''தமிழக ஆட்சி
குறித்து, நிறைய விவரங்கள் சேகரித்து வருகிறேன். போகப் போக எல்லா விவரங்களையும் நான்
விரிவாகப் பேசுவேன்,'' என, நேற்று, காங்கிரசில் இணைந்த நடிகை குஷ்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக,
அவர், அளித்த சிறப்பு பேட்டி:
நான் தி.மு.க.,வில் இருந்து விலகியதும்,
கொஞ்ச காலம் எனக்கு அமைதி தேவைப்பட்டது. அதனால், அரசியலில் இருந்து விலகி இருந்தேன்.
விருப்பத்தின்
பேரில்...:
தி.மு.க.,வில்
சொந்த விருப்பத்தின் பேரில் தான் நான் இணைந்தேன். அதேபோல, சொந்த விருப்பத்தின் பேரில்
தான், நான் அங்கிருந்து விலகி வந்தேன். நான் எங்கு இருந்தாலும், அங்கு முழு நம்பிக்கையோடு
பணியாற்றுவேன். அங்கு, எனக்கு முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பேன்.
அப்படி இல்லாத இடங்களில் நான் இருக்க மாட்டேன். தி.மு.க., மீது இன்றைக்கும் எனக்கு
மரியாதை உண்டு. கட்சியின் தலைவராக இருக்கும் கருணாநிதி மீதும், மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.
காங்கிரசில் இணைந்ததால், அது குறைந்து விடாது. தேவையானால், மரியாதை நிமித்தமாக, இன்றைக்கும்
அவரை சென்று சந்திப்பேன். தி.மு.க.,வில் இருந்து, என்னை விலக்கிக் கொண்டதும், என்னை
பிரபல கட்சிகள் அனைத்தும், தங்கள் கட்சியில் இணையுமாறு வலியுறுத்தின. ஆனால் நான், மறுத்து
விட்டேன். காரணம், என் மனது அப்போது யாரையும் நோக்கி, 'டிக்' அடிக்கவில்லை. இப்போது,
'காங்கிரசுக்கு செல்' என, மனது சொன்னதும், காங்கிரசில் இணைந்து விட்டேன். காங்கிரஸ்
கட்சிக்கென்று நீண்ட பாரம்பரியம் உள்ளது. அந்த கட்சி இன்றைக்கு தோல்வியை தழுவி இருக்கலாம்.
அதற்காக, அந்த கட்சிக்கு, இனிமேல் தோல்வி தான் கிடைக்கும் என, யாரும் நினைக்க வேண்டியதில்லை.
அதே போல, பா.ஜ., தற்போது பெற்றிருக்கும் வெற்றியும் நிரந்தர மானதல்ல. காங்கிரஸ் ஆட்சி
மீது ஏகப்பட்ட தவறுகளைச் சொல்லித் தான், பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. இன்றைக்கு, ஆறு மாதங்களை
கடந்து விட்ட சூழ்நிலையிலும், பெரிதாக அவர்கள் சாதித்தது என்ன?
பல்வேறு ரூபங்களில்...:
'தூய்மையான இந்தியா'
உள்ளிட்ட எல்லா திட்டங்களுமே, ஏற்கனவே, பல்வேறு ரூபங்களில் காங்கிரஸ் அரசு செயல்படுத்தியது
தான். கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு, இந்திய மக்களுக்கு செய்ததை, பொதுமக்களிடம்
சரியாக எடுத்து செல்லாமல் விட்டு விட்டனர். அதேநேரம், காங்கிரசுக்கு எதிரான பொய்களை
திரும்பத் திரும்பச் சொல்லி, லாவகமாக அதை பா.ஜ., நம்ப வைத்து விட்டது. இதுதான், காங்கிரஸ்
தோல்விக்கான பிரதான காரணம். தமிழகத்தில் காங்கிரசில் இருந்து, வாசன் விலகியதால், காங்கிரசுக்கு
எந்த நஷ்டமும் இல்லை, எத்தனையோ தலைவர்கள் காங்கிரசில் இருந்து பிரிந்து போயிருக்கின்றனர்.
அவர்கள் எல்லாம் என்ன ஆயினர் என பட்டியல் போட்டால், அது அவர்கள் மனசை சங்கடப்படுத்தும்.
அதனால், அவர்களை விட்டு விடுவோம். தமிழகத்தில் காங்கிரசுக்கு, 4 சதவீத ஓட்டுகள் தான்
இருக்கின்றன என, பத்திரிகைகள் தான் சொல்கின்றன. ஆனால், தமிழகம் முழுவதும் காங்கிரசுக்கு
ஆட்கள் இருக்கின்றனர். அதனால்தான், இன்றைக்கும் காங்கிரஸ் குறிப்பிட்டு சொல்லக்கூடிய
அளவுக்கு, ஓட்டுகளை பெற்று வருகிறது.
திடீர் உத்வேகமும்:
வாசன் பிரிவுக்குப்
பின்னால், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் திடீர் உத்வேகமும், மக்கள் மத்தியில் ஒரு
பரிதாபமும் ஏற்பட்டிருக்கிறது. அது காங்கிரசுக்கு பலம் தான். ஒன்றரை ஆண்டு காலம் தொடர்ச்சியாக
பணியாற்றி, பா.ஜ.,வை மத்தியில் ஆட்சிக்கு கொண்டு வந்தது மோடியின் திறமை என்றால், அதே
பாணியை நாங்கள் பின்பற்றினால், நாங்களும் ஆட்சிக்கு வரத்தானே செய்வோம். தமிழகத்தில்
சீக்கிரமே, சட்டசபை தேர்தல் வரவிருக்கிறது. அதை மனதில் வைத்தே, இனி நாங்கள் பணியாற்றுவோம்.
பதவியை எதிர்பார்த்து, காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை. பாரம்பரியம் மிக்க காங்கிரஸ்
கட்சியை தமிழகத்தில் மரியாதைக்குரிய இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது தான், என்
எண்ணம். எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட கொடுக்காத அளவுக்கு, பெருந்தன்மை இல்லாத கட்சி தான்,
பா.ஜ., அந்தக் கட்சிக்கான வெற்றி அனைத்தும், விரைவில் கானல் நீராகி விடும்.
நடவடிக்கை:
நூறு நாட்களில்
கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் என, அறிவித்த மோடி
அரசு, அந்த விஷயத்தில் ஏன் தடுமாறுகிறது? தமிழகத்தில் நடக்கும் ஆட்சி அதிகாரம் பற்றி
பேசும் அளவுக்கு, ஆட்சியின் செயல்பாடுகள் இல்லை. நடக்காத ஒரு ஆட்சி குறித்து, என்ன
பேசுவது? தமிழக ஆட்சி குறித்து, நிறைய விவரங்கள் சேகரித்து வருகிறேன். போகப் போக எல்லா
விவரங்களையும் நான் விரிவாகப் பேசுவேன். பேச வேண்டும் என்பதற்காக, எதையும் பேசுவதில்
விருப்பம் இல்லை. தமிழகத்தில் அடுத்து நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தல், கடந்த காலங்களில்
நடந்த தேர்தலைக் காட்டிலும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். கட்டாயம், காங்கிரசுக்கு
மரியாதை ஏற்படுத்தப்படும். இவ்வாறு, குஷ்பு பேட்டியளித்தார்.
No comments:
Post a Comment