போர் என்ற பெயரில் பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
'குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு' எதிராக ஐ.நா. மனித உரிமைக் குழுவில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை ஆதரிக்க மாட்டோம் என்று இந்தியா தெரிவித்திருப்பதன் மூலம், இலங்கையைக் காக்க இந்தியா முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
எனவே போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை இந்தியா ஆதரிக்காது என்ற தைரியம் இலங்கைக்கு வந்திருக்கிறது.
ஐ.நா. மனித உரிமைக் குழுவின் 19வது கூட்டம் பிப்ரவரி 27-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இலங்கை ராணுவத்தினர் புரிந்த போர்குற்றம் தொடர்பாக இதில் விவாதிக்கப்பட உள்ளது.
போர்க் குற்றங்கள் உள்ளிட்டவை தொடர்பாக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை நடந்த மனித உரிமைக் குழுக் கூட்டத்தின்போது, இந்தியா சார்பில் வாசிக்கப்பட்ட அறிக்கையில், "குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு எதிரான தீர்மானங்கள், மனித உரிமைக் குழுவின் ஆக்கப்பூர்வமான பேச்சுகளையும் அனைத்துத் தரப்புகளின் ஒத்துழைப்புடனான அணுகுமுறையையும் வலுவிழக்கச் செய்யும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
"நோக்கம் சார்ந்த, வெளிப்படைத் தன்மை கொண்ட, அரசியல் கலவாத, மோதல்களை ஆதரிக்காத கொள்கைகளில்தான் மனித உரிமைக் குழுவின் வலிமை அடங்கியிருக்கிறது. இந்தப் பண்புகளைக் காக்க வேண்டுமென்றால், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தன்மை, உறுதியான பேச்சுகள், ஒத்துழைப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்" என்று இந்தியா கூறியிருக்கிறது.
இந்தியாவின் இந்த அறிக்கை மனித உரிமைக் குழுவின் இணையதளத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது.
'இப்போது அவசியமில்லை!'
ஒரு குறிப்பிட்ட நாட்டின் மனித உரிமை நிலை பற்றி விவாதம் நடத்துவது அவசியம் வேண்டும் என்றால், வழக்கமாக நடக்கும் உலகம் முழுவதுமான ஆய்வின்போது அதைச் செய்யலாம். இப்போது அதற்கான அவசியம் இல்லை, என்று இந்தியா கருதுவது இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதுமான ஆய்வின்கீழ் ஒவ்வொரு நாட்டிலுள்ள நிலைமையும் மனித உரிமைக் குழுவில் பரிசீலிக்கப்படும். அந்த வகையில், இலங்கையின் மனித உரிமை நிலைமை பற்றிய முன்மொழிவு வரும் அக்டோபரில்தான் வரவிருக்கிறது.
எல்எல்ஆர்சி எனப்படும் போர்ப் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையம் அளித்திருக்கும் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு, அதுவரை தங்களுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று இலங்கை ஏற்கெனவே கோரியிருக்கிறது.
இந்தக் கோரிக்கைக்கு இந்தியாவும் ஆதரவளித்துள்ளது. இப்போது இந்தியாவின் ஆதரவு முழுவதுமாக இருப்பது இலங்கைக்குப் புரிந்துவிட்டதால், நெருக்கடி தீர்ந்த மகிழ்ச்சியில் அறிக்கை வெளியிட ஆரம்பித்துள்ளனர்!
போலி வேடம் போடும் தமிழக காங்கிரஸ் தலைமை என்ன சொல்லப் போகிறது? தமிழக காங்கிரஸ் தலைவரின் நேற்றைய அறிக்கையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும் என்றாரே, என்ன சொல்லப் போகிறார்.நேற்றைய புதிய தலைமுறை தொலைக்காட்சியில் போர்க் குற்ற ஒளிபரப்பை பார்த்த மக்களிடம் மீண்டும் பொய் உரைக்கப் போகிறாரா?
ReplyDelete