4 நாடுகள் பங்குபெறும் ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி வங்க தேசத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் தொடங்கிய ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இந்திய அணி இரண்டு மாற்றங்களை செய்திருந்தது. ரவீந்திர ஜடேஜா, வினய் குமார் ஆகியோருக்கு பதிலாக யூசுப் பதான், டிண்டா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பாகிஸ்தான் அணியில் சர்பிராஸ் அகமதுவுக்கு பதிலாக வகாப் ரியாஸ் இடம் பெற்றார்.
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹபீஸ், நசீர் ஜம்ஷத் ஆகியோர் தொடக்கம் முதலே இந்தியாவின் பந்துவீச்சை நேர்த்தியாக கையாண்டு விளையாடினர். அவர்கள் விக்கெட்டை இந்திய பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் ரன் விகிதம் அதிகரித்தது.
சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதம் அடித்தனர். இறுதியில் 224 ரன் எடுத்திருக்கும்போது பாகிஸ்தான் தொடக்க விக்கெட்டை அஸ்வின் பிரித்தார். பாகிஸ்தான் அணி 35.5 ஓவரில் 224 ரன் எடுத்திருக்கும்போது 112 ரன் எடுத்திருந்த ஜம்ஷத் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து 2வது விக்கெட்டாக உமர் அக்மல் களம் இறங்கினார். மேலும் 1 ரன் சேர்த்த நிலையில் பாகிஸ்தான் அடுத்த விக்கெட்டை இழந்தது. ஹபீஸ் 105 ரன் எடுத்த நிலையில் டிண்டா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.
அடுத்து கம்ரான் அக்மலுடன் யூனிஸ்கான் ஜோடி சேர்ந்தார். உமர் அக்மல் 28 ரன் எடுத்த நிலையில் பி.குமார் பந்தில் அவுட்ஆனார். அப்போது பாகிஸ்தான் 42.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 273 ரன் எடுத்திருந்தது. அடுத்து யூனிஸ்கானுடன் அப்ரிடி ஜோடி சேர்ந்தார். அப்ரிடி அதிக நேரம் நீடிக்கவில்லை. 9 ரன் எடுத்த நிலையில் இ.பதான் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது பாகிஸ்தான் ஸ்கோர் 47.4 ஓவரில் 313/4 ஆக இருந்தது. அடுத்து 5வது விக்கெட்டுக்கு யூனிஸ்கானுடன் அஸாம் ஜோடி சேர்ந்தார். பாகிஸ்தான் 323 ரன் எடுத்திருக்கும்பொது யூனிஸ்கான் 52 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் அஸாம் உடன் ஜோடி சேர்ந்தார். அஸாம் 4 ரன்னில் டிண்டா பந்தில் ஆட்டம் இழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் பாகிஸ்தான் 6 விக்கெட்டை இழந்து 329 ரன் குவித்துள்ளது.
330 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா அடுத்து களம் இறங்கியது. இந்தியாவிற்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஹபீஸ் வீசிய 2வது பந்தில் காம்பீர் ரன் ஏதும் எடுக்காமல் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்து டெண்டுல்கருடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார்.
இருவரும் நேர்த்தியான முறையில் பாகிஸ்தான் பந்து வீச்சை எதிர்கொண்டு ரன் சேர்த்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். இன்றைய போட்டியிலும் டெண்டுல்கர் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 52 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 19.3 ஓவரில் 133 ரன்னாக இருந்தது.
அடுத்து வீராட் கோலியுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இது அவரது 11-வது சதமாகும். இதன் பின் விராட் கோலி விஸ்வரூபம் எடுத்தார். அவருக்கு ஜோடி சேர்ந்த ரோகித் சர்மாவும் தன் பங்குக்கு அரை சதத்தை கடந்தார். மறுமுனையில் பாகிஸ்தான் பந்துவீச்சை தவிடு பொடியாக்கிய கோலி 150 ரன்களை கடந்தார். 68 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மா உமர் குல் பந்தில் அப்ரிடியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா கோலியுடன் ஜோடி சேர்ந்தார். 183 ரன்கள் எடுத்த நிலையில் திறமையாக விளையாடிய கோலி உமர்குல் பந்துவீச்சில் ஹபீஸிடம் கேட்ச் ஆனார். அவரது அதிரடியில் 22 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். அதன்பின் கேப்டன் தோனி ரெய்னாவுடன் இணைந்தார்.
இருவரும் சேர்ந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் 2 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் இந்தியா வெற்றிக் கனியை சுவைத்தது. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா. சுரேஷ் ரெய்னா 12 ரன்களுடனும், தோனி 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
No comments:
Post a Comment