சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜனதா உள்ளிட்ட 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் 77.52 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப் பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்புடன், ஓட்டு எண்ணும் மையமான புளியங்குடி வீராசாமி செட்டியார் என்ஜினீயரிங் கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளன. இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
மொத்தம் 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும். முதலில், தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும். அதையடுத்து அரை மணி நேரம் கழித்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே யார் அதிக ஓட்டு பெற்று இருக்கிறார்கள் என்ற முன்னணி நிலவரம் வெளிவரத் தொடங்கும். பகல் 11 மணிக்குள் தேர்தல் முடிவு தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தைச் சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 300-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment