கூடங்குளத்தை கிட்டத்தட்ட சுற்றி வளைத்துவிட்டது போலீஸ். அணுஉலை உள்ள பகுதிக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சுற்றுப் பகுதி மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதும் தடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் போராட்டக்காரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, அணு உலையை பிரச்சினையின்றித் திறக்க மத்திய மாநில அரசுகள் முயல்கின்றன.
இன்னுமொரு என்கவுன்டருக்குத் தயாராவது போன்ற முன்னேற்பாடுகளை கூடங்குளத்தில் செய்து வருகிறது போலீஸ் என்கிறது அங்கிருந்து வரும் தகவல்கள்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்குழு தலைவர் உதயகுமார் தலைமையில் கடந்த 7 மாத மாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்குழுவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையொட்டி 4 தொண்டு நிறுவனங்களுக்கு வரக்கூடிய வெளிநாட்டு நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் உள்ளன. இந்த தொண்டு நிறுவனங்களை தமிழக கியூ பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
தொண்டு நிறுவனங்கள் இதுவரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தது. தற்போது தொண்டு நிறுவனங்களை கண்காணிக்க மாநில போலீசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த அதிகாரம் கியூ பிரிவு போலீசாருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 5 ஆயிரம் தொண்டு நிறுவனங்களையும் போலீசார் பட்டியல் போட்டு கண்காணித்து வருகிறார்கள்.
தமிழக அரசு சார்பில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தனது அறிக்கையை 2 நாட்களுக்கு முன்பு முதல்வரிடம் ஜெயலலிதாவிடம் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் கூடங்குளம் சென்று ஆய்வு நடத்தினார். பக்கத்து கிராமங்களில் இருந்து கூடங்குளம் செல்லும் சாலைகளை அவர் ஆய்வு செய்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்பட்டால் போராட்டம் வலுவடையும் வாய்ப்பு உள்ளது. அப்போது அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பக்கத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூடங்குளம் நோக்கி திரண்டு வருவார்கள். எனவே கூடங்குளத்துக்கு எந்தெந்த சாலை வழியாக திரண்டு வர முடியும். அவர்களை எங்கே தடுத்து நிறுத்துவது என்பது பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதன் மூலம் கூடங்குளம் அணுமின் நிலையம் முழுமையான போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு விட்டது.
அடுத்த சில தினங்களில் மிக மோசமான நிலைமை கூடங்குளம் பகுதியில் உருவாகும் என்பதை, சில உளவுப் போலீசார் கிராமப்பகுதி மக்களிடம் சொல்லி பயமுறுத்த ஆரம்பித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment