கொஞ்சம் சீரியஸான அங்காடித்தெரு, ஜாலியான பாணா காத்தாடி, அதிரடியான கோ... என இப்படி விதவிதமான படங்களுக்கு தன்னோட வித்தியாசமான ஒளிப்பதிவால அழகு சேர்த்த ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன். விஷால் நடிப்பு, விறுவிறுன்னு வளர்ந்துட்டு இருக்கற சமர் படப்பிடிப்புக்கு மத்தியில, நமது கேள்விகளுக்கு அசத்தலா பதில் கொடுத்தார் இதோ...
ஒளிப்பதிவாளர் ஆனதன் காரணம்...?
இயக்குநராகவோ, நடிகராகவோ ஆகணும்னா அதுக்கு கற்பனை வளமும் அதை அழகா வெளிப்படுத்த திறனும் இருந்தா போதும். ஆனா, ஒளிப்பதிவாளராக கற்பனைத்திறனோட, அறிவியல் அறிவும் அவசியம். இந்த கலவை என்னை கவர்ந்ததால ஒளிப்பதிவாளரா மாறிட்டேன்.
சமர் ஒளிப்பதிவில் சிறப்பு...?
முழுக்கு முழுக்க தாய்லாந்துல நடக்கற கதைங்கறதால இதுவரைக்கும் திரையில் பார்க்காத புதுப்புது லொகேஷன்களை தேடித்தேடி படம் பிடிச்சிருக்கோம். தீப்பெட்டி அளவு இருக்குற கோப்ரோ, புகைப்படம் எடுக்க பயன்படுற 7டின்னு காட்சிகளுக்கு ஏத்த மாதிரி பலவிதமான கேமராக்களை பயன்படுத்தி இருக்கிறேன்.
ஒளிப்பதிவு துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி...?
இன்னும் 5-6 வருஷத்துல பிலிம்ங்கற வார்த்தையே சினிமாவுல இருக்காதுன்னு நினைக்கிறேன். இதுவரைக்கும் ரொம்ப சிரமப்பட்டு செஞ்ச விஷயங்களை, கொஞ்சம் கூட கஷ்டப்படாம ஒரு பட்டனை தட்டி செய்ற அளவுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் பிரம்மாண்டமா வளர்ந்திருக்கு.
சமர் பற்றி...?
தீராத விளையாட்டு பிள்ளை இயக்குநர் திருவோட இயக்கத்துல... காதல், ஆக்ஷ்ன், சென்டிமென்ட்னு எல்லாவிதமான சுவைகளும் சரிவிகிதத்துல கலந்து... விஷால், த்ரிஷா நடிப்புல வித்தியாசமா உருவாகிட்டு இருக்கற த்ரில்லர் படம்.
தமிழ்ப்படங்களின் தரம் உலகத்தரத்துக்கு உயர...?
நம்மூர் ஷூட்டிங்ல, எல்லாரும் எல்லா வேலையும் செஞ்சாகணும். ஆனா, ஹாலிவுட்ல ஒருத்தர் ஒரு வேலைதான் செய்வாங்க. ஆனா, சரியா செய்வாங்க. அந்தமாதிரி, இவங்களுக்கு இந்த வேலைன்னு பிரிச்சு கொடுத்து அதை 100 சதவீதம் சிறப்பா செஞ்சா... தரம் தானா வரும்! என்றார்.
No comments:
Post a Comment