தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
அதில்,
ஈரோடு மேற்கு தொகுதியில் இளைஞர் காங்கிரஸ் கட்சித் தலைவர் யுவராஜ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் நேரடி பார்வையில் யுவராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆகையால் ஈரோடு மேற்கு தொகுதியின் நிலவரங்கள் ராகுல்காந்தியின் கவனத்துக்கு அடிக்கடி கொண்டு செல்லப்படுகிறது.
ஈரோடு மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில், ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கம் போட்டியிடுகிறார்.
அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜ் ஆகிய இருவரும் முதல் முதலாக சட்டசபை தேர்தலை எதிர்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடையநல்லூர் தொகுதியில் கடந்த சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பீட்டர் அல்போன்ஸ். இவர் ஏற்கனவே தென்காசி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது மூன்றாவது முறையாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதே தொகுதியில் அதிமுக சார்பில் நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர் செந்தூர் பாண்டியன் போட்டியிடுகிறார். செந்தூர் பாண்டியன் தற்போதுதான் முதல் முறையாக சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாங்குநேரி தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ வசந்தகுமாருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் எர்ணாவூர் நாராயணன் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அறந்தாங்கியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.திருநாவுக்கரசர். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் அட்கட்சியில் இருந்து விலகி, எம்.ஜி.ஆர். அதிமுக என்ற கட்சியை எஸ்.திருநாவுக்கரசர் தொடங்கினார்.
எம்.ஜி.ஆர். அதிமுக சார்பில் அறந்தாங்கியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.திருநாவுக்கரசர், பின்னர் எம்ஜிஆர் அதிமுகவை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.
பாஜக சார்பில் மேல்சபை எம்பினார். பின்னர் பாஜகவில் இருந்து விலகி, சோனியாகாந்தி முன்னிலையில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்திருந்தார். அதன்படி அவரது மனுவை பரிசீலித்த காங்கிரஸ் மேலிடம் அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது.
அறந்தாங்கி தொகுதியில் அதிமுக சார்பில் ராஜநாயகம் போட்டியிடுகிறார்.
நடிகர் எஸ்.வி.சேகர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அக்கட்சியின் தலைமையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி சிறுது காலம் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் எஸ்.வி.சேகர். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்கள் தாக்கல் செய்யும் விருப்ப மனுவை முதன் முதலில் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம் கொடுத்தார் எஸ்.வி.சேகர். அதில் தான் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கேட்டிருப்பதாக எஸ்.வி.சேகர் கூறியிருந்தார்.
ஆனால் இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் எஸ்.வி.சேகர் பெயர் இடம்பெறவில்லை. மயிலாப்பூர் தொகுதியில் ஜெயந்தி தங்கபாலு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திட்டகுடி தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வப்பெருந்தகை, அக்கட்சியில் இருந்து விலகி, பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார்.
பின்னர் கார்த்திக் சிதம்பரம் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது அவருக்கு செங்கம் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு அளித்துள்ளது.
No comments:
Post a Comment