Tuesday, January 20, 2015

அ.தி.மு.க.,வுடன் - பா.ஜ., கூட்டணி?மத்தியில் நெருக்கடியால் முடிவு


புதிய சட்டங்களை இயற்றுவதில், மத்திய அரசு சந்தித்து வரும் நெருக்கடிகளை களைவதற்காக, அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கைகோர்க்க முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் பரவி உள்ளன. இது, குறுகிய கால ஏற்பாடாக மட்டும் அல்லாமல், தேர்தல் கூட்டணியாகவும் தொடரும் எனவும், அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்திய பொருளாதாரத்தை, மீண்டும் வளர்ச்சி பாதையில் நடத்துவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி, சர்வ அவசரம் காட்டி வந்தாலும், பார்லி., செயல்பாடுகள் அவருக்கு கைகொடுக்கவில்லை. 

கடந்த பார்லி., கூட்டத்தொடரில், மீள்மதமாற்றம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து, சர்ச்சையை கிளப்பி, எந்த உபயோகமான வேலையையும் நடத்தவிடாமல், எதிர்க்கட்சிகள், புதிய சட்டங்களுக்கும், சட்டத்திருத்தங்களுக்கும் முட்டுக்கட்டை போட்டன. 

ராஜ்யசபா கணக்கு: 

இந்நிலையில், பார்லிமென்டின் கூட்டு கூட்டத்தை, ஜனாதிபதி கூட்டினால், அதில் மத்திய அரசின் மசோதாக்களும், அவசர சட்டங்களும் ஒப்புதல் பெற வாய்ப்பு உள்ளது. அதாவது, இரு சபைகளிலும், மொத்தம் 790 இடங்கள் உள்ளன. அவசர சட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கு, 396 ஓட்டுகள் தேவை. இரு சபைகளிலும், பா.ஜ., கூட்டணியின் மொத்த பலம், 394 தான். ராஜ்யசபாவில், காங்., கூட்டணியிடம், 78 இடங்களும், இதர கட்சிகளிடம், 89 இடங்களும் உள்ளன. இதர கட்சிகளில், இடதுசாரிகளிடம் - 11, திரிணமுல் காங்கிரசிடம் - 12, ஐக்கிய ஜனதா தளத்திடம் - 12, சமாஜ்வாதியிடம் - 15, பகுஜன் சமாஜ்வாதியிடம் - 10 என, பெரும்பாலான இடங்கள், பா.ஜ.,விற்கு சாதகமாக வராத கட்சிகளிடம் தான் உள்ளன. இருப்பினும், ஒருசில சிறிய கட்சிகளை சரிகட்டுவதன் மூலம், இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம். 

ஆனால், பார்லிமென்டின் கூட்டு கூட்டத்தை நடத்துவதிலேயே, பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஒரு மசோதா, ஒரு சபையில் ஒப்புதல் பெற்று, இன்னொரு சபையில் ஒப்புதல் பெறாவிட்டாலோ; ஒரு சபையில் ஒப்புதல் பெற்று, இன்னொரு சபையில் ஆறு மாதங்களுக்கு எடுக்கப்படா விட்டாலோ; ஒரு சபையில் ஒப்புதல் பெற்று, இன்னொரு சபையில் மாற்றங்களோடு ஒப்புதல் பெற்று, அந்த மாற்றங்களை முதல் சபை ஏற்காவிட்டாலோ தான், பார்லிமென்டின் கூட்டு கூட்டத்தை, ஜனாதிபதி கூட்ட முடியும் என்பது சட்டம். அதாவது, அவசர சட்டங்களுக்கு, ராஜ்யசபா ஒப்புதல் கொடுக்காவிட்டாலே, கூட்டு கூட்டத்தை கூட்டி விடலாம். ஆனால், அதையும் செய்யாமல், கூட்டு கூட்டத்தை தவிர்ப்பதே, எதிர்க்கட்சிகளின் திட்டமாக உள்ளது. இந்த தடங்கல் திட்டத்தை முறியடிக்க தான், பா.ஜ., ஆதரவு திரட்டி வருகிறது.

குறுகிய கால ஏற்பாடு? 

அதன் ஒரு பகுதியாக தான், நேற்று முன்தினம், சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, விமான நிலையத்தில் இருந்து நேரடியாக, போயஸ் தோட்டம் சென்று, ஜெயலலிதாவை, 'மரியாதை நிமித்தமாக' சந்தித்தார்.நாற்பது நிமிடங்கள் நீடித்த, இந்த மரியாதை நிமித்த சந்திப்பை பற்றி, அரசியல் வட்டாரங்களில், பல்வேறு பரபரப்பான தகவல்கள் உலவுகின்றன. 

ஒரு தரப்பினர், 'அ.தி.மு.க., வுடன், பா.ஜ., கைகோர்ப்பது பார்லிமென்டில் சாதகமான நிலையை பெறுவதற்கான, குறுகிய கால ஏற்பாடு தான்' என, கூறி வருகின்றனர். ஆனால், பா.ஜ.,வில் ஒரு தரப்பினர், 'இது 2016 சட்டசபைத் தேர்தலுக்கும் நீடிக்கும்' என, ஆணித்தரமாக கூறுகின்றனர். 

இந்நிலையில், மேலிட உத்தரவின் பேரில், அ.தி.மு.க.,வையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்து வந்த, தமிழக பா.ஜ., தலைவர்கள், தற்போது, செய்வதறியாமல் கையை பிசைந்து வருவதாக கூறப்படுகிறது. 

அதே போல், 'தனித்து போட்டியிட்டு, தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்' என்ற கனவில் இருந்த தமிழக பா.ஜ.,வினர், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், இந்த திருப்பம் பெரும் சோர்வையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

மெஜாரிட்டி:

லோக்சபாவில், பா.ஜ.,விற்கு தனிப்பெரும்பான்மை இருந்தாலும், (545 இடங்களில், பா.ஜ., கூட்டணி 335 இடங்கள்), ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லை. (245 இடங்களில், பா.ஜ., கூட்டணி 59). அவசர சட்டங்களை பிறப்பித்து, தன் பொருளாதார கொள்கையை அமலாக்குவதற்கான வழியை தேடியது. இந்த அவசர சட்டங்கள்அதிகபட்சமாக, ஏழரை மாதங்கள் வரை செல்லுபடியாகும். ஆனால், பார்லி., கூடிவிட்டால் அவற்றுக்கு பார்லிமென்டில் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். 

அப்படி ஒப்புதல் பெறப்படா விட்டால், பார்லி., தொடர் முடிந்த ஆறு வாரங்களில், அந்த சட்டங்கள் காலாவதியாகி விடும். அதாவது, அடுத்த மாதம் கூடவுள்ள பார்லி., தொடரில், இந்த அவசர சட்டங்கள் ஒப்புதல் பெறாவிட்டால், வரும் மார்ச் மாதம் காலாவதியாகி விடும்.

நீண்ட கால ஏற்பாடு- காரணம் என்ன?

1. ராஜ்யசபாவில், இடங்களை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தான், ஒவ்வொரு மாநில சட்டசபைத் தேர்தலிலும், பா.ஜ., முனைப்போடு போட்டியிட்டு வருகிறது. வரும் 2016ல், மேற்குவங்கம், உ.பி., தமிழகம் என, மூன்று முக்கிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடக்க உள்ளன. 

தமிழகத்தை பொருத்தவரை, தமிழக பா.ஜ., மிக பலவீனமான நிலையில் உள்ளது என்று, அமித் ஷா இங்கு வந்த போது உணர்ந்தார். அதே நேரத்தில், தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி கட்சிகளை நம்பி, களம் இறங்கும் நிலையில் இல்லை என்பதால், ஏதேனும் பெரிய திராவிட கட்சிகளோடு கைகோர்க்கலாம் என்ற எண்ணம், அவருக்கு ஏற்பட்டு இருக்கலாம். அதில், அ.தி.மு.க.,வின் அபாரமான லோக்சபா தேர்தல் வெற்றி மற்றும் அ.தி.மு.க.,விற்கு ராஜ்யசபாவில் உள்ள, 11 ஓட்டுகள், அவரை அ.தி.மு.க., பக்கம் திருப்பி உள்ளது.

2. ஏற்கனவே, பா.ஜ., கூட்டணியில் இருந்தே, ம.தி.மு.க., வெளியேறி விட்டது. தற்போது, 

பா.ம.க.,வும் வெளியேறும் நிலையில் உள்ளது. அன்புமணியை பிரதானப்படுத்தி, பா.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, அவரை அறிவிக்க வேண்டும் என்பது, பா.ம.க.,வின் எதிர்பார்ப்பு; அது நடப்பதாக தெரிவியல்லை. 

மேலும், சமஸ்கிருதம் விஷயம் உள்ளிட்ட சில பிரச்னைகளில், பா.ம.க., அதிருப்தியில் உள்ளது. பா.ஜ., தலைவர் சுப்பிரமணியன்சாமியும், பா.ம.க.,வை கழற்றிவிட வேண்டும் என்று கருத்து தெரிவித்து உள்ளார். அதனால், பா.ம.க.,வும், பா.ஜ.,கூட்டணியில் இருந்து விலகும் நிலை உள்ளது. 


3. ஜெட்லி வந்திருந்த, அதே திருமண நிகழ்ச்சிக்கு வந்த பா.ஜ., தலைவர் அமித் ஷா, விஜயகாந்தை பார்ப்பதை தவிர்த்தார். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க முடிவாகி உள்ளதால் தான், தே.மு.தி.க.,வையும் கழற்றிவிடும் எண்ணத்தில் பா.ஜ., உள்ளது. இது தொடர்பாக, கட்சி முன்னணியினருடன் பேசிய விஜயகாந்த், 'ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., பேரத்தை துவங்கி விட்டது. 

ஏற்கனவே, பா.ஜ., கூட்டணியில் நமக்கு மரியாதை இல்லை. அவர்கள் அறிவிப்பதற்கு முன், நாம் கழன்று கொள்ள வேண்டும். தேவையானால், தி.மு.க.,வுடன் நட்பை புதுப்பிப்பது தொடர்பான நடவடிக்கைகளில் இறங்குங்கள்' என, கூறியிருப்பதாக தெரிகிறது.

4.  அ.தி.மு.க.,வுடன் கூட்டணி உருவாகிவிட்டதால் தான், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கு, பா.ஜ., வேட்பாளர் குறித்து எந்த சத்தமும் இல்லை. அனேகமாக, இந்த இடைத்தேர்தலில், பா.ஜ., தரப்பில் யாரும் போட்டியிட மாட்டார்கள் என்றே பேச்சு உள்ளது.


5. தமிழக பா.ஜ., தலைவர்களுக்கு, மேலிடத்தில் இருந்து ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஆட்சி மற்றும் அ.தி.மு.க., குறித்து, கடுமையான விமர்சனங்களை யாரும் செய்ய வேண்டாம் எனவும், 'டிவி' மற்றும் பத்திரிகை விவாதங்களில், 

இந்த பிரச்னை குறித்து கருத்து கேட்கப்பட்டால், சமாதானமாக பதில் சொல்ல வேண்டும் எனவும், மேலிடம் உத்தரவு போட்டுள்ளது. இத்தகைய போக்குகளால், அ.தி.மு.க., - பா.ஜ., கைகோர்ப்பு, 2016 தேர்தலிலும் தொடரும் என,பா.ஜ.,வில் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர்.No comments:

Post a Comment