அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா திருச்சியில் தங்கியிருந்து கடந்த 3 நாட்களாக அ.தி. மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கிராமம்-கிராமமாக பிரசாரம் செய்து வருகிறார்.
நேற்று புத்தூர் நால்ரோடு, சத்திரம் பஸ்நிலையம், கம்பரசம்பேட்டை, ஜீயபுரம், அல்லித்துறை, உய்யகொண்டான் திருமலை உள்ளிட்ட பகுதிகளில் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா பேசியதாவது:-
கடந்த 5 ஆண்டு காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு நீங்கள் ஆளாகி இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். இதில் உங்களை கடுமையாக பாதித்துள்ள பிரச்சினை விலைவாசி உயர்வு ஆகும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கருணாநிதி ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? நிச்சயமாக இல்லை. பெட்ரோல்-டீசல்-கியாஸ் விலை உயர காரணமாக இருந்தார்.
தி.மு.க.வினர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு பணம் கொடுத்து வாக்குகள் கேட்க முடியும். அந்த அளவுக்கு உங்கள் பணத்தை சுரண்டி உள்ளனர். அது அனைத்தும் உங்கள் பணம். என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு மின் உற்பத்தி பெருகவில்லை. மின்வெட்டு தான் அதிகரித்துள்ளது. இதனால் தொழில் உற்பத்தி குறைந்துவிட்டது.
விவசாயம் வீழ்ச்சி அடைந்து விட்டது. ஜவுளிதொழில் முடங்கிவிட்டது. நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்து வேலையில்லா திண்டாட்டம் பெருகிவிட்டது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு என்பது இல்லாமலே போய்விட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
காலாவதியான மருந்துகள் விற்பனை, கள்ள லாட்டரி சீட்டு என பல வழிகளில் ஊழல் நடக்கிறது. அனைத்து அரசு திட்டங்களிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. தமிழக மீனவர்கள் அன்றாடம் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. இவற்றிற்கெல்லாம் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுதான் தான் காரணம் என்பதை மறந்து விடாதீர்கள்.
தமிழர்கள் மீது அக்கறை இல்லாத அரசு மத்திய காங்கிரஸ் அரசு. ஸ்ரீரங்கம் தான் எனது பூர்வீகம். ஸ்ரீரங்கத்திற்கு வருகின்ற போது சொந்த ஊருக்கு வருவது போல் உணர்வு எனக்கு ஏற்படுகிறது. எனது முன்னோர்கள், மூதாதையர்கள் இதே ஸ்ரீரங்கத்தில் தான் பிறந்தார்கள், வளர்ந்தார்கள், வாழ்ந்தார்கள்.
இப்போது நானும் உங்களில் ஒருத்தியாக இருக்க இங்கேயே வந்துவிட்டேன். எனவே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராகிய உங்கள் அன்பு சகோதரியாகிய என்னை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment