முன்னாள் கதாநாயகன் ஜெயலலிதாவுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்ய முடியுமா? ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் உட்காரத் தான் முடியுமா? என, மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின் அங்கு பிரச்சாரம் செய்து பேசுகையில்,
தி.மு.க கூட்டணியை பொறுத்தவரை அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்து பல பிரச்சாரக் கூட்டங்களை நடத்திக் கொண்டு இருக்கிறோம். அதற்கு மாறாக அ.தி.மு.க கூட்டணியில் ஜெயலலிதா எந்த கூட்டணிக் கட்சித் தலைவர்களையாவது தனது மேடையில் ஏற்றுவாரா? அல்லது முன்னாள் கதாநாயகன் ஜெயலலிதாவுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்ய முடியுமா? ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் உட்காரத் தான் முடியுமா?
மக்களுடனும், கடவுளுடனும் தான் கூட்டணி என்று இவ்வளவு நாள் பேசியவர் 30, 40 சீட்டுக்கு கட்சியையும், தொண்டர்களையும் அடக்கு வைக்க மாட்டேன் என்று வீரவசனம் பேசியவரின் இன்றைய நிலை என்ன? தி.மு.கவின் குறிக்கோள் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது ஆகும். இந்த முன்னாள் கதாநாயகனின் நோக்கம் ஜெயலலிதாவின் சிரிப்பில் கடவுளை காண்பதாக இருக்குமோ என்னவோ? தனது கட்சிக்கான 41 தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தை கூட இருவரும் நேரில் சந்தித்து ஏற்படுத்திக் கொள்ளவில்லையே ஏன்?
அ.தி.மு.க கூட்டணி குழப்பமான கூட்டணி. தொடர்ந்து ஜெயலலிதாவை ஆதரித்து வந்த ஒருவர் இன்று ஜெயலலிதாவால் புறந்தள்ளப்பட்டுள்ளார். அவர் இப்போது ஜெயலலிதாவின் ஆணவம், அகம்பாவம் குறையவில்லை என்று குறிப்பிடுகிறார். கூட்டணித் தலைவர்களை மட்டும் அல்ல, மக்களையும் மதிக்காதவர்தான் ஜெயலலிதா. ஜெயலலிதா நல்லாட்சித் தருவார் என்பதை எந்த நம்பிக்கையில் இந்த முன்னாள் கதாநாயகன் கண்டுபிடித்தார் என்பது அவருடைய கடவுளுக்குத்தான் தெரியும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment