தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்று நடிகர் வடிவேலு கூறினார். நடிகர் வடிவேலு இன்று காலை 11 மணிக்கு கோபாலபுரத்தில் உள்ள முதல்-அமைச்சர் கருணாநிதி வீட்டுக்கு சென்றார். அங்கு கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தினர். சிறிது நேரம் முதல்வருடன் பேசிக் கொண்டு இருந்தார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்த வடிவேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த தேர்தலில் வெளியான தேர்தல் அறிக்கையை முதல்வர் கதாநாயகன் என வர்ணித்தார். அந்த அளவு அது சிறப்பாக இருந்தது. வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 108 ஆம்புலன்சு சேவை, இலவச கலர் டி.வி. போன்றவை மக்களை சென்றடைந்தன. அதை விட இரு மடங்கு அதிகமாக அறிவிப்புகள் இந்த தேர்தல் அறிக்கையில் உள்ளன.
முதியோர் பென்ஷனை ரூ.750க்கு உயர்த்தி உள்ளார். 60 வயது ஆனவர்களுக்கு இலவச பஸ் பயணம், ஏழை பெண்களுக்கு திருமண உதவி தொகை ரூ.30 ஆயிரமாக உயர்வு, வறுகையில் இருப்பவர்களுக்கு மாதம் 35 கிலோ இலவச அரிசி என ஏராளமான நல்ல திட்டங்கள் உள்ளன. இவை தி.மு.க.வுக்கு நிச்சயம் வெற்றி தேடித்தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் பிரசாரத்தை எப்போது துவங்குவீர்கள் என்று வடிவேலுவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
வருகிற 23-ந் தேதி தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறேன். அன்றும் மறுநாளும் (24-ந் தேதி) முதல்- அமைச்சர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறேன். பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று பேசுகிறேன். கருணாநிதி 6-வது முறையாக மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார்.
கேள்வி:- விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவீர்களா?
பதில்:- அவர் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பதை முதலில் அறிவிக்கட்டும் அதன் பிறகு எனது முடிவைச் சொல்கிறேன்.
கே:- எத்தனை நாட்கள் பிரசாரம் செய்வீர்கள்?
ப:- அதுபற்றி பிறகு சொல்கிறேன்.
தி.மு.க. அணியில் இடைவேளை விட்டு கிளைமாக்ஸ் போய்க் கொண்டு இருக்கிறது. அவர்கள் அணியில் இன்னும் சூட்டிங்கே துவங்கவில்லை.
இவ்வாறு வடிவேலு கூறினார்.
No comments:
Post a Comment