ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் ஜெனீவாவில் நடைபெறுகிறது. இதில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறலுக்கு எதிரான வரைவு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. இதன் மீதான வாக்கெடுப்பு 23 அல்லது 24-ந்தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கை தீவிர முயற்சி செய்து வருகிறது. இதற்காக பல மாதங்களாக பல்வேறு நாடுகளுக்கு தனது பிரதிநிதிகளை அனுப்பி ஆதரவு திரட்டியது. அந்த நாடுகளும் அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பதாக உறுதி அளித்து இருந்தன.
இந்த நிலையில், இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன்சிங் பாராளுமன்றத்தில் அறிவித்து உள்ளார். இதனால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது. என்றாலும் டெல்லி மேல்-சபையிலும், ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.
ஏற்கனவே இலங்கைக்கு ஆதரவு கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்த பல நாடுகள், அமெரிக்காவின் வற்புறுத்தல் காரணமாக அந்த முடிவில் இருந்து பின்வாக்கத் தொடங்கி விட்டன.
குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் பெரும்பாலானவை இலங்கைக்கு எதிரான முடிவை எடுக்கும் நிலைக்கு வந்துள்ளன. இந்தியாவின் அணுகு முறையை கவனித்து, ஓட்டெடுப்பின்போது முடிவை தீர்மானிக்கலாம் என்று பல நாடுகள் திட்டமிட்டு இருந்தன. அந்த நாடுகள் ஆதரவையும் இப்போது இலங்கை இழக்கும் நிலை உருவாகி இருக்கிறது என்று ஜெனீவாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடித்து விடலாம் என்ற ராஜபக்சேயின் இறுதி கட்ட முயற்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இலங்கை அரசு பெரும் கவலை அடைந்துள்ளது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 47 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் 46 நாடுகள் வாக்களிக்கலாம். அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே 22 நாடுகள் அறிவித்து விட்டன.
இப்போது இந்தியாவும் ஆதரிப்பதால் ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 23 ஆகி சம நிலையில் உள்ளது. மேலும் பல நாடுகள் ஆதரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரப்படும் தீர்மானம் வெற்றி பெறும் நிலை உருவாகி இருக்கிறது.
No comments:
Post a Comment