Saturday, January 17, 2015

400 சீடர்களின் ஆண்மையை பறித்த சர்ச்சை சாமியார் படம் இன்று ரிலீஸ்தலைநகர் புதுடில்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் உள்ளிட்ட பகுதிகளில், சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் திரைப்படத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சீக்கியர்கள் நடத்தும் இந்த போராட்டம் காரணமாக இப்பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனால் காவல் துறையினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவால், திரையிட தகுதியில்லாத திரைப்படம் என்று நிராகரிக்கப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு இவ்வளவு விரைவாக தீர்ப்பாயம் எவ்வாறு அனுமதி வழங்கியது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

மேலும் அப்படத்தில் நடித்துள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பற்றிக் குறிப்பிட்டு, " ஒரு தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிக்கு சட்டம் துணை போகின்றதா" போன்ற வாசங்களை கொண்ட பலகைகளையும் போராட்டக்காரர்கள் கொண்டிருந்தார்கள்.

எம்எஸ்ஜி என்றழைக்கப்படும் இந்த திரைப்படத்தின் பெயருக்கு பின்னால் "தி மெஸஞ்சர் ஆஃப் காட்" என்கிற பின் தொடரும் இடம்பெற்றுள்ளது.

ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் இன்று ( ஜனவரி 16) வெளியாகும் என்று முன்னதாகவே விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

மொத்தமாக இந்த திரைப்படத்தில் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன, அவை அனைத்திற்கும் பாடல்கள் எழுதுவது, பாடுவது, இசை அமைப்பது என அனைத்து பணிகளையும் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கே மேற்கொண்டுள்ளார்.

அத்தோடு இப்படத்தின் இயக்கம், ஒளிப்பதிவு போன்ற துறைகளிலும் அவர் இணைந்து பணியாற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ள இந்த சாமியார், படத்தின் கதைப்படியும் ஆன்மீகத் தலைவராகவே காட்சியளிப்பார் என்றும் படத்தின் கதைச்சுருக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மூடநம்பிக்கையை படம் ஊக்குவிக்கிறது"

இந்நிலையில் மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளதால்தான், இப்படத்திற்கு இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு அனுமதி சான்றிதல் வழங்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது தணிக்கை சான்றிதழ் மேல்முறையீடு ஆணையம், இப்படத்திற்கு வெளியீடு அனுமதி சான்றிதழ் வழங்கியதால் இந்த சர்ச்சை வலுத்துள்ளது.

இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவின் தலைவர் லீலா சாம்சனும் இந்த விவகாரம் காரணமாக அவரது பதவியை ராஜினாமா செய்த நிலையில், இவரைப்போல் பல்வேறு மாநில திரைப்படத் தணிக்கை குழுவின் தலைவர்களும் தொடர்ந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் கூறும் பல்வேறு காரணங்களில், அரசாங்கத்தின் குறுக்கீடுகளும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

சாமியார் மீது வழக்குகள்

சீக்கிய பிரிவுகளுக்கு இடையே உள்ள பல்வேறு அரசியல் சர்ச்சைகளின் காரணங்களாலும் இந்த விவகாரம் பெரிதாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அதே சமயத்தில், சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதியப்பட்டு வழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2002 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இந்த சாமியார் மீது பாலியல் குற்றச்சாட்டுகளும் துவங்கப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது குற்றம் கூறி இந்திய பிரதமர் உள்ளிட்ட பலருக்கும் கடிதம் எழுதிய சத்ரபதி என்பவர் அதே ஆண்டில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியின் போது துப்பாக்கியால் சுடப்பட்டு, பின்னர் நவம்பர் மாதம் 21 ஆம் தேதியின் போது இறந்துள்ளார்.

இதனால் கொலைக் குற்றச்சாட்டு உள்ளிட்ட வழக்குகள் அந்த சாமியார் மீது பதியப்பட்டு நீதி விசாரணை தற்போதும் நடைபெற்று வருகிறது.

அதே சமயம் இந்திய அரசால் 1952 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட திரைப்படத் தணிக்கைச் சட்டத்தின் கீழ் தான் தற்போதும் இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு செயல்பட்டு வருவதாகவும், புதுப்பிக்கப்படாத இந்த சட்டத்தால் பல பிரச்சனைகள் உருவாவதாகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டில் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான குழுவால், இந்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மாதிரி திரைப்படத் தணிக்கைச் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு பரிசிலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment