லண்டனைச் சேர்ந்த சேனல் 4 டிவி நிறுவனத்திடம் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த பரபரப்பான வீடியோவும் கிடைத்துள்ளதாக டெய்லி மெயில் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மிகக் கொடூரமான முறையில் பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்தரின் மிக மிக நெருக்கமான முறையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும், அதுதொடர்பான வீடியோ காட்சியை புதன்கிழமையன்று (இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை) ஒளிபரப்பப் போவதாக சானல் 4 நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அந்த வீடியோ காட்சியில் பிரபாகரன் குறித்த பரபரப்புக் காட்சியும் இடம் பெற்றிருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.
Sri Lanka’s Killing Fields என்ற பெயரில் ஒரு ஆண்டுக்கு முன்பு, இலங்கையில் நடந்த ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள், படுகொலைகள் குறித்த ஆவணப் படத்தை சேனல் 4 ஒளிபரப்பி உலகையே அதிர வைத்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக Sri Lanka’s Killing Fields: War Crimes Unpunished என்ற பெயரில் புதிய ஆவணப்படத்தை அது தயாரித்துள்ளது.
இதில்தான் பாலச்சந்திரன் படுகொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது. அதிலேயே பிரபாகரன் குறித்த காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாகவும் தற்போது தகவல்கள் கூறுகின்றன.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடக் கூடிய இந்த புதிய வீடியோவில், உள்ள காட்சிகள் குறித்து இந்த வீடியோ காட்சிகளின் நம்பகத்தன்மையைப் பரிசோதித்து இவை உண்மைதான் என்று தெரிவித்துள்ள தடயவியல் நிபுணர் பேராசிரியர் டெரிக் பெளன்டர் கூறுகையில், சேனல் 4 நிறுவனத்திற்கு பாலச்சந்திரன் படுகொலைச் சம்பவம் தவிர்த்து அவனது தந்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த ஒரு படமும் கிடைத்தது.
அதில் பிரபாகரனின் தலையில் மிக பலத்த காயம் காணப்பட்டது. அவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பதாக உணர்கிறோம். இந்த வீடியோ காட்சி அதிகாரப்பூர்வமானதல்ல என்றும் நாங்கள் உணர்கிறோம்.
பிரபாகரனும், பாலச்சந்திரன் பாணியில் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதாக உணர்கிறோம். அவரது தலையில் பாய்ந்துள்ள குண்டுக் காயத்தைப் பார்க்கும்போது மிக சக்தி வாய்ந்த துப்பாக்கியால் அவர் சுடப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு ஆயுதப் போரின்போது ஒருவரை ஒரே ஒரு துப்பாக்கிச் சூட்டில் கொல்வது என்பது இயலாத காரியம். அது சாத்தியமும் அல்ல. ஆனால் பிரபாகரன் கொல்லப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது அவரை உயிருடன் பிடித்துப் பின்னர் கொலை செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம். மேலும் அசையாத நிலையில் ஒருவரை சுடும்போது எப்படிப்பட்ட குண்டுக் காயம் ஏற்படுமோ அதே போலத்தான் இந்த குண்டுக் காயமும் தெரிகிறது. எனவே பிரபாகரனையும் கூட கட்டி வைத்து சுட்டுக் கொன்றிருக்கலாம்.
இந்த வீடியோ காட்சிகளில் கொல்லப்பட்டுள்ள பலரும் கண்களை மூடியும், கைகள் கட்டப்பட்ட நிலையிலும், ஆடைகளின்றியும் காணப்படுகின்றனர். இதை வைத்துப் பார்க்கும்போது பிடிபட்ட அத்தனை தமிழர்களையும் திட்டமிட்டு படுகொலை செய்திருப்பதாக தெரிகிறது. நிச்சயம் அரசின் உயர்மட்டத்தின் அனுமதி இல்லாமல் இதைச் செய்திருக்க முடியாது என்பது எங்களின் கருத்தாகும் என்றார்.
ஈழப் போர் முடிந்த ஓரிரு நாட்களில் இதுதான் பிரபாகரன் பிணம் என்று கூறி ஒரு வீடியோக் காட்சியையும், புகைப்படங்களையும் இலங்கை ராணுவம் வெளியிட்டது. நந்திக் கடல் பகுதியிலிருந்து பிரபாகரன் உடல் மீட்கப்பட்டதாகவும் அது கூறியது. அந்தப் படத்தில் பிரபாகரன் என்று கூறப்பட்டவரின் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் இருந்தது. மேலும், அந்தப் படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன.
முதலில் சீருடை அணிந்த நிலையில் பிரபாகரன் உடல் என்று காட்டினர். பின்னர் உடைகள் இல்லாமல் ஒரு உடலைக் காட்டினர். பிறகு சேறு படிந்த நிலையில் ஒரு உடலைக் காட்டினர். மேலும் பிரபாகரன் மரணச் சான்றிதழையும் இதுவரை இலங்கை அரசு இந்தியாவுக்கு தரவில்லை. இதனால் பிரபாகரன் உண்மையில் உயிரிழந்து விட்டாரா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் எங்குமே இல்லை. இந்த நிலையில் சேனல் 4 பட வீடியோக் காட்சிகள் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்பது அதைப் பார்த்த பிறகுதான் கூற முடியும்.
இந்த ஆவணப்படத்தை தயாரித்தவரான ஜான் ஸ்னோ கூறுகையில், புதிய ஆவணப் படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் அனைத்தையும் நாங்கள் தீவிர தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவை அனைத்தும் உண்மையானவை, திரிக்கப்பட்டவை அல்ல என்பது தெரிய வந்தது.
இந்த மிகப் பெரிய போர்க்குற்றச் செயலில் இலங்கை அரசும், ராணுவமும் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த செயல்களுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே, அவரது தம்பி கோத்தபயா ராஜபக்சே, அப்போது ராணுவத் தளபதியாக இருந்த பொன்சேக ஆகியோர்தான் நேரடிப் பொறுப்பாவார்கள். சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை முற்றிலும் மீறும் வகையில் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
இந்த படுகொலைகளை நடத்திய ராணுவத்தினர் அத்தனை பேருமே மிகப் பயங்கர கொலைக் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள். ராணுவ அதிகாரிகள் முதல் அதிபர் வரை, அவரது தம்பிவரை அனைவருமே இதுவரை விசாரிக்கப்படாமல் உள்ளது வியப்பளிக்கிறது.
ஒரு பத்திரிக்கையாளராக நடந்த உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டியது எங்களது கடமை. இனி ஐ.நா சபையும், சர்வதேச சமுதாயமும்தான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதுதான் பரிதாபமாக உயிரிழந்து போன ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் மரணத்திற்கு நியாயமானதாக அமையும்.
நாம் தற்போது சிரியாவைப் பற்றி அதிகம் பேசுகிறோம், கவலைப்படுகிறோம். எனவே இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்தும் நாம் கண்டிப்பாக கவலைப்பட்டாக வேண்டும். அது முக்கியமானது என்றார்.
இந்த வீடியோ குறித்து ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆசியா பிராந்தியத்துக்கான இயக்குநர் சாம் ஜாப்ரி கூறுகையில், இலங்கை ராணுவத்தின் உயர்ந்தபட்ச தலைவர் அதிபர் ராஜபக்சேதான். ராணுவத்தின் தலைமை கமாண்டரும் அவர்தான். அதேபோல ஈழப் போரின்போது ராணுவ உத்திகளை தான்தான் வகுத்து செயல்படுத்தியதாக அவரது சகோதரர் கோத்தபயா ராஜபக்சேவும் பலமுறை பெருமை பொங்கக் கூறியுள்ளார்.
எனவே நடந்த சம்பவங்கள் குறித்து குறிப்பாக பாலச்சந்திரன், பிரபாகரன் குறித்து இவர்கள் இருவரும் நிச்சயம் விசாரிக்கப்பட்டாக வேண்டும். ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் மிகப் பெரிய அளவில் போர்க்குற்றம் நடந்தது என்பதில் சந்தேகமே இல்லை. மிகக் குறுகிய காலகட்டத்தில் மிகப் பெரிய அளவிலான மனிதப்படுகொலைகள் நடந்துள்ளன என்றார்.
ஸ்னோ தொடர்ந்து கூறுகையில், ஐ.நா. வின் பாதுகாக்கப்பட்ட ரகசிய அறிக்கையில் சில முக்கியத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதாவது பாதுகாப்பு வளையப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சமடைந்த அப்பாவி பொதுமக்களை வேண்டும் என்றே திட்டமிட்டு குண்டு வீசிப் படுகொலை செய்தனர். இது அரசுக்குத் தெரியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல பாதுகாப்பு வளையப் பகுதியில் தஞ்சமடைந்த மக்கள் குறித்த உண்மையான எண்ணிக்கையை இலங்கை அரசு மறைப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட தகவலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை பட்டினி போட்டுக் கொல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் குறி வைத்துக் கொல்லப்பட்டதாக ஐ.நா. நிபுணர் குழுவும் தெரிவித்துள்ளது. எனவே இதுகுறித்தெல்லாம் விசாரிக்கப்பட்டாக வேண்டும் என்றார்.
தமிழா இவ்வளவு கொடூரமான செய்திகள் வந்தும் கூட அரசியல் இலாபத்திற்காக பிரிந்து நிற்கிறாயே!இறந்த பின்னரும் மிருகத் தனமாக நிர்வாணப் படுத்தி கொடிய குற்றம் புரிந்தவனுக்கு வக்காலத்து வாங்குவது எந்த அள்வில் நியாயம்? ஒன்றுபடு.நம் உடன் பிறப்புக்கள் கண்ட கனவை ஈழக் கனவை நனவாக்க ஒன்றுபடு.இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்ட அங்கிருக்கும் மக்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் நாம் ஒன்று பட்டு செயல்பட வேண்டாமா?
ReplyDeleteதலப்பாகட்டு பிரியாணியும் குவாட்டரும் கொடுப்பீங்களா..? ஆதரவு குரல் கொடுக்கிறோம்....
Delete