படிப்பதற்கு வயது ஓரு தடை இல்லை, ஆர்வம் இருந்தால் மட்டும் போதும் என்று சீர்காழியை சேர்ந்த சாலை பணியாளர் ஓருவர் நிரூபித்துள்ளார். இன்று அவர் தனது மகளுடன் பிளஸ்-2 தேர்வை எழுதினார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள வேட்டங்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 38). இவர் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகள் சுபஸ்ரீ தேவி (17), சீர்காழி சியாமளா பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். மாரிமுத்து சிறுவயதில் இருந்தே படிப்பில் உரிய கவனம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.
அதன் பிறகு ஆண்டுகள் செல்ல, செல்ல அவருக்கு படிப்பின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. இந்த வயதில் படித்தால் ஏளனமாக பார்ப்பார்களே என்று சிறிதும் கவலைபடாமல் ஆர்வத்துடன் இருந்து வந்தார். அதன் தொடர்ச்சியாக இந்தாண்டு பிளஸ்-2 தனித் தேர்வராக பங்கேற்க படித்து வந்தார். வரலாறு பாடப் பிரிவை எடுத்து ஆர்வமாக தினமும் கடினமாக உழைத்தார்.
மேலும் மகள் சுபஸ்ரீ தேவி, பிளஸ்- 2 பாடங்களை தனது தந்தை மாரிமுத்துவுக்கு மாலை நேரங்களில் சொல்லி கொடுத்து வந்தார். தேர்வு நாள் நெருங்க நெருங்க மகளுடன் சேர்ந்து மாரிமுத்துவும் ஆர்வத்துடன் பாடங்களை படித்தார்.
இன்று பிளஸ்-2 அரசு பொதுதேர்வு தொடங்கியது. இதனால் தேர்வை எழுத மகளுடன் மாரிமுத்து இன்று காலை புறப்பட்டார். வழியில் சீர்காழி ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் இருவரும் சாமி தரிசனம் செய்து விட்டு தேர்வை எழுத சென்றனர். மகள் சுபஸ்ரீதேவி சீர்காழி பள்ளியிலும், மாரிமுத்து மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் பள்ளியிலும் இன்று பிளஸ்-2 தேர்வை எழுதினர். இதுபற்றி மாரிமுத்து கூறியதாவது:-
படிப்பதற்கு வயது தடை கிடையாது. படிப்பை யாரும் பாதியில் விட்டு விட வேண்டாம். இன்றைய இளைஞர்கள் படித்தால் தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையமுடியும். நான் பதவி உயர்வுக்கோ, சம்பள உயர்வுக்கோ படிக்கவில்லை. கல்வி செல்வம் மட்டுமே வாழ்க்கையில் உண்மையான சொத்து ஆகும் என்றார். கடந்த 2010-ம் ஆண்டில் மகளுடன் மாரிமுத்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment