சிறப்பு இருக்கை
வசதி கிடைக்காதபட்சத்திலும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க திமுக தலைவர் கருணாநிதி
திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக ஆட்சி அமைந்தபிறகு,
திமுக தலைவர் கருணாநிதி இதுவரை சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பேரவைத்
தலைவர் அறை அருகில் வைக்கப்பட்டிருக்கும் உறுப்பினர் வருகைப் பதிவேட்டில் மட்டும் அவ்வப்போது
வந்து கையெழுத்து போட்டுவிட்டு செல்கிறார். தனது உடல்நிலை கருதி பேரவைக்குள் சிறப்பு
இருக்கை மற்றும் இடவசதி செய்துகொடுத்தால் நிகழ்ச்சியில் பங்கேற்பேன் என்று கருணாநிதி
கூறிவருகிறார்.
இந்தச் சூழலில்,
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவைக்
கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கருணாநிதி கோரிக்கை விடுத்தார். பேரவைக்கே வராத கருணாநிதிக்கு,
கூட்டம் கூட்டுவது பற்றி பேச தகுதியில்லை என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
வெளியிட்டார். அதிமுக உறுப்பினர்கள் அமைதி காப்பார்கள் என்று உறுதி அளித்தால் பேரவைக்
கூட்டத்தில் கலந்துகொள்வேன் என கருணாநிதி பதிலளித்தார்.
இந்நிலையில், சட்டப்பேரவையின்
குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கும் என்று ஆளுநர் ரோசய்யா அதிகாரப்பூர்வமாக
அறிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பங்கேற்கும் முதல் கூட்டம் என்பதாலும்,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பிறகு நடக்கும்
கூட்டம் என்பதாலும் பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்க எம்எல்ஏக்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்கிடையே,
பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைமைச் செயலகத்தின்
இரண்டாம் எண் வாயிலில் சாய்வுதள வசதி உள்ளது. 3-ம் எண் வாயில் வழியே முதல்வர் நுழைவார்.
அமைச்சர்கள் 2 மற்றும் 4-ம் எண் வாயில்களை பயன்படுத்துகின்றனர். அங்கு பாதுகாப்பு நடைமுறைகள்
அதிகமிருக்கும் என்பதால் திமுக உள்ளிட்ட மற்ற கட்சி எம்எல்ஏக்கள் பெரும்பாலும் 4-ம்
எண் வாயிலையே பயன்படுத்துவது வழக்கம். அந்த வாயிலின் அருகிலும் சாய்வுதளம் உள்ளது.
அதன் வழியே சக்கர நாற்காலியை கொண்டு சென்று, வராண்டா வழியாக பேரவைக்குள் நுழைய முடியும்.
எதிர்க்கட்சி வரிசையில்
ஸ்டாலினுக்கு பின்புறம் இரண்டாம் வரிசையில்தான் கருணாநிதிக்கான இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
அவைக்குள் சக்கர நாற்காலியில் கருணாநிதி வந்தாலும், 2-ம் வரிசைக்குள் செல்ல முடியாத
நிலை உள்ளது.
அதற்கு பதில் சிறப்பு
அனுமதி பெற்று, சக்கர நாற்காலியை தனியாக முன்வரிசையின் அருகே நிறுத்த வேண்டும். அவருக்கு
தனியாக மேஜை மற்றும் மைக் வசதி ஏற்படுத்த வேண்டும். சக்கர நாற்காலியை தள்ளிவரும் உதவியாளருக்கு
தனியாக அனுமதி பாஸ் வாங்க வேண்டும் அல்லது திமுக எம்எல்ஏக்கள் அவருக்கு உதவவேண்டும்.
இதுகுறித்து சட்டப்பேரவை
செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘உறுப்பினர்களின் இருக்கை தொடர்பான விவகாரங்களை
மசோதா 1 என்ற பிரிவு கவனிக்கிறது. அவையில் நுழையவும், அமரவும் சிறப்பு வசதிகள் வேண்டும்
என்றால் சம்பந்தப்பட்ட உறுப்பினர், உரிய காரணங்களுடன் மனு அளித்தால், அதுகுறித்து செயலகம்
சட்டப்படி பரிசீலிக்கும்’’ என்றனர்.
இதுதொடர்பாக திமுக
தரப்பில் விசாரித்தபோது, ‘‘பல தடைகளைத் தாண்டி சக்கர நாற்காலியில் வந்து கூட்டத்தில்
பங்கேற்க கருணாநிதி திட்டமிட்டுள்ளார். அதுகுறித்து ஆலோசித்து வருகிறோம்’’ என்றனர்.
மேலும் .....
No comments:
Post a Comment