இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் நகரில் ஒரு மிகப் பழமையான கல்லறையை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இது கிபி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது. இது இயேசுநாதர் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையாக இருக்கலாம் என்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இயேசுநாதரின் உடல் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் உறுதியாக கூறுகின்றனர்.
ஒரு நவீன அடுக்குமாடி வளாகத்தின் அடியில் அமைந்திருக்கிறது இந்தக் கல்லறை, கி.பி. 70-ம் ஆண்டுக்கு முந்தையதாகக் கருதப்படுகிறது. இயேசு நாதரின் ஆரம்ப கால சீடர்கள் இதை அமைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
கல்லறையில் இருக்கும் சுண்ணாம்புக் கல்லால் ஆன பெட்டியில் "புனித ஜெகோவா விழித்தெழு' என்று கிரேக்க மொழியில் குறிப்பிடப்பட்டிருப்பதை ரிமோட் கன்ட்ரோல் கேமரா உதவியுடன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
இதேபோன்ற மற்றொரு பெட்டியில் பெரிய மீனின் வாயில் மனிதன் சிக்கியிருப்பதைப் போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இது பைபிளில் கூறப்பட்டிருக்கும் ஜோனா என்கிற தேவதூதரின் கதையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஜோனாவை விழுங்கிய பெரிய மீன் அல்லது திமிங்கலம், பிறகு அவரை விட்டுவிட்டதாக பைபிளில் கூறப்பட்டிருக்கிறது. மீனின் உருவத்தை கணினியின் உதவியுடன் பெரிதாக்கிப் பார்த்தபோது, அது ஜோனாவின் கதையைப் பிரதிபலிப்பதாக இருப்பது தெரியவந்தது.
கல்லறைப் பெட்டிகளில் செதுக்கப்பட்டிருக்கும் வாசகம், மீனின் உருவம் ஆகியவை "உயிர்த்தெழுதல்' என்கிற கிறிஸ்தவ நம்பிக்கையைக் காட்டும் வகையில் அமைந்திருப்பதாக "லைவ் சயின்ஸ்' பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.
பெரும்பாலான கிறிஸ்தவர்களின் கல்லறைகளில் ஜோனாவின் கதை பொறிக்கப்படுவது வழக்கமானதுதான் என்றாலும், அவற்றில் எதுவும் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையல்ல.
முதலாம் நூற்றாண்டுக் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பற்றிய தகவலை இணையதளத்தில் "பைபிளும் விளக்கமும்' என்கிற தலைப்பில் அகழ்வாராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். "இயேசுவின் கல்லறை' என்பது பற்றிய தங்களது விளக்கம் சர்ச்சைக்கு இடமாகக்கூடும் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
இருப்பினும் இப்போது ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் இந்தக் கல்லறை 1981-ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாகும். ஆனால், கல்லறைகளைத் தோண்டுவதை எதிர்க்கும் யூதக் குழுக்கள் அதை ஆய்வு செய்வதை எதிர்த்தனர். இதனால், ஆய்வாளர்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அந்தக் கல்லறை சீலிடப்பட்டு இப்போது இருக்கும் இடத்தில் புதைக்கப்பட்டது.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய அகழ்வாராய்ச்சிக் குழுவின் தலைவரான தபோரும் அவரைச் சேர்ந்தவர்களும் கல்லறையைத் தோண்டுயெடுப்பதற்கு அனுமதி பெற்றனர். யூத அமைப்புகளின் கடும் எதிர்ப்பையடுத்து, கல்லறையைத் தோண்டுவதற்குப் பதிலாக ரிமோட் கண்ட்ரோல் உதவியுடன் இயங்கும் இயந்திரக் கைகள் பொருத்தப்பட்ட கேமராக்களை துளைகள் வழியாக கல்லறைப் பகுதிக்குள் அனுப்பி ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இயேசு நாதர் வாழ்ந்த வீடு என்று கூறி ஒரு மிகப் பழமையான வீட்டை பெத்லகேமில் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர் என்பது நினைவிருக்கலாம். தற்போது இயேசுநாதரின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment