கலைஞருக்கு இணையான ஒரு தகுதியாவது எதிரணியில் உள்ள விஜயகாந்த், சரத்குமார், ஜெயலலிதாவுக்கு உண்டா என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசினார்.
திருச்சி திமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,
கலைஞருக்கு உள்ள சங்கடமே அவருக்கு இணையாக தகுதி உள்ள எதிரிகள் தமிழகத்தில் இல்லை. அதுதான் கலைஞருக்கு உள்ள தர்ம சங்கடம். தலைவர் கலைஞரை எதிர்ப்பவர்கள் உண்டு. எதிரிகள் இல்லை. எதிரிகள் என்றால் நமக்கு என்ன தகுதிகள் இருக்கிறதோ, அதற்கு இணையான தகுதிகள் இல்லாவிட்டாலும், ஓரளவுக்காகவது தகுதி இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் தான் எதிரிகள். யார் வேண்டுமானாலும் எதிர்க்கலாம். அவர்கள் எல்லாம் எதிரிகள் அல்ல. எதிர்ப்பவர்கள் வேறு. எதிரிகள் வேறு. தமிழகத்தில் கலைஞருக்கு எதிரிகளே இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை.
கலைஞர் இயல்பாகவே தோன்றிய தலைவர். அவரை எதிர்ப்பதற்காகவே சில தலைவர்கள் தோற்றுவிக்கப்பட்டார்கள். உருவாக்கப்பட்டார்கள். அப்படி உருவாக்கப்பட்டவர்தான் எம்ஜிஆர் அவர்கள். கலைஞரை எதிர்ப்பதற்காகவே அவர் உருவாக்கப்பட்டவர். தோற்றுவிக்கப்பட்டவர். அவருக்கு பிறகு தமிழகத்தில் இருக்கின்ற தலைவர்கள் எல்லாம் தோற்றம் அளிக்கிற தலைவர்கள். கொஞ்சம் சிரமப்பட்டாவது சிரித்து பேசு மற்றவர்களிடம் என்று சொல்லி உட்காரவைத்து சிரிக்கச்சொல்வார்கள். மேடைக்கு வரும்போதாவது கொஞ்சம் நேரம் உள்ளுக்குள் போடாமல் பேசு என்று சொல்லி மேடையிலே ஏற்றி வந்து நிறுத்துவார்கள். ஏதாவது எழுதி தந்தாவது படி என, அறிக்கையை எழுதித் தந்து படிக்கச் சொல்வார்கள். அப்படி எழுதித் தருகிற அறிக்கையை படிக்கிற தலைவர்கள். அவர்கள் தோற்றம் அளிக்கிற தலைவர்கள்.
இதைத்தான் எனக்கு முன்னாள் பேசியவர்கள் சொன்னார்கள். ஒப்பிட்டு பார்க்கக் கூட தகுதி இல்லாதவர்கள் எல்லாம், கலைஞரை எதிர்க்கிறார்கள் என்று சொன்னார்கள். யாரெல்லாம் எதிர்க்கிறார்கள். 4 ஆண்டுக்கு முன்பு கட்சித் தொடங்கிய ஒருவர். 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்சித் தொடங்கிய ஒருவர். 2 ஆண்டுக்கு முன்பு கட்சியை தொடங்கியவர்கள்.
கலைஞர் 75 ஆண்டு காலம் தமிழகத்திலே கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழன்று சுழன்று வந்து, அவர் சுற்றாத தொடாத கிராமங்களே இல்லை என்ற அளவுக்கு சுற்றி சுழன்று வந்து பணியாற்றியவர். அன்று கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றி சுழன்று வந்து பணியாற்றியவர், இன்று சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு சுற்றி சுழன்று வந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.
75 ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ள கலைஞரை எதிர்க்கிறார்கள். யாருடைய தலைமையிலே 1984ஆம் ஆண்டு ஒரே ஒரு நாள் அறிக்கையை வாங்கி படித்துவிட்டு, எனக்கு இந்த கொள்கைகள் எல்லாம் பிடித்திருக்கிறது என்று கடலூரிலே வந்து கட்சியிலே சேர்ந்தவர்.
கலைஞருக்கு இணையான ஒரு தகுதியாவது எதிரணியில் உள்ளவர்களுக்கு உண்டா. சமூக நீதி என்றால் என்ன என்று ஒரு 10 வரி எழுத முடியுமா. கேப்டனால். ஒரு பத்து வரி பேச முடியுமா நடிகர் சரத்குமாரால். ஒரு பத்து வரி மேடைகளிலே உரையாற்ற முடியுமா அம்மா அவர்களால். சமூக நீதி என்ற சொல்லுக்கு பொருள் தெரியாதவர்கள் கலைஞரை எதிர்க்கிறார்கள்.
திராவிட இயக்க கொள்கைகள் என்றால் என்ன. அண்ணா சொன்ன கொள்கை எது. மாநில சுயாட்சிதான் அண்ணாவின் இறுதி மூச்சு கொள்கையாக இருந்தது என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த மாநில சுயாட்சியை பற்றி ஓரிரு வரிகளாகவது எழுதுகிற ஆற்றல் கலைஞரை எதிர்ப்பவர்களுக்கு உண்டா. என்ன தகுதி இருக்கிறது.
கலைஞரை போல குறளோவியம் எழுத வேண்டாம். கலைஞரைப் போல தொல்காப்பிய பூங்கா எழுத வேண்டாம். கலைஞரைப் போல இலங்கிய நடையிலே அறிக்கைகள் எழுத வேண்டாம். சொந்தமாக சுயமாக ஒரு பிரச்சனையைப் பற்றி அறிக்கை எழுதுகிற ஆற்றல் அந்த எதிரணியில் இருப்பவர்களுக்கு உண்டா. எந்த தகுதியுமே இல்லை. மக்களை நேரிக்கிற பண்பு உண்டா. கலைஞரை விமர்சிப்பது மட்டும்தான் அவர்களது கொள்கை.
எம்ஜிஆர் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, கலைஞர் மக்களை பார்த்து சொன்னார், எம்ஜிஆர் என்னுடைய நண்பர். அவருடன் எனக்கு ஏற்பட்ட 12 ஆண்டுகால பகையை காட்டிலும், 40 ஆண்டு கால நட்பே என் நெஞ்சில் மேலோங்கி நிற்கிறது. தமிழக மக்களே எம்ஜிஆர் மீது விசுவாசமுள்ளவர்களே, ஆட்சியே திமுகவிடம் ஒப்படையுங்கள். என் நண்பர் வந்தவுடன் ஒப்படைத்துவிடுகிறேன். எம்ஜிஆர் பெயரைச் சொல்லி இங்கே நாடகமாடுகிறவர்களிடம் ஒப்படைத்துவிடாதீர்கள் என்று எச்சரித்தார். ஏன், அப்படி அவர் சொன்னதில் என்ன வெளிப்படுகிறது. தன்னை எதிர்க்கிற அரசியல் தலைவரை கூட, எம்ஜிஆரை கூட நாகரீகத்தோடு நண்பர் என்று எழுதியவர், பேசியவர் இன்றும் எழுதிக்கொண்டிருப்பவர் கலைஞர். ஆனால் கலைஞரை எதிர்க்கிற அவர், மூச்சுக்கு முன்னூறு முறை கருணாநிதி என்று பக்குவமில்லாத, நாகரீகம் இல்லாதவர்கள் தமிழகத்தில் கலைஞரை எதிர்த்து அரசியல் நடத்துகிறார்கள். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
இன்றைய பதிவுகள்...
- ஜெ., விஜயகாந்துக்கு நடிக்கத் தெரியாது: பிரேமலதா
- விமர்சிக்க வேண்டாம்: வைகோ வேண்டுகோள்
- மக்கள் மனதை அறியாதவர் ஜெ. சுய விளம்பரம் தேடும் சீம...
- கற்பு முடிந்து போன விஷயம் - குஷ்பு பேட்டி
- கூவத்துடனா கூட்டணி வைக்க முடியும்? விஜயகாந்த்
- ஓட்டுகளை பெற, முகம் சுளிக்கும் அளவுக்கு தேர்தல் வா...
- எதிர்க்கட்சிக்கு சாதகமாக தேர்தல் ஆணையம்!- கருணாநித...
- தொப்புளில் பம்பரம் விடுவேன் - விஜயகாந்த்
No comments:
Post a Comment