இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் கூறிய விளக்கத்திற்கும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசியுள்ள பேச்சுக்கும் இடையே ஆறு வித்தியாசம் அல்ல, 6000 வித்தியாசங்கள் உள்ளன. இதன் மூலம் இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மீண்டும் ஒரு இரட்டை வேட நாடகத்தை அரங்கேற்றப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா, நார்வே உள்ளிட்ட சில நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தை உறுதிபட ஆதரிக்கிறோம் என்று இந்தியா இதுவரை அறிவிக்கவே இல்லை. இதை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் என ஒட்டுமொத்த தமிழ்நாட்டுத் தலைவர்களும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் பெரும் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர். திமுக மேலும் ஒரு படி மேலே போய் இந்தியா தீர்மானத்தை ஆதரிக்காவிட்டால் அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெறலாம் என்றும் சூசகமாக தெரிவித்தது. சூட்டோடு சூடாக நாளைக்கு தனது கட்சியின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தையும் அது கூட்டியுள்ளது.
இந்த நிலையில்தான் இன்று பிரதமர் மன்மோகன் சிங் நாடாளு்மன்றத்தில் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில் வழக்கம் போல இலங்கைக்கு இந்தியா செய்துள்ள நல உதவிகளையும், எடுத்து வரும் நடவடிக்கைகளையும் பட்டியலிட்ட அவர், அமெரிக்க தீர்மானம் குறித்துக் குறிப்பிடுகையில் அதில் என்ன சொல்லியுள்ளனர் என்பது தெரியவில்லை. தீர்மானம் படித்துப் பார்க்கப்படும். இருந்தாலும் தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து இந்தியா மும்முரமாக உள்ளது என்று கூறினார்.
தீர்மானத்தை ஆதரிப்போம் என்ற ரீதியில் பிரதமர் இப்படிக் கூறியுள்ளார். ஆனால் மத்திய வெளியுறவுத்துறை எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேச்சு வேறு மார்க்கமாக உள்ளது. இதில் யார் சொல்வதை நம்புவது, எது உண்மை, எது அதிகாரப்பூர்வமானது என்பது குழப்பமாக உள்ளது.
எஸ்.எம்.கிருஷ்ணா இந்த பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்கையில், முதலில் தீர்மானம் முழு வடிவம் பெறட்டும். பிறகு அதை ஆய்வு செய்து, தமிழக எம்.பி.க்களுடன் ஆலோசித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
பிரதமரின் பேச்சுக்கும், எஸ்.எம்.கிருஷ்ணாவின் இந்த ஆய்வுப் பேச்சுக்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசம், இடைவெளி உள்ளது. இதனால் மத்திய அரசின் உண்மையான நிலை என்ன என்பது புரியவில்லை.
பிரதமர் எடுப்பதுதான் இறுதியான நிலைப்பாடாக இருக்க முடியும். அவர் முடிவு செய்வதுதான் மத்திய அரசின் முடிவாக இருக்க முடியும். அவர் எடுக்கும் முடிவைத்தான், மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டும், பின்பற்ற வேண்டும். ஆனால் பிரதமரும் சரி, எஸ்.எம்.கிருஷ்ணாவும் சரி, பிரணாப் முகர்ஜியும் சரி, யாருமே ஒரே மாதிரியாக இதுவரை பேசவில்லை. மத்திய வெளியுறவு அமைச்சகமும் இந்த பிரச்சினை தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் சொல்லவில்லை.
எனவே ஒரு வேளை பிரதமரின் இன்றைய பேச்சு திமுகவால் புதிய தலைவலி ஏற்படாமல் தடுக்கும் தற்காலிக நடவடிக்கையா என்ற சந்தேகமும் எழுகிறது. மொத்தத்தி்ல ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கும்போது இந்தியா எப்படி நடந்து கொள்ளப் போகிறது என்பதைப் பார்த்த பிறகுதான் இந்தியாவின் உண்மையான நிலையை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என்பதே உண்மை.
தமிழர்களுக்கு மீண்டும் சோனியா காங்கிரஸ் ஆப்பு. சாதுப் பிரதமர் தனது உரையில் தீர்மானத்தை படிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டு ஆதரவு பற்றியும் குறிப்பிட்டார். தமிழர்கள் பற்றியும்,கருணானிதி பற்றியும் காங்கிரசுக்கு நன்கு தெரியும். கொதித்தெழுவார்கள் பின் புஸ்வாணம் போய் தூங்கி விடுவார்கள். உடனே தட்டிக் கொடுத்து விட்டு தீர்மானத்திற்கு ஆதரவு கொடுப்பார்கள்.இல்லையேல் சிங்களத்திற்கு ஆதரவாக மாற்றம் செய்வார்கள்.ஏமாற தமிழன் இருக்கிறானே!போருக்கு துணை போன காங்கிரஸ் சிங்களத்தை காட்டிக் கொடுக்காது.
ReplyDelete