இப்போதைக்கு வேட்பாளர் யாரும் மனுதாக்கல் செய்ய வேண்டாம் என்று அதிமுகவினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் இன்னும் முழுமை அடையாத நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளதால் புதிய வேட்பாளர் பட்டியல் 21 ந் தேதி (திங்கட்கிழமை) வெளியிடப்படும். அதுவரை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் யாரும் தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்கள் வேட்பாளர்களின் புதிய பட்டியல் 21ந் தேதி அன்று வெளியான பின்னர் கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் அனைத்து அதிகாரப்பூர்வ வேட்பாளர்களும் 24 ந் தேதி வியாழக்கிழமை அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணிக்குள் தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதற்கு முன்னதாகவே, கடந்த 16ஆம் தேதி இரவு 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக அறிவித்தது. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தேமுதிக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், தனியாக ஆலோசனை நடத்தி மூன்றாவதாக ஒரு அணியை அமைக்க ஆலோசனையில் ஈடுபட்டன.
இதனைத் தொடர்ந்து அக்கட்சிகளுடன் சமரசம் மேற்கொண்ட அதிமுக தலைமை, அக்கட்சிகள் விரும்பிய தொகுதிகளை அளித்தது. அவற்றில் அதிமுக ஏற்கனவே அறிவித்த தொகுதிகளும் இடம்பெற்றுள்ளது.
இதன்படி அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட திண்டுக்கல், கீழ்வேளூர், பெரம்பூர், மதுரை தெற்கு, பெரியகுளம், திருப்பூர் தெற்கு, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி, சிவகங்கை, பவானி, புதுக்கோட்டை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தென்காசி, நாக்குநேரி ஆகிய தொகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டபிடாரம் புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டி பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சிகள் விருப்பிய தொகுதிகளை கொடுத்ததால் இதுவரை 16 தொகுதிகளை அதிமுக இழந்துள்ளது. இன்னம் தேமுதிகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளிலும் அதிமுக சிலவற்றை இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. எனவே புதிய பட்டியலை அதிமுக வெளியிட வேண்டிய நிலையில் உள்ளது.
இதற்கிடையில் மதிமுக நிர்வாகிகளுடனும் அதிமுக தேர்தல் குழு பேசி வருகிறது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்.
No comments:
Post a Comment