அதிமுக
பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான வருமான வரித்துறை
தொடர்ந்த வழக்கு முடிவுக்கு வருகிறது.
ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்த
சமரச மனுவை ஏற்பதாக வருமானவரித்துறை
இன்று சென்னை எழும்பூர் குற்றவியல்
நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து வழக்கு முடிவுக்கு வருகிறது.
அதிமுக
பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மற்றும் அவரது தோழியான
சசிகலா ஆகியோர் கடந்த 1992-1993 மற்றும்
1993-1994 ஆம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கினை
தாக்கல் செய்யவில்லை என்று கூறி அவர்கள்
மீது வருமான வரித்துறை வழக்கு
ஒன்றினை தொடுத்திருந்தது.
இந்த வழக்கு கடந்த 18 வருடமாக
சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில்
நடைபெற்று வருகின்றது. வழக்கை நீதிபதி தட்சிணாமூர்த்தி
விசாரித்து வந்தார்.
இந்த வழக்கும் வழக்கம் போல பல்வேறு
இழுபறிகளுடன் நடந்து வந்தது. கடைசியாக,
கடந்த நவம்பர் 6ம் தேதி இந்த
வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பில்
மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், "இந்த வழக்கில் நாங்கள்
தாக்கல் செய்துள்ள சமரச மனுவின் மீது
நவம்பர் 28 ஆம் தேதிக்குள் முடிவெடுக்க
வேண்டும் என்று சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்காரணமாக இவ்வழக்கு விசாரணையை டிசம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்தி
வைக்க வேண்டும். மேலும், ஜெயலலிதா மற்றும்
சசிகலா நேரில் ஆஜராக விலக்கு
அளிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி,
ஜெயலலிதா மற்றும் சசிகலா வழக்கில்
நேரில் ஆஜராக விலக்கு அளித்து
உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை டிசம்பர்
1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று வருமான வரித்துறை
சார்பில் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல்
செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதா, சசிகலா
ஆகியோர் தாக்கல் செய்திருந்த சமரச
மனுவை ஏற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருமான
வரி கட்டாமல் விட்டதற்காக வருமான வரித்துறை விதித்த
அபராதத் தொகையும் ஜெயலலிதா, சசிகலா சார்பில் செலுத்தப்பட்டு
விட்டது.
இதனால்
இந்த 18 வருட வழக்கு முடிவுக்கு
வருகிறது.
No comments:
Post a Comment