திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ளது அணைப்பட்டி. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இங்குள்ள பாலத்தின் அடியில் ஒரு சாக்கு மூடை கிடந்தது. அனாதையாக கிடந்த இந்த சாக்கு மூடையில் பிணம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து சென்று சாக்கு மூடையை கைப்பற்றி பிரித்து பார்த்த போது, உள்ளே கட்டு கட்டாக பணம் இருந்ததாகவும், அதனை போலீசார் எடுத்துச் சென்றதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவை அனைத்தும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக இருந்ததாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
ஆனால், இந்த தகவலை போலீசார் திட்டவட்டமாக மறுக்கின்றனர். இதுபற்றிய தகவல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் எட்டியது.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகனச் சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு வரப்பட்ட பணமாக இருக்கலாம் என்றும் வாகன சோதனையின் காரணமாக பாலத்தின் அடியில் போட்டு விட்டு சென்றிருக்கலாம் எனவும் பொதுமக்கள் பேச்சு அடிபடுகிறது.
இது குறித்து ஏடிஎஸ்பி சிவக்குமாரிடம் கேட்டபோது, சாக்கு மூடையில் பணம் இருந்ததாக கூறப்படுவது குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணைக்கு பின்னரே பணம் இருந்ததா? அல்லது வெறும் வதந்தியா? என்பது தெரிய வரும், என்றார்.
No comments:
Post a Comment