தான் எழுதிய 'ஆயிரம் பாடல்கள்' புத்தக வெளியீட்டு விழாவை மதுரையிலும் நடத்தியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. (சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இல்லாமலா...) அங்கு பேசிய கவிஞர் சற்றே உணர்ச்சிவசப்பட்டாராம். "ஆரம்ப காலங்களில் என்னை அவ்வளவு அவமானப்படுத்தியிருக்கிறார்கள். நான் எழுதுகிற பாடல்களை கூட என் மனைவி எழுதிக் கொடுத்தது என்றார்கள். அவமானங்களை தாங்கிக் கொண்டுதான் நான் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறேன்" என்றாராம். நல்ல உருக்கமான பேச்சுதான். ஆனால் காதில் வந்து விழுகிற உண்மையை கவனிக்காமல் விட்டுவிட முடியவில்லையே?
இதோ- கவிஞரை பற்றி இன்னொரு கான்ட்ரவர்ஸி...
அரும்பு மீசை குறும்பு பார்வை என்றொரு படம் தயாராகி வருகிறது கோடம்பாக்கத்தில். அதில் நான்கு பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார். ஒரே ஒரு பாடலை கார்த்திக் நேத்தா என்ற புதுக்கவிஞர் எழுதியிருக்கிறார். அண்மையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. அதற்கு வைரமுத்து வரவில்லை. ஆனால் தான் வராவிட்டாலும் இன்னொருவரை மேடையில் ஏற்றவே கூடாது என்று கேட்டுக் கொண்டாராம். புதுக்கவிஞரான கார்த்திக் நேத்தாதான் அவர். அதுமட்டுமல்ல, கேசட் கவர்களில் கூட இந்த புதியவரின் பெயர் வரக்கூடாது என்று கூறிவிட்டாராம்.
தலைக்கு மேல் வளர்ந்த யானை, தரையில் ஊறும் எறும்பை நசுக்குகிறதே என்று அங்கலாய்க்கிறார்கள் இதை அறிந்தவர்கள். வாலியும், கண்ணதாசனும் அப்படி நினைத்திருந்தால் வந்திருக்க முடியுமா இவர்?

No comments:
Post a Comment