந்து செய்தி போட்டுத் தாளித்தெடுக்கும் ஆங்கில மீடியாக்களுக்கு, அவர்களுக்கு வெகு அருகே ஈழத்தில் நடந்து முடிந்த ஒரு மிகப் பெரிய இனப்படுகொலை குறித்து கவலைப்பட நேரமில்லை, அதுகுறித்து அவர்கள் அக்கறை காட்டக் கூட மறுக்கிறார்கள்.
ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை -இந்த தீர்மானமே ஒரு வலுவான, உருப்படியான தீர்மானம் இல்லை, அதையும் கூட இந்தியா கடைசி நேரத்தில் திருத்தம் செய்து நீர்த்துப் போகச் செய்து விட்டது - இந்தியா ஆதரிக்கக் கூடாது என்ற ரீதியில்தான் ஆங்கில மீடியாக்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன.
அதற்கு அவர்கள் சொன்ன காரணம், இலங்கையை நாம் பகைத்துக் கொண்டால் சீனாவுக்கு வசதியாகப் போய் விடும். அப்படி நடந்தால் இந்தியாவுக்குப் பேராபத்து என்ற ரீதியில் மறைமுகமாக மத்திய அரசை நெருக்கி வந்தன. ஆனால் ஈழப் படுகொலைகளுக்கு நிவாரணம் தேட வேண்டும், அதற்கான ஒரு வழி இப்போதாவது பிறந்திருக்கிறதே என்ற கவலை அவர்களுக்கு இல்லை.
இப்போது தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவைத் தெரிவித்து வாக்களித்ததை பெரும் எரிச்சலுடன் தங்களது செய்திகளில் காட்டி வருகின்றன ஆங்கில மீடியாக்கள். அதிலும் ஒரு இதழ், ஒரு படி மேலே போய், கருணாநிதி ஈழத் தமிழர்களைப் பிடித்த சாபம். இவரால்தான் இன்று சீனா, இந்தியாவுக்குப் பெரும் மிரட்டலாக உருவெடுக்கக் காரணம் என்று மி்கக் காட்டமாக சொல்லியுள்ளது.
இலங்கையை நாம் பகைத்துக் கொண்டால் சீனா வந்து விடும், பாகிஸ்தான் வந்து விடும் என்று ஆங்கில மீடியாக்கள் பதறுகின்றன, துடிக்கின்றன. நாம் இலங்கையை ஆதரித்தபோதும் கூட இதுதானே நடந்து வந்தது. ஹம்பந்தோட்டா மூ்லம் சீனா, இலங்கைக்குள் நுழையவில்லையா..?. கச்சத்தீவு அருகே போனாலே சுட்டுத் தள்ளுகிறார்களே, இந்திய மீனவர்களை -அதாவது தமிழக மீனவர்களை. அது நியாயம்தானா..?
கச்சத்தீவில் சீன ராணுவம் நடமாட்டம் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வருகிறதே, அதுகுறித்து நமது மீடியாக்களுக்குக் கவலை இல்லையா..? அது மட்டும் இந்தியாவுக்குப் பாதுகாப்பானதா...? ஈழத்தில் துடிக்கத் துடிக்க சிறார்கள் என்றும் கூட பாராமல் கொடூரமாக குருவியைச் சுடுவது போல சுட்டுக் கொன்ற செயல் எல்லாம் மறந்து விடக் கூடிய சாதாரண குற்றங்கள்தானா...?
ஈழத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதம் ஏந்தி தமிழர்கள் போராடிய காலத்தில் ஒரு சீனரையும் இலங்கையின் பக்கம் நம்மால் பார்க்க முடியவில்லை. இந்தியாவின் எதிரிகள் யாரும் அங்கு ஊடுறுவ முடியவில்லை. இந்தியா மிக மிக பத்திரமாகவே இருந்தது. இந்த உண்மையை ஆங்கில மீடியாக்கள் மறந்தது ஏன்...?
உண்மையிலேயே இந்தியாவை நம்பகமான நண்பனாக இலங்கை நினைத்திருந்தால், நிச்சயம் அது சீனாவின் பக்கமோ, பாகிஸ்தான் பக்கமோ போயிருக்காது. ஆனால் இந்தியாவை மிரட்டத்தான், இந்தியாவை பணிய வைக்கத்தான் சீனாவின் பக்கம் போனது, பாகிஸ்தான் உதவியையும் நாடியது. எனவே இலங்கையின் உண்மையான நோக்கம், தமிழ் இனத்தை பூண்டோடு அழிப்பது, அதற்கு இந்தியாவை வழிக்குக் கொண்டு அதன் பரம விரோதிகளிடம் நட்பு பாராட்டுவது.
ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் மற்ற நாடுகளை விட இந்தியாதான் பெருமளவில் உதவி செய்தது. இதை ராஜபக்சேவே வெளிப்படையாக சொல்லியுள்ளார். இந்தியாவுக்காக நாங்கள் போர் புரிந்தோம் என்றும் அவர் கூறினார். இப்படிச் சொல்லிக் கொண்டே சீனா, பாகிஸ்தானுடனான உறவையும் அவர் வலுப்படுத்தியே வருகிறார். இப்படிப்பட்டவரை எப்படி இந்தியா நம்ப முடியும்?.
இலங்கை இப்படி செய்வது சரிதான், அப்போதுதான் இந்தியாவுக்கு ஆபத்து இருக்காது என்று கூற வருகின்றனவா ஆங்கில மீடியாக்கள்...?
இதற்கெல்லாம் ஆங்கில மீடியாக்களிடம் பதில் இருக்காது. இருந்தாலும் சொல்ல மாட்டார்கள். அவர்களது பேச்சையும், எழுத்தையும் பார்த்தால் சிங்களத்துக்கு ஆபத்து வந்து விட்டதே என்ற பயம்தான் தூக்கலாக தெரிகிறது.
அகிம்சையை உலகுக்குக் கற்று கொடுத்த நாடு நமது இந்தியா. மகாத்மா காந்தியடிகளையும், புத்தரையும் பார்த்த பூமி இது. இங்கிருந்து போன பெளத்தம்தான் இன்று இலங்கையின் முக்கிய மதம். ஆனால் ஒரு பெளத்தன் செய்யும் காரியத்தைத்தான் சிங்களர்கள் செய்திருக்கிறார்களா என்பதை நடுநிலையோடு அலசிப் பார்க்க முன்வர வேண்டும் ஆங்கில மீடியாக்கள். புத்தர் இப்படித்தான் போதித்தாரா...?
செத்தவன் தமிழன் என்பதையெல்லாம் கூட மறந்து விடுவோம். சக மனிதனை இன்னொரு மனிதன் கொடூரமாகக் கொல்கிறான். அதைப் பார்த்து பிற மனிதர்கள் துடிக்கக் கூடாதா, அப்படித் துடித்தால் அது தவறா. அதைத் தட்டிக் கேட்க ஒருவன் கிளம்பினால் அதை ஆதரிப்பதும் தவறா..? ஆங்கில மீடியாக்கள் இனியாவது மனிதாபிமானத்துடன் யோசிக்கட்டும்...!
No comments:
Post a Comment