Tuesday, November 25, 2014

தீவிரவாதிகள் கூடாரமாகிறதா திருப்பூர்?

தமிழக - கேரளா எல்லையில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியுள்ளதாக மத்திய உளவுத்துறை தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்திக்கொண்டிருக்கு நிலையில், திருப்பூரில் தனியார் பனியன் ஆலை ஒன்றில் கடைநிலைத் தொழிலாளியாக பணியாற்றி வந்த மேகாலயா நக்சல்கள் இருவரை கைது செய்துள்ளது அம்மாநில காவல்துறை

இந்த இருவரில் ஒருவரான வில்லியம் .சங்மா என்பவர், மேகாலயாவில் உள்ள 'ஆச்சிக் நேஷனல் கோஆபரேடிவ் ஆர்மி'' (.என்.சி..) என்ற அமைப்பின் தலைவர் என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம். மற்றொருவரான அலாஸ் ஆர்.சங்மாவும் போராளிக்குழுவைச் சேர்ந்தவர்தான். இவர்கள் இருவரையும் கைது செய்த மேகலயா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், அவர்களை திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேகலயா அழைத்து சென்றனர்.

தீவிரவாதிகளின் கூடாரமாகிறதா திருப்பூர்?

தொழிலாளிகள் போர்வையில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது திருப்பூர், கோவைக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 2006 ஆம் ஆண்டு திருப்பூர், போயம்பாளையம் பகுதியில் தங்கியிருந்த தர்மபுரியைச் சேர்ந்த நக்சல் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

2007 ஆம் ஆண்டு தமிழக நக்சல் இயக்கத் தலைவர் சுந்தரமூர்த்தி அவரது ஆதரவாளர்களுடன் பிச்சம்பாளையம் பகுதியில் தங்கி பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கும்பலை கைது செய்த க்யூ பிரிவு போலீசார், துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.

அதே 2007 ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலி அமைப்புக்கு இரும்பு பால்ரஸ் குண்டுகளை சப்ளை செய்ததாக விடுதலைப்புலி ஆதரவாளர் ஒருவரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இவற்றோடு திருப்பூரில் குப்பையில் கிடந்த சக்தி வாய்ந்த பைப் பாம், வாடகை வீட்டில் தங்கியிருந்த வெடிகுண்டு சிதறி பலியான சம்பவம் உள்ளிட்ட வெடிகுண்டுகள், வெடிபொருட்கள் சார்ந்த பல வழக்குகளுக்கான பின்புலம் இன்னும் கண்டறியப்படவில்லை.


எல்லாவற்றுக்கும் உச்சகட்டமாக கோவை, பீளமேட்டில் ஒரு ஆலையில் சாதாரண தொழிலாளியாக வேலை செய்து வந்த, மிக முக்கிய மாவோயிஸ்ட் தீவிரவாதியான ஷ்யாம் சரண் டுடூவை மேற்கு வங்க போலீசார் கடந்த ஆண்டு கோவையில் வைத்து கைது செய்தனர். மேற்கு வங்கத்தில் எல்லை படை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தி, 24 ஜவான்களை கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி இவர். இப்படியாக பல சம்பவங்கள் திருப்பூர், கோவையில் அரங்கேறி வருகிறது. இதன் தொடர்ச்சி தான் மேகலயா தீவிரவாதிகள் சிக்கியிருப்பது.

திருப்பூரில் ஏன்?திருப்பூரில் தீவிரவாதிகள் பதுங்க முக்கிய காரணம் நெருக்கடி மிகுந்த தொழில் நகரம் என்பதுதான். திருப்பூரில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் கணிசமானோர் வடமாநில தொழிலாளர்கள். நெருக்கடி மிகுந்த குடியிருப்பு பகுதிகள் நிறைந்த நகரம் என்பதாலும், இடம்பெயரும் மக்கள் என்பதாலும் திருப்பூர்பயங்கரவாதிகள் தங்கள் அடையாளங்களை மறைத்து வாழ வழி வகுக்கிறது.

வெவ்வேறு ஊர்களில் கொலை, கொள்ளை செய்பவர்கள் துவங்கி, மிகப்பெரிய தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள் வரை திருப்பூரில் தங்கியிருந்தால் அவ்வளவு எளிதில் கண்டுபிடித்து விட முடியாது என்பது தான் நிலை. அதனாலே தங்கள் அடையாளங்களை மறைத்து தலைமறைவு வாழ்க்கையை வாழ சமூக விரோதிகளும், பயங்கரவாதிகளும் திருப்பூரை தேர்வு செய்து வருகின்றனர்.

திருப்பூரில் கடந்த 10 ஆண்டுகளாக இப்படியான நிலைமை நீடிப்பதால், தொழிலாளர்களை வரைமுறைப்படுத்த அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இன்று வரை அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. தொழிலாளர்கள் பெரும்பாலானோர் நிரந்தரமாய் பணியாற்றுவதில்லை என்பதும், அடையாள அட்டை வழங்கினால் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டியது அவசியமாய்விடும் என்பதாலும் நிறுவனங்கள் அடையாள அட்டை வழங்க மறுத்து வருகின்றன.

வெளிநாட்டினர் விவரமே போலீசாரிடம் இல்லை


திருப்பூரில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் சுமார் 400 பேர் தங்கியிருக்க கூடும் என சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களைப்பற்றிய அடிப்படை விவரங்கள் கூட காவல்துறையிடம் இல்லை. அப்படி இருக்க லட்சத்தை தொட்டு விட்ட வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களும், லட்சக்கணக்கில் உள்ள தொழிலாளர்களின் விவரங்களும் போலீசிடம் இருக்க வாய்ப்பே இல்லை.

ஒவ்வொரு முறை இது போன்ற பிரச்னை எழும் போது, வெளிநாட்டவர், வெளிமாநிலத்தவர், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் விவரங்களை போலீசார் சேகரிக்க துவங்குவதும், பின்னர் அது பாதியில் நின்று விடுவதும் இன்றளவிலும் தொடர்ந்து வருகிறது.

இது தொடர்பாக திருப்பூர் காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். "தொழிலாளர்களின் விவரங்களை முழுமையாக பெற்றுக்கொண்டு அவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதேபோல் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக கூறி, நிறுவனங்கள் இதனை அமல்படுத்த மறுக்கின்றன.

நிறுவனங்கள் குறைந்தபட்சம் தொழிலாளர்களின் புகைப்படம், முகவரி, அடையாள சான்று போன்றவற்றையாவது பெறலாம். ஆனால் அதை கூட நிறுவனங்கள் பெறுவதில்லை. தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்க புதிய முயற்சியை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம்," என்றார்.

மிகப்பெரிய தொழில் நகரமான திருப்பூர், வளர்ந்து வரும் நகரமாகவும் இருந்து வருகிறது. இந்த சூழலில் தொழிலாளர்கள் போர்வையில் சமூக விரோதிகளும், போலீசாரால் தேடப்பட்டு வருபவர்களும் இங்கு பதுங்குவது தொழிலுக்கும், வளர்ச்சிக்கும் நிச்சயம் நன்மை பயக்காது.


காவல்துறை கவனம் செலுத்தவேண்டிய நேரம் இது!

No comments:

Post a Comment