Monday, January 19, 2015

ரஜினி பாணியில் தேர்தல் பிரச்சாரம் செய்த கெஜ்ரிவாலால் சர்ச்சை

பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 7-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, உத்தம்நகர் சட்டசபை தொகுதியில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இது தேர்தல் காலம். எனவே, பா.ஜனதா மற்றும் காங்கிரசார், ஓட்டுக்கு பணம் கொடுக்க வருவார்கள். சிலர் 2ஜியிலும், சிலர் நிலக்கரி ஊழலிலும் கொள்ளையடித்து வைத்திருப்பார்கள்.

அவர்கள் கொடுக்கும் பணத்தை மறுக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் ஓட்டை ஆம் ஆத்மிக்கு போட்டுவிடுங்கள். ஒருவேளை அவர்கள் பணம் கொடுக்க வராவிட்டால் கூட, அவர்களது அலுவலகத்துக்கு சென்று, ‘உங்களுக்காக காத்திருந்தோம், நீங்கள் வரவில்லை’ என்று கூறி, பணத்தை கேட்டு வாங்குங்கள்.

கடந்த 65 ஆண்டுகளாக, அவர்கள் நம்மை ஏமாற்றி வந்தார்கள். இந்த தடவை அவர்களை நாம் முட்டாள் ஆக்குவோம்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார உரையில் நான் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் அவர் கைவிட்டு விட்டார். என்னை நக்சலைட் என்றும், அடிக்கடி தர்ணாவில் ஈடுபடுபவர் என்றும் விமர்சிப்பதற்கே பாதி நேரத்தை அவர் செலவழித்து விட்டார். இத்தகைய அரசியல் நல்லது அல்ல. பிரச்சினை அடிப்படையில்தான் அரசியல் செய்ய வேண்டும்.

பா.ஜனதா, ‘வளர்ச்சி, வளர்ச்சி’ என்று பேசி வந்தது. ஆனால், வளர்ச்சியை கைவிட்டுவிட்டு, மீள் மத மாற்றத்தில் ஈடுபட்டு வருகிறது.

மின் கட்டணத்தை எப்படி குறைப்பது என்று பா.ஜனதாவுக்கு தெரியும். ஆனால், குறைக்க மாட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்கும், முன்னணி தொழில் அதிபர்களுக்கும் இடையே நெருக்கம் உள்ளது. ஆனால், நான் ஆட்சிக்கு வந்தால், மின் கட்டணத்தை குறைப்பேன். மின்சாதன உற்பத்தி நிறுவனங்களுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே தொடர்பு உள்ளது. இதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது.

டெல்லியில் குடிசைவாசிகளுக்கு வீடு கட்டித்தருவதாக சொல்லி, குடிசைகளை இடித்து விட்டனர். வீடு கிடைக்கும் வரை, 7 ஆண்டுகளாக, அம்மக்கள் பனியிலேயே வசிக்க வேண்டுமா?

நான் 49 நாட்களிலேயே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை பா.ஜனதா மற்றும் காங்கிரசார் விமர்சிக்கிறார்கள். அந்த இரு கட்சிகளும் சட்டசபையில் கூட்டணி அமைத்துக்கொண்டு, எந்த சட்டத்தையும் நிறைவேற்ற விடாததால்தான் நான் பதவி விலகினேன்.

என் தவறை நான் ஒப்புக்கொள்கிறேன். நான் பதவி விலக வேண்டுமா? வேண்டாமா? என்று மக்களிடம் சென்று கேட்டிருக்க வேண்டும்.

ஆம் ஆத்மிக்கு தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை தாருங்கள். லஞ்ச, ஊழலுக்கு முடிவு கட்டி, நல்லாட்சி தர எங்களால்தான் முடியும்.

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

இதற்கிடையே, இந்த பேச்சுக்காக, கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் கூறியதாவது:-

ஓட்டுக்கு பணம் வாங்குங்கள் என்று பேசுவது சட்ட விரோதம். மக்களுக்கு பணம் கொடுப்பது போன்றது. எனவே, மக்களை இழிவுபடுத்தியதற்காக, கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது தேர்தல் கமிஷனில் புகார் தெரிவிப்போம்.

மற்ற கட்சிகளை விட, ஆம் ஆத்மிதான், சுவரொட்டிகளிலும், ராட்சத விளம்பர பலகைகளிலும், பண்பலை வானொலி விளம்பரங்களிலும் முன்னால் நிற்கிறது. அக்கட்சி ஏராளமான பணத்தை செலவழித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

1996 தேர்தலில் திமுக, தமாகா கூட்டணிக்கு ஆதராவாக குரல் கொடுத்த ரஜினியும் " ஓட்டுக்கு பணம் கொடுக்க வருவார்கள் அவர்கள் கொடுக்கும் பணத்தை மறுக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் ஓட்டை திமுக கூட்டணிக்கு போட்டுவிடுங்கள்" என்று கூறியது சர்ச்சையை எழுப்பி நீதிமன்றம் வரை சென்று பிறகு 'அவர் கூறியது தவறு இல்லை' என்று நீதிமன்றம் கருத்து கூறியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment