Saturday, January 10, 2015

சிதறி ஓடும் ராஜபக்சே குடும்பம்! தம்பி கோத்தபய மாலத்தீவுக்கு ஓட்டம்

இலங்கை தேர்தலில் தங்களுக்கு இப்படி ஒரு தோல்வி கிடைக்கும் என்பதை மகிந்த ராஜபக்சேயும், அவரது சகோதரர்களும் கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை. ஈழத் தமிழர்கள் ஓட்டுரிமையை பயன்படுத்தி கொடுத்த சரியான பதிலடி அவர்களை நிலை குலைய செய்து விட்டது.

நேற்று அதிகாலை 4 மணிக்கு, தனக்கு இனி வெற்றி வாய்ப்பே இல்லை என்பது தெரிந்ததும் ராஜபக்சேவுக்கு தாங்கிக் கொள்ள முடியாத அதிர்ச்சி ஏற்பட்டது. தன் குடும்பத்தினர் முழுவதையும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்த அவர், அடுத்த என்ன செய்யலாம் என்று உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவருக்கு ஆட்சி, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவேசமே அதிகரித்திருந்தது. அவரை சமரசம் செய்த உயர் அதிகாரிகளில் ஒருவர், ‘‘நீங்கள் ஆட்சியில் நீடிக்க 2 ஆண்டுகள் அவகாசம் உள்ளது. எனவே உங்களுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலை ரத்து செய்யலாம்’’ என்று ஆலோசனை கூறினார்.

இந்த நிலையில் 22 மாவட்டங்களில் இருந்தும் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டிருந்தது. எனவே இனி தேர்தலையோ, தேர்தல் முடிவுகளையோ ரத்து செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அதன் பிறகும் அதிகாரத்தை தக்க வைக்க ஏதாவது வழி உள்ளதா என்று ராஜபக்சே ஆய்வு செய்தார்.

இலங்கையில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்து விடலாமா? என்று ஆலோசித்தார். அவசர நிலையை அமல்படுத்த வேண்டுமானால் நாட்டில் நிர்வாகம் மற்றும் சட்டம்– ஒழுங்கு உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்தும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு வேண்டும்.

ஆனால் இலங்கை அட்டர்னி ஜெனரலுக்கு ராஜபக்சேயின் நடவடிக்கைகள் அதிருப்தியைக் கொடுத்தது. அவர் ராஜபக்சேயின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார். இதனால் கடைசி நிமிடத்தில் அதிகாரத்தை கைப்பற்ற முயன்ற ராஜபக்சே முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

இதற்கிடையே ராஜபக்சேயின் குள்ளநரித்தனமான செயல்பாடுகள் பற்றி அறிந்த ரணில் விக்கிரமசிங்கே அதிரடியாக ஜனாதிபதி மாளிகைக்கு வந்தார். அவரிடம் இலங்கை அட்டர்னி ஜெனரல் நடந்த விஷயங்களை கூறினார்.

ராஜபக்சேயின் எந்த உத்தரவையும், எந்த ஒரு அதிகாரியும் கேட்க வேண்டியதில்லை என்று ரணில் உறுதி பட கூறினார். அதன் பிறகு எல்லாம் தன் கையை விட்டுப் போய் விட்டது என்பதை உணர்ந்து ராஜபக்சே பணிந்தார்.

அட்டர்னி ஜெனரல் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து ராஜபக்சே அடுத்த சில நிமிடங்களில் ஜனாதிபதி மாளிகையை காலி செய்து வெளியேறினார். போகும்போது அவர் அதிபர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்து சென்றார்.

ராஜபக்சே பாதுகாப்புடன் வெளியேற ரணில் விக்கிரமசிங்கே உதவிகள் செய்ததாக தெரிய வந்துள்ளது. ரணில் தனது காரில் ராஜபக்சேயை ஏற்றி, கொழும்பு டாரிஸ்டன் அவென்யூவில் உள்ள ஒரு தொழில் அதிபர் வீட்டில் கொண்டு போய் விட்டுச் சென்றதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக தேர்தல் முடிவுகள் திசை மாறி செல்வதை அறிந்ததும் அலரியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் சுமார் 800 ராணுவ வீரர்களை ராஜபக்சே குவித்தார். பாராளுமன்றத்தை கலைத்து விட்டு, ஜனாதிபதி மாளிகை அருகில் யாரையும் வர செய்ய விடக்கூடாது என்பது ராஜபக்சேயின் திட்டமாக இருந்தது.

ஆனால் ஜனாதிபதி மாளிகையில் ராணுவம் குவிக்கப்பட்டதும், ஏதோ நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து இந்தியாவும், அமெரிக்காவும் தலையிட்டதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளின் தலையீடு தனக்கு எதிராக மாறியதாலும் வேறு வழியின்றி ராஜபக்சே சரண் அடைந்ததாக கூறப்படுகிறது.

ராஜபக்சே நிலை இவ்வாறு இருக்க அவரது தம்பியும் பாதுகாப்பு அமைச்சக செயலாளராகவும் இருந்த கோத்தபய ராஜபக்சே எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. அவர் தன் மனைவி அயோமாவுடன் இலங்கை ராணுவ விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

விமானப் படைக்கு சொந்தமான விமானத்தில் சென்றால் விசா தேவை இல்லையாம். அதை பயன் படுத்தி சிங்கப்பூர் செல்ல கோத்தபய முயன்றுள்ளார்.

ஆனால் சிங்கப்பூர் விமான நிலைய அதிகாரிகள், விசா இல்லாமல் விமானத்தை அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டதாக தெரிகிறது. இதனால் கோத்தபய மாலத்தீவுக்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜபக்சேயின் கடைசி தம்பி டட்லி ராஜபக்சே. அமெரிக்கா குடியுரிமை பெற்றுள்ள இவர், அந்த நாட்டில் வசித்து வருகிறார்.

இலங்கையில் தேர்தல் நடந்ததை முன்னிட்டு இரண்டு வாரங்களுக்கு முன்பு கொழும்பு வந்திருந்தார். ராஜபக்சே மக்களால் விரட்டப்பட்டதை அறிந்ததும் டட்லி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

விமான நிலையம் அருகில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் அவர் தங்கியிருந்தார். இன்று அதிகாலை 1.30 மணிக்கு டட்லி யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் ரகசியமாக தாய்லாந்து விமானத்தில் ஏறி பாங்காங் நகருக்கு புறப்பட்டு சென்றார்.

மகிந்த ராஜபக்சேக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்களும் இலங்கை அரசியல் விவகாரங்களில் தலையிட்டு வந்தனர். அவர்களில் 2 பேர் சீனாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ராஜபக்சேயின் மற்றொரு மகன் மற்றும் ராஜபக்சேயின் மற்றொரு தம்பி கொழும்பில் எங்கு தங்கியுள்ளனர் என்று தெரியவில்லை. ராஜபக்சே அல்லது அவரது குடும்பத்தினர் யாரையும் பழி வாங்க மாட்டோம் என்று புதிய அதிபர் மைத்ரீ பால சிறிசேனா அறிவித்துள்ளார்.

என்றாலும் உயிருக்கும், சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கும் பயந்து ராஜபக்சே குடும்பத்தினர் பதுங்கி விட்டனர். 2009–ல் இலங்கையில் இறுதிக் கட்டப் போர் நடந்தபோது பல நாடுகளின் உதவிகளோடு இலங்கை போரிட்டதால் விடுதலைப்புலிகள் இப்படித்தான் நாடு, நாடாக ஓடினார்கள். இப்போது ராஜபக்சே குடும்பத்துக்கும் அதே நிலை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment