ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிரான போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்துள்ளது. வருகிற 22-ந்தேதி இதன் மீது ஒட்டெடுப்பு நடக்கிறது. இந்த தீர்மானம் நிறை வேற்றப்பட்டல் அந்நாடு தனிமைப்படுத்தப்பட்டு பொருளாதார தடை உள்பட பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும்.
தீர்மானத்தை வெற்றி பெறச்செய்வதில் அமெரிக்கா முனைப்புடன் உள்ளது. இதனால் இலங்கை அதிபர் ராஜபக்சே அதிர்ச்சி அடைந்துள்ளார். கொழும்பில் அவர் கூறியதாவது:-
இலங்கை போரில் வெளி நாட்டு ஆலோசனைகளையோ, வெளிநாட்டு ராணுவத்தையோ நாங்கள் ஒரு போதும் ஈடுபடுத்த வில்லை. எங்களது வீரமிக்க படையினரால் உள் நாட்டில் வகுக்கப்பட்ட ராணுவ தந்திரங்களின் படி இந்த போரை நடத்தி வெற்றி பெற்றோம்.
படையை எங்களது தளபதிகளே நெறிப்படுத்தினர். எனவே மனித உரிமைகளை பாதுகாக்கவும், புனரமைக்கவும் வெளிநாட்டு தலையீடுகளோ, அவர்களின் அறிவுறுத்தல்களோ அவசியம் இல்லை. எங்கள் நாட்டை எவ்வாறு நடத்த வேண்டும், எங்கள் பிரச்சினைகளை எப்படி தீர்க்க வேண்டும் என்று வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து நாங்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
எனவே அனைத்து இலங்கை மக்களும் அவர்கள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, என எந்தப்பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஜெனீவாவில் கொண்டு வரப்பட்டுள்ள ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக கிளர்ந்து எழ வேண்டும். எதிர்க்கட்சிகளும் அனைத்து இலங்கை மக்களும் சாதி, மதம், இனம், அரசியல் போன்றவற்றை மறந்து இப்பிரச்சினையை எதிர் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ராஜபக்சே கூறினார்.
ஐ.நா. சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்திருப்பதால் அமெரிக்காவை புறக்கணிக்க வேண்டும் என்று இலங்கை மந்திரி விமல்வீரவன்சா கூறினார். அமெரிக்காவால் அறிமுகம் செய்யப்பட்ட இணைய தளங்களான கூகுள், ஜி.மெயில் வசதிகள் உள்பட அனைத்து அமெரிக்க உற்பத்திகளையும் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மந்திரியின் கோரிக்கைக்கு இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி எம்.பி. லட்சுமண் கிரியெல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இலங்கையின் ஏற்றுமதியில் 75 சதவீதம் அமெரிக்க சந்தையை நோக்கியதாகவே உள்ளது. எனவே அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகள் துண்டிக்கப்படுமாயின் இலங்கையில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி காணும். என்றார்.
No comments:
Post a Comment