இடைத்தேர்தலையொட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கும் தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் யாரைப் பார்த்தாலும் தடாலென காலில் விழுந்து வாக்கு கேட்கிறார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தி்முக, அதிமுக, தேமுதிக, மதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தி்முக, தேமுதிக வேட்பாளர்கள் மின்வெட்டை பிரதானமாக வைத்து பிரச்சாரம் செய்கின்றனர். அதிமுக வேட்பாளர் தமிழக அரசின் இலவச திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு கேட்கின்றார்.
பாஜக வேட்பாளர் முருகன் தமிழகத்தில் ஏற்படும் மின்வெட்டை உணர்த்தும் வகையில் கையில் தீப்பந்தத்துடன் சென்று வாக்கு கேட்கிறார். திமுக வேட்பாளர் சூரியகுமார் முதியவர்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்து வருகிறார். முன்னாள் அமைச்சர் கருப்பசாமி வயது வித்தியாசமின்றி பார்ப்பவர் காலில் எல்லாம் விழுந்து வாக்கு சேகரிக்கும் பழக்கம் உடையவர். அவர் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகிய பின்னரும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க செல்லும்போதும் பொதுமக்கள் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.
தற்போது தேமுதிக வேட்பாளர் முத்துகுமார் யாரைப் பார்த்தாலும் தடாலென காலில் விழுந்து ஓட்டு கேட்கிறார். அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி இதுவரை யார் காலிலும் விழவில்லை. போகிற போக்கில் அவரும் வாக்காளர் காலில் விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர் சங்கரன்கோவில் தொகுதி வாக்களர்கள்.
No comments:
Post a Comment