சேனல் 4 தொலைக்காட்சியின் தமிழர் படுகொலை 19-ந்தேதி ஒளிபரப்பாகிறது. இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போது தமிழர்கள் மீது சிங்கள ராணுவத்தினரால் நடத்தப்பட்ட வெறியாட்டங்கள் மற்றும் மனித உரிமை அத்துமீறல்களை சேனல்-4 தொலைக்காட்சி வீடியோ ஆதாரத்துடன் தோலுரித்து காட்டியது. கடந்த வருடம் ஒரு வீடியோ காட்சியை ஒளிபரப்பியது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரபாகரனின் 12 வயது மகன் பாலசந்திரன் சுட்டு கொல்லப்பட்ட கொடூர காட்சியை ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கு இலங்கையின் கொலைக்களங்கள் தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் என்று வெளியிடப்பட்டுள்ளது. ஜெனீவாவில், இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தீர்மானம் மீது வருகிற 22-ந் தேதி வாக்கெடுப்பு நடக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட வீடியோவால் இலங்கைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பு சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட புதிய வீடியோவை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் திரையிடப்பட உள்ளது.
இந்த வீடியோ இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் அதாவது 19-ந்தேதி ஜெனீவாவில் திரையிடப்படலாம் என எதிர்பார்க்கப்பகிறது. சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவண படத்தில் இலங்கை மீதான சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் தவிர்க்க முடியாத அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது.
இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவை பலப்படுத்தும் வகையில் மேலும் 100 அதிகாரிகளை அமெரிக்கா களம் இறக்கியுள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு தேடும் நோக்கில் உறுப்பு நாடுகளின் ஆதரவை பெற முன்னாள் அதிபர் ஜிம்மி காட்டரை அமெரிக்கா ஏற்கனவே களமிறக்கியுள்ளது. அமெரிக்காவின் இந்த ராஜதந்திர நடவடிக்கைகள் இலங்கை அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தீவிரபிரச்சாரம் மற்றும் தீர்மானத்துக்கு ஆதரவு பெறும் அதன் நடவடிக்கை குறித்து விழிப்புடன் இருக்குமாறு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் ஜெனீவாவில் உள்ள இலங்கை தூதரகத்தை எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment