உனக்கு தைரியம் இருந்தால் பேரவையில் நான் அமருவதற்கேற்ற இடத்தினை ஏற்பாடு செய்து விட்டு, எனக்குத் தகவல் அனுப்புங்கள் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதிலடி தந்துள்ளார்.
'சட்டசபைக்கு வந்து பேசக்கூடிய தைரியம், கருணாநிதிக்கு உள்ளது என்றால், அவர் டிசம்பர் 4ம் தேதி நடைபெறும், சட்டசபை கூட்டத் தொடருக்கு வந்து, தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்' என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டமன்றத்திற்கு வந்து பேசக் கூடிய தைரியம் கருணாநிதிக்கு உள்ளது என்றால், பேரவைக்கு வரட்டும் என்கிறார் பன்னீர்செல்வம்! பன்னீர்செல்வம் என்று உங்களுக்குப் பெயர் இருப்பதைப் பார்த்து, ஒரு காலத்தில் உங்களைப் பற்றிய நல்ல எண்ணம் எனக்கு இருந்தது. கறுப்புக் கலரிலே உள்ள ஒருவருக்கு "வெள்ளையன்" என்று பெயர் வைப்பதைப் போன்றதுதான் என்பது இப்போது தான் எனக்குப் புரிகிறது.
சட்டமன்றத்திற்கு வந்து பேசக்கூடிய தைரியம் எனக்கு இருக்கிறதா என்றா கேட்கிறீர்கள்! நான் பெருந்தலைவர் காமராஜர், பெரியவர் பக்தவத்சலம், சி. சுப்ரமணியம், ஆர்.வெங்கட்ராமன், ஜி.கே.மூப்பனார், கே.வினாயகம், பொன்னப்ப நாடார், எம்.கல்யாணசுந்தரம்,பி. ராமமூர்த்தி, எம்.ஆர். வெங்கட்ராமன், உமாநாத், கே.டி.கே. தங்கமணி, அனந்த நாயகி, குமரி அனந்தன், மணலி கந்தசாமி போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் கோலோச்சிய பேரவையிலேயே இருந்து வாதம் செய்தவன். எனது வாதத்தைக் கேட்டு அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களே மறுநாள் வந்து பதில் கூறுவதாகச் சென்றதை மறந்துவிட வேண்டாம்!.
உனக்குத் தைரியம் இருந்தால் பேரவையில் நான் அமருவதற்கேற்ற இடத்தினை ஏற்பாடு செய்து விட்டு, எனக்குத் தகவல் அனுப்புங்கள்!.
அடிக்கின்ற காற்றின் வேகத்திலே கோபுரத்தின் உச்சியில் ஒட்டிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்து விட்டதாக எண்ணி இறுமாப்பு கொள்ள வேண்டாம்! காற்று இன்னும் கொஞ்சம் வேகமாக அடித்தால் இலை எங்கே போய் விழும் தெரியுமா? முதலமைச்சர் என்பவர் "பினாமி"யாக இருந்தாலும்; "பிராக்சி"யாக இருந்தாலும், அந்தப் பொறுப்பில் இருப்பதால் நிதானமும் பண்பாடும் தேவை என்பதை அறிக! அதைப் பெறுவதற்கு முயலுக! .
முதலமைச்சர் பதவியிலே இருப்பதற்கு ஒரு கண்ணியம் வேண்டும். அது எந்தக் கடையிலே விற்கும் என்று கேட்பவர்களை அங்கே உட்கார வைத்தால், அவர்கள் தங்கள் குணத்தைக் காட்டத் தான் செய்வார்கள்.
தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது, அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா சட்டமன்றக் கூட்டத்திற்கு வராமலும், ஏன் கையெழுத்துப் போடாமலும் கூட இருந்தார்.ஒரு உறுப்பினர் குறிப்பிட்ட இத்தனை நாட்களுக்கு மேல் சட்டசபைக்கு வராமல் இருந்தால், அவருக்குப் பதவி போய்விடும். அப்போது அ.தி.மு.க. சார்பில் இதே பன்னீர்செல்வம், ஜெயலலிதா தொடர்ந்து பேரவை உறுப்பினராக நீடிக்க தீர்மானம் கொண்டு வர முனைந்த போது, தி.மு.க. நினைத்திருந்தால், அந்தத் தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் தி.மு.கழகம் அதற்கே உரிய பெருந்தன்மை யோடு ஜெயலலிதா அவைக்கு வராமல் இருந்ததை ஏற்றுக் கொண்டு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற உதவியது என்பதை அனைவரும் அறிவர்.
ஏன், அ.தி.மு.க.வின் நிறுவனர் எம்.ஜி.ஆர்., கழகம் பிரிந்த போது, பேரவைக்கு வராமல் எத்தனை நாட்கள் இருந்தார்? ஜெயலலிதா எத்தனை கூட்டத் தொடருக்கு வராமல் இருந்தார்? ஏன், இப்போதும் நான் பேரவைக்கு வருவதைப் பற்றி ஏற்கனவே இரண்டு முறை தெரிவித்திருக்கிறேன். என் னுடைய உடல் நிலை காரணமாக நான் அமருவதற்கேற்ப இட வசதி செய்து தந்தால் நான் பேரவைக்கு வரத் தயார் என்று கூறிவிட்டேன். அதை ஏற்படுத்திக் கொடுக்க முன் வராத அ.தி.மு.க. அரசு, நான் ஏன் பேரவைக்கு வரவில்லை என்று கேட்பதற்கு ஏதாவது தார்மீக நியாயம் என்ற ஒன்று இருக்கிறதா?
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment