ஐகோர்ட்டில் ஊழல் வழக்கு ரத்தானதை தொடர்ந்து எடியூரப்பா மீண்டும் முதல்-மந்திரி ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கர்நாடகத்தில் பாரதீய ஜனதா ஆட்சியைப் பிடித்ததும் எடியூரப்பா முதல்- மந்திரி ஆனார். பதவி ஏற்றது முதல் அடுத்தடுத்து புகார்களில் சிக்கினார். இதில் மீண்ட அவர் சட்டவிரோத சுரங்க ஊழல் புகாரில் மீள முடியவில்லை.
லோக் ஆயுக்தா அறிக்கையில் எடியூரப்பா மீது குற்றம் சாட்டப்பட்டது. மாநில கவர்னர் அவர் மீது வழக்கு தொடர அனுமதி அளித்தார். இதனால் முதல்-மந்திரி பதவியை இழந்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் எடியூரப்பா கைதாகி சிறைக்கு சென்றார். அதன் பிறகு ஜாமீனில் விடு தலையானார்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் எடியூரப்பா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இருந்து எடியூரப்பாவை விடுவித்து நேற்று ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. இது எடியூரப்பாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எடியூரப்பா பதவி இழந்ததும் தனது ஆதரவாளரான சதானந்த கவுடாவை முதல்- மந்திரி ஆக்கினார். ஆனால் இரு வருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சதானந்த கவுடாவை நீக்கிவிட்டு மீண்டும் முதல்-மந்திரியாக முயற்சி செய்து வந்தார். ஆனால் கட்சி மேலிடத்தில் ஆதரவு இல்லாததால் அவரது முயற்சி தோல்வி அடைந்தது.
தற்போது கோர்ட்டு அவர் மீதான வழக்கை ரத்து செய்து இருப்பதால் எடியூரப்பா மீண்டும் முதல்-மந்திரி பதவியை கைப்பற்ற திட்டமிட்டு இருக்கிறார். குற்றமற்றவர் என்று கோர்ட்டு தீர்ப்பளித்ததால் தன்னை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்று மேலிடத்திடம் கோரிக்கை விடுத்து உள்ளார். இதனால் எடியூரப்பாவுக்கு மீண்டும் முதல்-மந்திரி பதவி வழங்கப்படலாம் என்று கர்நாடக மாநில பா.ஜனதாவினர் மத்தியில் எதிர் பார்ப்பு எழுந்து உள்ளது.
இதுபற்றி பெங்களூரில் பா.ஜனதா பொதுச் செயலாளர் சி.டி.ரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுரங்க முறைகேடு தொடர்பான லோக் அயுக்தா இறுதி அறிக்கையில் பெயர் இடம்பெற்றதை தொடர்ந்து கட்சி மேலிட உத்தரவின் பேரில் எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். தற்போது எடியூரப்பா மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இந்த உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் எடியூரப்பா குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, அவருக்கு மீண்டும் கர்நாடக முதல்-மந்திரி பதவி வழங்குவது குறித்து பா.ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு கூடி முடிவு செய்யும்.
கட்சியின் நலன் கருதி உயர்மட்டக்குழு எடுக்கும் முடிவை ஏற்போம். வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ள உடுப்பி-சிக்மகளூர் பாராளுமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு, அந்த தொகுதியில் எடியூரப்பா தேர்தல் பிரசாரம் செய்வார். இந்த இடைத் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment