வேளச்சேரியில் ஐந்து பேரை என்கவுண்டரில் காலி செய்து விட்ட சென்னை போலீஸார் தற்போது அது தொடர்பாக எழுந்து வரும் பிரச்சினைகளிலிருந்து எப்படித் தப்புவது என்ற பெரும் யோசனையில் உள்ளனராம்.
வங்கிக் கொள்ளையில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட ஐவரை போலீசார் சுட்டுக் கொன்ற என்கவுன்டர் சம்பவத்தில், சென்னை போலீசுக்கு அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் போலீசுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வந்த பொதுமக்களில் கணிசமானோர், என்கவுன்டரில் எழுந்துள்ள சந்தேகங்கள் காரணமாக, போலீசார் அவசரப்பட்டு விட்டனர். உயிருடன் பிடித்து அதிகபட்ச தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த என்கவுன்டர் நடந்தது எப்படி என்பது குறித்து போலீஸ் தரப்பிலேயே இப்போது சில உண்மைகளை கசியவிட்டுள்ளனர்.
வேளச்சேரியிலிருந்து கொள்ளையர் குறித்த தகவல் வந்ததுமே, சாதாரண உடை அணிந்த போலீஸ் டீம், வினோத் குமார் தங்கியிருக்கும் வீட்டை அடையாளம் கண்டு தீவிரமாகக் கண்காணித்தது. அதே சமயம் அந்தப் பகுதி முழுக்க இரவு 9 மணியிலிருந்தே போலீசார் அங்கங்கே குவிக்கப்பட்டிருந்தனர்.
பத்துமணிவாக்கில், அந்தப் பகுதி பொதுமக்கள், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. கதவு, ஜன்னல்களைத் திறக்கக் கூடாது என வெளிப்படையாக எச்சரிக்கப்பட்டனர். சாலை, தெருக்களில் தடுப்புகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டமும் அங்கே முற்றாக நிறுத்தப்பட்டது.
11 மணியளவில் உயரதிகாரிகள் தலைமையில் ஆயுதம் தாங்கிய போலீஸ்சம்பவ இடத்துக்கு வந்துள்ளது. ஒருசில நிமிட ஆலோசனைக்குப் பின், போலீஸ் டீம் அந்த மாடி வீட்டின் கீழ்போர்ஷன் கதவைத் தட்டியுள்ளது.
போலீஸை எதிர்பார்க்காத இளைஞர்கள் கதவைத் திறந்தனர். சடசடவென உள்ளே புகுந்த போலீஸ் துப்பாக்கி முனையில் அவர்களை வளைத்துள்ளது. அதிர்ச்சியில் இருந்து விலகாத அவர்களிடம், வங்கிக் கொள்ளையில் அவர்களின் பங்கு பற்றி சில கேள்விகள் கேட்டது போலீஸ்.
அடுத்த நொடியே அவர்களில் ஒருவனை சட்டையைக் கழற்ற வைத்து அவனது கைகளும் மற் றொருவனின் சட்டையால் அவனது கால்களும் கட்டப்பட, அவன் தரையில் உருட்டப்பட்டான். படபடவென துப்பாக்கி குண்டுகள் மூலம் அவன் என்கவுன்டர் செய்யப்பட்டான். கண்ணெதிரில் தங்கள் ஆள் சுடப்பட்டு சாவதைப் பார்த்து மற்றவர்கள் உறைந்து நின்றனராம்.
அடுத்து ஒரு அதிகாரி வெளியே சென்று செல்போனில் 7 நிமிடம் பேசினாராம். போனில் வந்த உத்தரவுப்படி, கிடுகிடுவென மற்ற 4 பேரும் அதே பாணியில் கை, கால்கள் கட்டப்பட்டு தரையில் உருட்டப்பட்டனர். கீழே கிடந்தவர்கள், விட்டுவிடும்படி எவ்வளவோ கெஞ்சியும், அவர்களுக்கு அவகாசமே கொடுக்காமல் வரிசையாக பட்பட்டென்று சுட்டு முடித்துவிட்டனராம். 15 நிமிடத்துக்குள் மொத்தமும் முடிந்துவிட்டதாம்.
சிறிய ரக கைத்துப்பாக்கியால் போலீசார் இந்த என்கவுன்டரை நடத்தியுள்ளனராம். இந்த ரக துப்பாகிகளால் மிக அருகில் வைத்துதான் சுட்டுக் கொல்ல முடியும். எதிரிகளை ஜன்னல் வழியாக சுடுவது என்றால் ரைபிளால்தான் சுட முடியும். அப்போதுதான் அது ஜன்னலைக் கூட துளைத்துக்கொண்டு பாயும். போலீஸ் அப்படி ரைபிளால் சுட்டிருந்தால் சுவரெல்லாம் ரத்தம் சிதறியிருக்கும். அவர்களை கயிறுக்கு பதில் துணியால் கை, காலைக் கட்டியதற்கு காரணம் கட்டிப்போட்டு சுட்ட தடயங்கள் உடம்பில் இருக்காது என்பதற்குத்தான் என்கிறார்கள்.
அதேநேரம் அந்த இளைஞர்கள் போலீசாரை திருப்பிச் சுடவில்லை என்றும் அப்படி சுட்டிருந்தால், சுடப்பட்டவர்களின் உடம்பில் துகள்கள் படிந்திருக்கும், படிந்த இடம் கருகிப்போயிருக்கும். ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டாரா இல்லையா என்பதை ஜி.எஸ்.ஆர். என்கிற டெஸ்ட் மூலம் கண்டுபிடித்துவிடலாம், என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்டுபிடிப்பார்களா, காவல்துறைக்கு மேலும் சிக்கல்கள் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...
No comments:
Post a Comment