நதிகள் இணைப்பு திட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என்ற கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி தெரிவித்தார்.
தேசிய அளவில் நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக சிறப்பு குழு ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இதற்கு கேரளாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற மந்திரிகள் கூட்டத்திற்கு பின் கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
நதிநீர் இணைப்பு விவகாரம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு கேரள மாநிலத்திற்கு பொருந்தாது. ஏனென்றால், இதுவரையில் நதிநீர் இணைப்பு தொடர்பாக எந்தவிதமான ஒப்புதலையும் கேரள அரசு வழங்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளவாறு நதிநீர் இணைப்பை மேற்கொண்டால் கேரள மாநிலம் மிகவும் பாதிக்கப்படும். எனவே, நதிநீர் இணைப்பு தொடர்பான எந்தவித திட்டத்தற்கும் கேரள அரசு ஒத்துழைப்பு வழங்காது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதேபோன்று, இத்தாலி சரக்கு கப்பல் பாதுகாவலர்களால், இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், கோர்ட்டுக்கு வெளியே எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது என்று உம்மன் சாண்டி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கொலை வழக்கு சம்பந்தமாக, கோர்ட்டுக்கு வெளியே சமரசம் செய்து தீர்த்துக் கொள்வதற்கு இந்திய சட்டத்தில் இடம் கிடையாது. இந்த விஷயத்தில் இத்தாலி ஊடகங்கள் தொடர்ந்து தவறான செய்திகளையே வெளியிட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment