Friday, January 9, 2015

மகள்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததால் கள்ளக்காதலனை கொலை செய்தேன்: கைதான பெண் வாக்குமூலம்

வேலூர் மாவட்டம், வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூர் அசோக் நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 50). பால் வியாபாரி. அவரது கள்ளக்காதலி சகிலா (48). இருவரும் கணவன்–மனைவி போல் குடித்தனம் நடத்தி வந்தனர். கடந்த 2013–ம் ஆண்டு நவம்பர் மாதம் 25–ந் தேதியன்று வழக்கம் போல் வீடுகளுக்கு பால் ஊற்ற பாஸ்கரன் சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வாலாஜா போலீசில் சகிலா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பாஸ்கரனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜிகுமார் மற்றும் போலீசார் பழைய வழக்குகள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் 13 மாதங்களுக்கு முன்பு மாயமான பாஸ்கரன் குறித்து சகிலா கொடுத்த புகாரின் மீது நடத்திய விசாரணையின் போது, சகிலாவே பாஸ்கரனை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் சகிலாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

விசாரணையில் சகிலா போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

நான் புதுச்சேரியை சேர்ந்தவள். ராணிப்பேட்டையை சேர்ந்த சுலைமான் என்பவருடன் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ராணிப்பேட்டை பிஞ்சி பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் ராணிப்பேட்டை பகுதியில் வீடு, வீடாக சென்று பால் ஊற்றி வியாபாரம் செய்து வந்தார். என் வீட்டிற்கும் வந்து பால் ஊற்றினார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதையறிந்த எனது கணவர் சுலைமான் என்னை கண்டித்தார். பின்னர் குடும்பத்தைவிட்டு தனியே பிரிந்து சென்றுவிட்டார். அதைத்தொடர்ந்து எனது மகள்களுடன், பாஸ்கரனோடு வி.சி.மோட்டூர் அசோக் நகரில் வசித்து வந்தோம். அப்போது நான் வி.சி.மோட்டூரில் டிபன் கடை நடத்தி வந்தேன். இந்த சமயத்தில் பக்கத்து கடையில் மெக்கானிக்காக வேலை பார்த்த ஆறுமுகம் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

மேலும் பாஸ்கரன் குடிபோதையில் என்னை துன்புறுத்தி வந்ததுடன், மகள்களையும் ஆசைக்கு இணங்கிட வற்புறுத்தினார். இதனால் எனது மகள்களை திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். திருமணம் செய்து கொடுத்தபிறகும் பாஸ்கரன், எனது மகள்களை தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.

இந்த மன உளைச்சலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நான் பாஸ்கரனை கொலை செய்ய திட்டமிட்டேன். திட்டமிட்டபடியே எனது வீட்டிலேயே எனக்கு பழக்கமான ஆறுமுகம், அசோக், புருசோத் என்ற பிரசாத், அமின்பாய் மற்றும் இவர்களுடன் சேர்ந்து பாஸ்கரனுக்கு அதிக அளவில் மதுவை வாங்கி கொடுத்து போதையில் இருந்தபோது தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்தோம்.

பின்னர் பிணத்தை எங்கே, எப்போது புதைப்பது என தெரியாமல் ஒரு நாள் முழுவதும் எனது வீட்டிலேயே வைத்திருந்தேன். தீவிர ஆலோசனைக்கு பின்பு என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு மற்றவர்கள் மறுநாள் இரவில் காரில் பிணத்தை எடுத்து சென்று ஆற்காட்டை அடுத்த நந்தியாலம் சுடுகாடு அருகே ஆற்றில் புதைத்துவிட்டனர்.

பின்னர் தன் மீது எந்தவித சந்தேகமும் வரக்கூடாது என்பதற்காக பாஸ்கரன் மாயமானதாக போலீசில் புகார் செய்தேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

அதைத்தொடர்ந்து போலீசார் சகிலா, ஆண்டியப்பன் தெருவை சேர்ந்த புருசோத் (23), மெக்கானிக் ஆறுமுகம் (26), கீழ்படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்த அசோக் (25), வாலாஜா தொட்டிநாகைய செட்டிதெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அமின்பாய் (30) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஸ்கரன் உடல் புதைக்கப்பட்ட இடத்தை குற்றவாளிகள் நேற்று அடையாளம் காட்டினார்.

முதலில் பிணம் புதைக்கப்பட்ட இடத்தை மாறிமாறி காட்டினார். பின்னர் புதைக்கப்பட்ட இடத்தை உறுதி செய்தனர்.

இதனையடுத்து இன்று வருவாய் துறையினர் முன்னிலையில் பாஸ்கரன் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது. அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் கைதான கூலி படைக்கு வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர் 

No comments:

Post a Comment