Thursday, January 15, 2015

பேரறிஞர் அண்ணா எழுதிய கடைசி பொங்கல் வாழ்த்து

திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்து, குறுகிய காலத்தில் தமிழகத்தின் முதல் அமைச்சராகி, அதைவிட குறுகிய காலத்தில் அமரராகி விட்ட தென்னாட்டின் பெர்னாட்ஷா, பேரறிஞர் அண்ணா தனது தம்பியர்க்கு எழுதிய கடைசி பொங்கல் திருநாள் வாழ்த்து..,

"சீமான் மகன் கொண்டாடும் விழா அல்ல பொங்கற் புதுநாள். சமூகத்தின் கோணல்களை நிமிர்த்தியாக வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட உன்போன்றாருக்கென்றே அமைந்துள்ள விழாவாகும்.

கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தக்க முறையிலே பயன்படுத்தினால், சமூகத்தை நிச்சயமாகத் திருத்தி அமைத்திடலாம்.

காலத்தை வீணாக்காமல் சமூகத் தொண்டாற்ற ஓர் துடிப்பு உனக்கு உண்டு என்பதனை உணர்ந்த உன் அண்ணன் இன்று உனக்குக் கனிவு நிரம்பிடும் வாழ்த்தினை அளிப்பதுடன், உன் இல்லத்துள்ளார் யாவருக்கும் வாழ்த்துக் கூறுவதுடன், நாடு வளம்பெற, சமூகம் சீர்பெற, சமதர்மம் மலர்ந்திட பாடுபடுவதற்கான உறுதியினை இன்று பெற்றிடுக என்றும் கூற விரும்புகிறேன்.

ஒரு நிமிடம்கூட வீணாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் கூறுவதற்குக் காரணம், தம்பி! எங்கோ படித்ததாக நினைவு. ஒரு நிமிடத்தில், விண்ணிலிருந்து 6,000 விண் கற்கள் விழுகின்றன; பூமி தன்னைத்தானே 950 மைல் வேகத்தில் சுற்றுகிறது; 100 பேர் இறந்துபடுகின்றனர்; 114 குழந்தைகள் பிறக்கின்றன. 34 திருமணங்கள், 16 விவாக விடுதலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன; 68 மோட்டார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதாக.

காலம் அத்துணை மதிப்பு வாய்ந்தது. 

கடமை உணர்ந்த நீ, காலத்தையே கனியச் செய்திடும் ஆற்றல் பெற்ற நீ, தமிழக அரசியலையே மாற்றி அமைத்த நீ உன் கடமையைச் செய்வதிலே கண்ணுங் கருத்துமாக இருப்பாய் என்பதனை நான் அறிவேன். எனினும் அண்ணன் என்ற உரிமையுடன் உனக்கு அந்தக் கடமையை நினைவுபடுத்துவது எனக்கோர் மகிழ்ச்சி தந்திடுவது போல உனக்கும் மகிழ்ச்சி தந்திடும் என்பதிலே ஐயப்பாடு இல்லை.

என்னைப் பொறுத்தமட்டிலே தம்பி, நலிவைத் தாங்கிக் கொண்டபடி என்னால் இயன்றதைச் செய்துகொண்டு வருகின்றேன். “தாத்தாவுக்கு ஏன் கைவலி தெரியுமா?. . . . எழுதுவதாலே!” - என்று என் பேரன் மலர்வண்ணன் - என் மகன் டாக்டர் பரிமளம் பெற்ற செல்வம் - கூறுகிறான். உண்மைதான்! வலி இருக்கத்தான் செய்கிறது - ஆனால் தம்பிக்கல்லவா கடிதம் எழுதுகிறேன்! அது தனியானதோர் சுவையைத் தருகிறது.

மகிழ்ந்திரு! விழா நடத்திடு! வேலை மிகுதி இருக்கிறது என்ற நினைவுடன்.

- 12-1-69, காஞ்சி இதழ் (தம்பிக்கு அண்ணா எழுதிய கடைசி கடிதத்திலிருந்து) (முகநூல் பகிர்வுக்கு நன்றி:- வழக்கறிஞர் சந்திரன் வீராசாமி, திருச்சி)


No comments:

Post a Comment