தயங்கி தயங்கி வீட்டு முன் நின்றான் சங்கர் .
"அதுக்குள்ளே வந்துட்டீங்களே....சைதாப்பேட்டைக்கு போகல்லையா?"-ஜெகதீஸ்வரி.
"இல்லை ஜெகதி! நாடாரே கூப்பிட்டு கடன் கொடுத்தாரு...வாங்கிட்டு வந்திட்டேன்."-சங்கர்.
பொய் சொன்னான் ! நாடாரை உதைச்சு சம்பாதிச்ச அரிசின்னு சொல்ல கூச்சம். உள்ளுக்குள்ளே இருந்த இன்னொரு சங்கருக்கு இன்னமும் இந்த 'கொள்ளையிலே' உடன்பாடு இல்லை.
கஞ்சி காய்ச்சி குடிச்சதும் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு வயிறு ரொம்பின திருப்தி.
குழந்தை கீதா சங்கர் மடியிலேயே மறுப்படி தூங்கிருச்சு. ஜெகதி சங்கர் தோளிலே சாய்ந்து தூங்கினாள். எல்லாவருக்கும் பசியால் ஏற்பட்ட சோர்வு பசியாறியதும் தூங்கத்தை வரவளைத்ததால் கண்ணயர்ந்து தூங்கினார்கள்.
ஆனால், சங்கருக்கு மட்டும் தூக்கம் வரல்ல. பசி அடங்கின பிறகு தான் பயம். சிந்தனை எல்லாம் சுறுசுறுப்பாச்சு.
அடிப்பட்ட நாடார் எப்படியும் போலீசுக்கு போயிருப்பான். கடன் கேட்டதுக்கே பின்னி பெடலேடுத்த போலீஸ், கொள்ளையடிச்சதுக்கு சும்மா இருப்பாங்களா..? அடிச்சு இழுத்துட்டு போயி லாக்கப்புல வைப்பாங்களே ...?
ஜெகதி , குழந்தை கீதா எல்லாம் இன்னுமில்லே சோத்துக்கு திண்டாடுவாங்க?
யோசித்தப்படியே தூங்கி விட்டான்.
யாரோ தட்டி எழுப்ப பதறிப் போயி எழுந்தான்!
"விடிஞ்சுடுச்சு! எழுந்திரிங்க" ஜெகதி தான் எழுப்பினாள். "ஏன் இப்படி பயப்படறீங்க"-ஜெகதி .
சங்கருக்கு ஆச்சரியமாக போச்சு .
இன்னும் ஏன் போலீஸ் வரல்ல ?
மெல்ல எழுந்து வேப்பங்குச்சி ஒடிச்சு பல்லுல மென்னுகிட்டே கடை வீதிப் பக்கம் போனான்.மனசுக்குள்ளே குறுகுறுப்பு . நாடார் என்ன ஆனார்ன்னு தெருஞ்சுக்க ஒரு ரகசிய ஆவல்.
நாடார் கடையையெல்லாம் சுத்தம் பண்ணி ஊதுபத்தி ஏத்தி வச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தார். முகமெல்லாம் வீக்கம்.
சங்கர் மெல்ல எட்டி பார்த்ததும் அவரும் பார்த்திட்டார். சங்கருக்கு உள்ளுக்குள்ளே உதறல். இருந்தாலும், இப்ப ஓடி ஒளிஞ்சா அந்த ஆளு 'தாட்டியம்' பண்ணிடுவானேன்னு தோணிச்சு.கெத்தா நடந்தான். அவரை பார்த்து வேப்பங்குச்சியை வாயோட ரெண்டு ஓரத்துக்கும் நகர்த்தினான் ஸ்டைலா!
உப்பு மூட்டை மேலே ஒரு காலை தூக்கி வச்சான். "என்னடா? ரிப்போர்ட் கொடுக்கல்லையா இன்னும்?"
கடைகாரர் பெரிய கும்பிடை போட்டார்.
"அண்ணே ! வாங்கண்ணே! நீங்க பெரிய ரௌடின்னு எனக்குத் தெரியாதுண்ணே! உங்களை பத்தி தெரியாம ரிப்போர்ட் பண்ணிட்டேன்; போலீஸ்ல சொன்னது தப்புத்தான்... இன்னுமே கடையை சேதம் பண்ணிடாதீங்க! பெறகு என் வயித்துல ஈரத்துணிதான்! இந்தாங்க, இந்த பையிலே அஞ்சு கிலோ அரிசி , பருப்பு, காய்கறி எல்லாம் இருக்கு. வாரம் ஒரு நாள் இப்படி ஒரு பை தரேன்! ஏதோ நடந்தது நடந்து போச்சு மனசுலே ஒன்னும் வச்சுக்காதீங்க "
சங்கருக்கு ஒண்ணுமே புரியல்ல.
'நான் ரௌடியாமே!? அழுறதா சிரிக்கிறதா"ன்னு மனதுக்குள் நினைத்து கொண்டான் சங்கர்.
அதிரடிகள் தொடரும்....

No comments:
Post a Comment