இன்று
(புதன்கிழமை) விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு 60–வது
பிறந்தநாள். அதாவது அவருக்கு இது
மணிவிழா ஆண்டு.
வழக்கமாகவே
நவம்பர் மாத கடைசி என்பது
ஈழத்தமிழர்கள், ஈழ ஆதரவாளர்கள் உணர்ச்சி
பூர்வமாக கொண்டாடும் நாட்களாக அமையும். நவம்பர் 27-ம் தேதி புலிகள்
அமைப்பின் முதல் களப்போராளியான கேப்டன்
சங்கர் மரணம் அடைந்த நாள்.
அதற்கு முந்தைய நாள் நவம்பர்
26 பிரபாகரன் பிறந்தநாள்.
எனவே,
25,26,27 ஆகிய மூன்று நாட்களையும் மாவீரர்
தினங்களாக விடுதலைப்புலிகள் அமைப்பு கொண்டாடும். தலைமறைவு
வாழ்க்கையில் இருந்த பிரபாகரன், நவம்பர்
27–ந்தேதிதான் வானொலியில் பேசுவார்.
அதற்காக
உலகம் முழுவதும் தமிழர்கள் அந்த நாளுக்காக காத்திருப்பார்கள்.
2009-ம் ஆண்டு மே மாதத்துக்குப்
பிறகு, புலிகளின் வானொலி செயல்படவில்லை. அதனால்
மாவீரர் தின உரைகளும் இடம்பெறவில்லை.
‘பிரபாகரன்
போரில் கொல்லப்பட்டார்’ என்று இலங்கை அரசாங்கமும்,
‘இல்லை, அவர் உயிர் வாழ்கிறார்’
என்று ஈழ ஆதரவாளர்களும் சொல்லி
வருகிறார்கள். ஆனாலும் பிரபாகரன் பிறந்தநாள்,
மாவீரர் தின கொண்டாட்டங்கள் தொடர்ச்சியாக
நடக்கின்றன.
1954–ம்
ஆண்டு வேலுப்பிள்ளைபார்வதி தம்பதியருக்கு வல்வெட்டித்துறையில் பிறந்தவர் பிரபாகரன். அவருக்கு இன்று 60–வது பிறந்த நாள்.
மணிவிழா பிறந்தநாளாக அதனை கொண்டாடி வருகிறார்கள்
ஈழ ஆதரவாளர்கள்.
‘‘வானவெளியில்
வாண வேடிக்கைகள் நடக்கட்டும்... பட்டாசு வெடிகள் முழங்கட்டும்;
சர்க்கரை பொங்கல் வழங்கப்படட்டும்; ஆலயங்கள்,
வழிபாட்டு தலங்களுக்கு செல்கின்றவர்கள் பூசை நடத்தட்டும்.
பிரபாகரன்
என்ற பெயரை உச்சரித்தாலே மான
தமிழனின் நாடி நரம்புகளில் மின்சாரம்
பாயுமல்லவா? பிரபாகரன் பிறந்தநாள் விழாவில் தமிழர்கள் எழுப்பும் வாழ்த்து முழக்கம் விண்ணை முட்டட்டும். சுதந்திர
தமிழ் ஈழ விடியலுக்கு கட்டியம்
கூறும் விதத்தில் தாய் தமிழகத்திலும், உலகம்
எங்கிலும் தமிழர்கள் தமிழ்க்குல தலைவனின் பிறந்தநாளை கொண்டாடுங்கள்’ என்று பகீரங்கமாகவே அழைப்பு
விடுத்துள்ளார் வைகோ.
‘காலம்
தந்த தலைவன் மேதகு பிரபாகரன்
60’ என்ற தலைப்பில் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில்
26, 27 ஆகிய தேதிகளில் (இன்றும், நாளையும்) இரண்டு நாட்களும் நிகழ்ச்சிகளை
நடத்துகிறார் பழ.நெடுமாறன். ஒருவார
கால நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது சீமானின்
நாம் தமிழர் கட்சி.
இன்னும்
பல தமிழர் இயக்கங்கள் விழாக்களை
திட்டமிட்டு வருகின்றன. ஈழத்தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி
உள்ளார்கள். அவர்கள் வாழும் இடங்கள்
அனைத்திலும் கொண்டாட்டங்கள் தொடங்க இருக்கிறது.
இப்படி
பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஒருபக்கம் இருந்தாலும் எல்லோர் மனதிலும் இருக்கும்
ஒரே கேள்வி... பிரபாகரன் என்ன ஆனார்? அவர்
உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதே அந்த
கேள்வி.
2009ம்
ஆண்டு மே மாதம் அது.
இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கடலோரத்தில் உள்ள வெள்ள முள்ளிவாய்க்கால்
பகுதி. சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும்
இடையில் இறுதிகட்ட போர் உச்சத்தில் இருந்தது.
அந்தப்போரில்
விடுதலைப்புலிகள் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டனர்
என்று இலங்கை ராணுவம் அறிவித்தது.
விடுதலை புலிகள் தரப்பில் இருந்து
எந்த பதிலும் வரவில்லை.
பிரபாகரனின்
மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி,
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர்கள்
நடேசன், புலித்தேவன் உட்பட அந்த இயக்கத்தின்
முக்கிய தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்று இலங்கை ராணுவம்
அறிவித்தது.
அத்துடன்
அவர்கள் பிணமாக இருக்கும் படங்களையும்
வெளியிட்டனர். அந்த நேரத்தில் பிரபாகரனை
பற்றி மட்டும் எந்த தகவலும்
வெளிவரவில்லை.
மறுநாள்,
பிரபாகரன், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான்,
கடல் புலிகள் தலைவர் சூசை
ஆகியோரும் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவிக்க...
உலக தமிழர்கள் அனைவரும் செய்வதறியாது கலங்கி நின்றனர். பிரபாகரனின்
உடல் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு வீடியோவையும்,
புகைப்படங்களையும் ராணுவம் வெளியிட்டது.
அந்த வீடியோவிலும் புகைப்படத்திலும் இருந்தவரின் உடல் அமைப்பும், பிரபாகரனின்
உடல் அமைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தன.
ஆனால், பல்வேறு தமிழ் அமைப்புகள்
அது பிரபாகரன் இல்லை என்று மறுத்தன.
‘‘போர்க்களத்தில்
இருந்த ஒருவர் முகத்தை சுத்தமாக
சேவ் செய்து இருக்க முடியுமா?
அவரது சீருடையில் இருக்கும் படமும் உள்ளாடை மட்டும்
அணிந்த படமும் உண்மையானதாக இல்லை’’
என்றும் அவர்கள் சந்தேகங்களை கிளப்பினார்கள்.
அன்றைய
காங்கிரஸ் அரசு பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்
ரிப்போர்ட்டை கேட்டு விண்ணப்பம் செய்தது.
ஆனால் அதனை இலங்கை அரசு
தரவில்லை. ‘பிரபாகரனை உடனடியாக எரித்து அவரது சாம்பலை
கடலில் கரைத்து விட்டோம்’ என்று
சிங்கள அதிகாரிகள் சொன்னார்கள்.
ஐந்து ஆண்டுகள் ஆகியும் பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்
ரிப்போர்ட்டை இதுவரை இலங்கை அரசு
மத்திய அரசிடம் ஒப்படைக்கவில்லை. கொல்லப்பட்டது
பிரபாகரன் என்று பிரகடனம் செய்யும்
ராஜபக்சே அரசு, ஏன் இதுவரை
அவரது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை கொடுக்கவில்லை என்று கேட்கும் யாருக்கும்
எந்த பதிலும் இல்லை.
‘தலைவர்
இறந்தால்தானே அவரது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை
கொடுக்க முடியும். அவர் இறக்கவில்லை... இருக்கிறார்!’
என்று பதிலடி கொடுக்கிறார்கள் தமிழ்
ஆர்வலர்கள். ‘‘பிரபாகரனின் அப்பா, அம்மா ஆகிய
இருவரும் முகாமில்தான் இருந்தார்கள். அவர்களை வைத்து பிரபாகரனின்
உடலை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும்’’ என்று
சொன்னதற்கும் இலங்கையிடம் இருந்து பதில் இல்லை.
இந்தியாவில்
1991ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கம்
தடை செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுக்கு ஒரு
முறை தடையை நீட்டித்து கொண்டே
இருப்பார்கள். காங்கிரஸ் ஆட்சி முடியும் போது,
ஐந்து ஆண்டுக்கு தடை செய்துவிட்டார்கள்.
இந்த தடைக்கான காரணங்களில் ஒன்றாக, ‘விடுதலை புலிகள் இயக்கம்
செயல்பட்டு வருகிறது. அவர்கள் தமிழீழத்தையும் தமிழகத்தையும்
சேர்த்து ஒரே நாடாக ஆக்குவதற்கான
முயற்சிகளையே மேற்கொண்டு வந்தார்கள்’ என்று காரணம் சொல்லப்படுகிறது.
2009–ல்
அழிக்கப்பட்ட இயக்கத்துக்கு 2018 வரைக்கும் தடைவிதிக்க காரணமே பிரபாகரன், பொட்டு
அம்மான் பற்றிய சந்தேகங்கள் தான்
என்றும் சொல்லப்படுகிறது. ‘விடுதலைப்புலிகள் அமைப்பு இன்னும் செயல்பாட்டில்
இருக்கிறது’ என்று ராஜபக்சே சமீபத்தில்
விடுத்த அறிவிப்பும் இதனை வைத்துத்தான். இறுதிக்கட்ட
போர் முடிவில் கைது செய்யப்பட்ட முக்கிய
போராளிகளை இன்னமும் விசாரணையே இல்லாமல் இலங்கை அரசு சிறையில்
வைத்துள்ளதற்கு காரணமாகவும் இது சொல்லப்படுகிறது.
முள்ளிவாய்க்காலில்
நடந்த இறுதிப்போரின் இனப்படுகொலையை நினைவுபடுத்தும் வகையில் தஞ்சாவூரில் பழ.நெடுமாறன் முயற்சியால் முள்ளி வாய்க்கால் நினைவு
முற்றத்தை அமைத்தனர். இந்த நினைவு முற்றத்தில்
போரில் கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இறந்தவர்களைப் பற்றிய
குறிப்புகளும் இங்கே உள்ளது.
அதில் பிரபாகரன் படம் வைக்கப்படவில்லை. ‘’பிரபாகரன்
உயிரோடு இருக்கிறார். அவர் கொல்லப்பட்டார் என்பதை
ஆதாரத்துடன் சொல்லுங்கள். அதன் பிறகு நான்
என் பதிலை சொல்வேன்’’ என்று
நெடுமாறனும் சொல்லி வருகிறார்.
‘‘பிரபாகரன்
உயிரோடு இருக்கிறார் என்று எப்படி சொல்லி
வருகிறீர்கள்?’’ என்று மத்திய உளவுத்துறை
அதிகாரிகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை
வந்து நெடுமாறனை கேட்டுவிட்டு செல்கிறார்கள். ‘‘இது நீங்கள் கண்டுபிடிக்க
வேண்டியது’’ என்று அவரும் அவர்களுக்கு
பதில் அளித்து வருகிறார்.
இப்படி
இலங்கை அரசு, மத்திய அரசு,
புலம் பெயர் தமிழர்கள், ஈழ
ஆதரவாளர்கள் அனைவருக்கும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா
என்பது இன்னும் விலகாத மர்மமாகவே
இருக்கிறது. பிரபாகரன் தனது வழிகாட்டியாக சொன்னது
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை.
‘இந்தியா
உடனடியாக சுதந்திரம் அடைந்தே தீர வேண்டும்.
அதற்கு ஒரே வழி போர்.
அதை தவிர வேறு வழியே
இல்லை’ என்று நம்பியவர் நேதாஜி.
எல்லோருக்கும் பிறந்தநாள் என்று ஒன்று வந்தால்,
நிச்சயம் இறந்த நாளும் என்றாவது
ஒருநாள் வரும்.
ஆனால்,
இறந்தநாள் என்பது மர்ம நாளாகவே
இருப்பது நேதாஜிக்கு அடுத்து பிரபாகரனுக்குத்தான். அந்த மர்ம
முடிச்சுக்கு எப்போது விடை கிடைக்குமோ
தெரியவில்லை!
No comments:
Post a Comment