சமீபகாலமாக
சில நடிகர்கள் நிஜ ஹீரோவாக பார்க்கப்படுகிறார்கள்.
காரணம், சிடி கடைகளுக்குள் புகுந்து
அதிரடி ரெய்டு நடத்தி திருட்டு
விசிடி விற்பவர்களை கைது செய்ய வைக்கிறார்கள்.
புதிய திரைப்படங்களை திரையிடும் கேபிள் டி.வி.
அலுவலகத்திற்குள் புகுந்து தடுத்து நிறுத்துகிறார்கள். இந்த
நிகழ்வுகளால் அந்த ஹீரோக்களுக்கும் அவர்கள்
நடித்த படங்களுக்கும் இலவச விளம்பரம் என்பதைத்
தவிர வேறெதும் நடக்கப்போவது இல்லை.
"ஒரு
கடையை போலீசாரோ, வருமான வரி அதிகாரிகளோ,
லஞ்ச ஒழிப்புத்துறையினரோ, கடத்தல் தடுப்பு துறையினரோ
திடீர் சோதனை நடத்த வேண்டும்
என்றால் உயர் அதிகாரிகளிடம்
அனுமதி வாங்க வேண்டும்.
ஆனால் யாரிடம் அனுமதி பெற்று
இவர்கள் இப்படிச் செய்கிறார்கள்? ஒரு இடத்தில் திருட்டு
விசிடி விற்பதாக சந்தேகப்பட்டால், அல்லது அறிந்தால் அதனை
போலீசிடம் புகார் செய்ய வேண்டும்.
அவர்கள்தான் சோதனை நடத்துவார்கள்.
இதுதான்
சட்ட நடைமுறை. ஹீரோக்களே கடைகளுக்குள் புகுந்து சோதனை நடத்துவது வெறும்
விளம்பர ஸ்டண்டுதான். அப்படி அவர்கள் சோதனை
செய்யும்போது நடிகரைப் பார்க்கும் ஆவலில் திடீர் கூட்டம்
கூடும். அந்த இடத்தில் போலீசார்
இருக்க மாட்டார்கள். இதனால் தேவையில்லாத சட்ட
ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு
அந்த நடிகர்களே பொறுப்பு" என்கிறார்கள் காவல் துறை அதிகாரி
களும், சட்ட வல்லுனர்களும்.
இதே காவல்துறையினர் இன்னொரு கருத்தையும் சொல்லியிருக்கிறார்கள்.
திருட்டு விசிடி தயாரித்து விற்பனைக்கு
அனுப்புகிறவர்களே திரையுலகினர்தான். அவர்களை இவர்கள் தடுத்தால்
நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். உண்மையும் அதுதான்.
மது உற்பத்தியை மூடிவிட்டால் மதுக் கடைகள் தானாக
மூடப்படும் என்பதைப் போல திருட்டு விசிடி
உற்பத்தியை நிறுத்திவிட்டால் திருட்டு விசிடி விற்பனை நின்று
போகும்.
ஒரு படத்தின் திருட்டு
விசிடி ஒரு தியேட்டரில், அல்லது
ஒரு படத்தின் வேலைகள் நடக்கும் டப்பிங்,
ரெக்கார்டிங் ஸ்டுடியோக்கள், வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் பிரிண்டுகள்
இவற்றிலிருந்துதான் உருவாகிறது. இதனைக் கையாளுகிறவர்கள் அனைவருமே
திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள்தான்.
தமிழ் நாட்டில் திருட்டு விசிடி உலகத்தின் மூடிசூடா
மன்னர்களாக இருப்பவர்கள் பற்றி தமிழ்நாட்டுக்கே தெரியும்.
அவர்களை எதிர்த்து, அவர்களது செயல்களைத் தடுத்து நிறுத்த ஹீரோக்கள்
முன்வந்தால் ஒருவேளை திருட்டு விசிடியை
ஒழிக்க முடியும். கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் திருட்டு விசிடிக்கள் இல்லை.
அங்கும்
சிடி கடைகளும், கேபிள் டிவி ஒளிபரப்பும்
இருக்கத்தான் செய்கின்றன. அங்கு திருட்டு விசிடி
இல்லாததற்குக் காரணம், அதன் ஆணி
வேரைப் பிடுங்கி எறிந்துவிட்டார்கள். இங்கும் அந்த ஆணிவேரைத்தான்
பிடுங்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஹீரோயிசம் காட்டுவது விளம்பரத்துக்கு உதவுமே தவிர எந்த
பயனையும் விளைவிக்கப்போவதில்லை.
No comments:
Post a Comment