மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரியாக கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை தயாநிதி மாறன் பதவி வகித்தார். அப்போது, தொழில் அதிபர் சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனம், 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்சு கோரி விண்ணப்பித்தது. ஆனால், அந்த நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு நிர்பந்தித்து, ஸ்பெக்ட்ரம் லைசென்சு வழங்காமல் தயாநிதி மாறன் இழுத்தடித்ததாக சிவசங்கரன் குற்றம் சாட்டி இருந்தார்.
அதன்பேரில், மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவனத்தை விற்ற பிறகுதான், ஸ்பெக்ட்ரம் லைசென்சை தயாநிதி மாறன் வழங்கியதாகவும், இதற்கு பிரதிபலனாக, ரூ.550 கோடி லஞ்சம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு தயாநிதி மாறன், மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
ரூ.550 கோடி லஞ்சம் கைமாறிய விவகாரம் தொடர்பாக, கடந்த மாதம் தயாநிதி மாறன் மீதும், அவருடைய சகோதரரும், சன் டி.வி. நிர்வாக இயக்குனருமான கலாநிதி மாறன் மீதும் அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது. சட்டவிரோத பணபரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறனுக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.
வருகிற 20-ந் தேதி, தயாநிதி மாறனோ அல்லது அவரது அதிகாரப்பூர்வ பிரதிநிதியோ நேரில் ஆஜராகுமாறு அமலாக்கப்பிரிவு கூறியுள்ளது. மறுநாள் (21-ந் தேதி) கலாநிதி மாறனோ அல்லது அவரது அதிகாரப்பூர்வ பிரதிநிதியோ ஆஜராக வேண்டும் என்று அமலாக்கப்பிரிவு கூறியுள்ளது. இருவரும் தங்கள் தனிப்பட்ட பணபரிவர்த்தனை மற்றும் வர்த்தகம் தொடர்பான பணபரிவர்த்தனைக்கான ஆவணங்களுடன் விசாரணைக்கு வருமாறு அமலாக்கப்பிரிவு கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில், இருவருக்கும் நெருக்கமான சிலரிடம் அமலாக்கப்பிரிவு ஏற்கனவே விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது. மேலும், தனிப்பட்ட நபர்கள் சிலரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. இதுதவிர, இதே குற்றச்சாட்டின் பேரில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் பற்றி சி.பி.ஐ.யும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில், அன்னிய செலாவணி சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகிறது.
No comments:
Post a Comment