உதவி இயக்குனர்களின் கதை சொல்லல் மற்றும் படமாக்கும் திறனை உலகுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியாக கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சிதான் ‘நாளைய இயக்குனர்கள்’. இதையே சற்று வித்தியாசமாகச் செய்திருக்கிறார்கள் விஜய் டிவியினர். லிட்டில் பிக் ஃபிலிம் மேக்கர்ஸ் என்னும் இந்த நிகழ்ச்சி குட்டிப் பசங்களின் கதை சொல்லும் திறனை வளர்க்கவும் அவர்களது கற்பனைத் திறனை வெளிப்படுத்தவும் தொடங்கப்பட்டது. என்னதான் பெரியவர்கள் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தாலும் அதை கேமரா முன்பும் பிரபலங்களின் முன்பும் திறமையாக சொல்லவும் ஒரு தைரியம் வேண்டும்தானே!! அந்த தைரியம் இந்தக் குழந்தைகளுக்கு அசாதாரணமாக இருக்கிறது. அவர்கள் கதை சொல்லும் பாணியே தனி அழகுதான்.
ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஒரு குழந்தையின் கதை படமாக்கப்பட்டுக் குறும்படமாக ஒளிபரப்பாகியது. ஒரு குட்டிப் பையன் தன் அம்மா அப்பாவுடன் பாட்டியின் ஊருக்கு வருகிறான். மிகவும் பழமையான அந்த வீட்டில் தாத்தா இறந்துவிட, பாட்டி மட்டும் தனியாக வசிக்கிறார். இரவு பாட்டியுடன் உறங்கச் செல்லும் அந்தச் சிறுவன் பாட்டிக்குக் கதை சொல்கிறான். ஹாரி பாட்டர் கதை. ஹாரி பாட்டர் என்றால் அவன் பானையெல்லாம் செய்வானா என்று பாட்டி வெகுளியாய் கேட்க, `கதை சொல்லும்போது குறுக்கப் பேசக் கூடாது` என்று அந்தச் சிறுவன் சொல்வதும் அழகு. பாட்டியின் இரண்டு கைகளில் ஒரு கையில் வளையல் இல்லாதிருப்பதைக் கண்ட அச்சிறுவன், `அந்த வளையல் எங்கே பாட்டி’ என்று கேட்கிறான். `தாத்தாதான் எங்கோ ஒளித்துவைத்திருப்பார்` என்று சொல்ல, அந்த வளையலை ஒரு பழைய அறையில் கண்டுபிடிக்கிறான் சிறுவன்.
தேடும்போது அவன் அங்குள்ள தூசிகளிலும் கிரீஸ்களிலும் அழுக்காகிவிட அவனைத் தேடி வரும் அவனது அம்மா, அப்பா, பாட்டி அவனைத் திட்ட அவர்களிடம் அந்த வளையலைக் கொடுக்கிறான் குட்டிப் பையன். அவனை அணைத்துக்கொள்கிறார் பாட்டி.
இதுதான் அந்த குட்டிக்கதை. மூன்று முதல் ஐந்து நிமிடங்களே இருக்கும் இந்தக் குறும்படங்களை இயக்க இந்தச் சிறுவர்களுக்கு ஊக்கமளித்து உதவுகிறார்கள் தேர்ந்த படப்பிடிப்பாளர்களும் விஜய் டிவி குழுவினரும். நடுவர்களாக இயக்குனர் எ.ஆர். முருகதாஸும், நடிகை சுஹாசினியும் குட்டிப் பசங்களை நன்றாக ஊக்குவித்துக் கதை கேட்கிறார்கள். பாராட்டப்பட வேண்டிய நிகழ்ச்சி. இன்று மேலும் ஒரு அழகான குட்டித் திரைப்படம் ஒளிபரபாகிறது. இதில் வி.ஜே. பூஜா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment